Golden Toilet: ``101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' - ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்...
ஏழை முதியவர் ரூ.1.14 கோடி; பந்தல் தொழிலாளி ரூ.5 கோடி வரி பாக்கி - அதிர வைத்த GST நோட்டீஸ்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திருமாஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் ராமமூர்த்தியின் பெயரில் ரூ.5 கோடி ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வந்திருக்கிறது. வரும் 29-ம் தேதி, நேரில் ஆஜராகவும் வணிக வரிகள் துறை அதிகாரிகள் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இது பற்றி விசாரித்தபோது, ``ராமமூர்த்தியின் `பான் கார்டு’, `ஆதார் கார்டு’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களைக் கொண்டுதான் சென்னையில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு, வரி ஏய்ப்பு மோசடியில் மர்மநபர்கள் ஈடுபட்டிருப்பதாக’’ தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, தனது பெயரிலான ஜி.எஸ்.டி மோசடியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவுப் போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார் ராமமூர்த்தி.

இதேபோல், ஆம்பூர் மளிகைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் வேலாயுதம். பென்ஷன் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் வேலாயுதத்தின் பெயரிலும் ரூ.1.14 கோடி ஜி.எஸ்.டி மோசடி நடைபெற்றிருக்கிறது. இதனால், பென்ஷன் பணமும் கடந்த சில மாதங்களாக அவருக்குக் கிடைக்கவில்லை. வங்கிக்குச் சென்று அவர் விசாரித்தபோது, ஜி.எஸ்.டி வரி பாக்கி நிலுவையில் இருப்பதால், பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதனால், முதியவர் வேலாயுதமும் செய்வதறியாமல் பரிதவித்து வருகிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டுப் பகுதிகளைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளர்களை `ஜி.எஸ்.டி மோசடி’யில் சிக்கவைத்து, சிலர் கோடிகளில் கொழித்துக்கொண்டிருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே புகார்கள் குவிந்து வருகின்றன.
பொதுவாக விவரமறியாத ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து `புதிது புதிதாகத் திட்டங்கள் வந்திருக்கின்றன. அவற்றை உங்களுக்குப் பெற்றுத் தருகிறோம்’ என்று ஆசைகாட்டி, அவர்களிடமிருந்து `பான் கார்டு’, `ஆதார் கார்டு’, `வங்கிக் கணக்குப் புத்தகம்’ உள்ளிட்ட அடையாள ஆவணங்களை நகலெடுத்து வாங்குகின்றனர். பிறகு அவற்றைத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என அவர்களது செல்போன்களுக்கு வரும் ஓ.டி.பி எண்களைக் கேட்டு வாங்கிச் சென்று, அவற்றை மோசடித் தொழில் நிறுவனங்கள் நடத்துவோரிடம் விற்றுவிடுகின்றனர்.

இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக ஜி.எஸ்.டி எண் பெற்று, ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் முறைகேடு செய்கின்றனர். இறுதியில், செலுத்தவேண்டிய ஜி.எஸ்.டி வரி தொடர்பான நோட்டீஸ், வீட்டுக்கு வரும்போதுதான், தங்கள் பெயரில் இப்படியொரு மோசடி நடந்திருப்பதே அந்த அப்பாவி ஏழைகளுக்குத் தெரியவருகிறது.
மோசடிகள் குறித்தான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதிலும், ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ``கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துவிட்டு போலிகள் ஓட்டம் எடுத்த பிறகே ஆவணங்களின் அடிப்படையில் அப்பாவிகள்மீது அதிகாரத்தை ஏவுகிறது ஜி.எஸ்.டி விசாரணைப் பிரிவு. இறுதியாக குற்றம் செய்யாத அப்பாவிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களும் தேவையில்லாமல் யாரிடமும் ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களைப் பகிர வேண்டாம்” என்கிறார்கள் விவரப் புள்ளிகள்.

















