Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவ...
சபரிமலை: மண்டல பூஜை; 18 மணி நேரம் நடை திறந்திருக்கும் - தினமும் 90,000 பக்தர்களுக்கு அனுமதி!
கார்த்திகை மாதம் 1-ம் தேதி பிறந்ததை ஒட்டி, இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும் மண்டலகால பூஜைகளுகாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதை முன்னிட்டு சபரிமலை கோயில் திருநடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41-ம் நாளான டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதுவரை தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பழைய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கருவறை நடைதிறந்து விளக்கேற்றினார். பின்னர் பதினெட்டாம் படிவழியாக இறங்கி ஆழிக்குண்டத்தில் நெருப்பு ஏற்றிவைத்தார். மாளிகப்புறம் சன்னதி நடையை பழைய மேல்சாந்தி வாசுநம்பூதிரி திறந்தார்.

சபரிமலை புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, மாளிகப்புறம் புதிய மேல்சாந்தி மனு நம்பூதிரி ஆகியோரை பழைய மேல்சாந்திகள் வரவேற்று கைகளை பிடித்து சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். புதிய மேல்சாந்திகள் இருமுடிகட்டி சன்னிதானம் வந்த நிலையில் அவர்கள் மீது புனித நீர் ஊற்றி சுத்தி செய்து கருவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சபரிமலை புதிய மேல்சாந்தியை ஐயப்ப சுவாமி அருகே அமர வைத்து பழைய மேல்சாந்தி மூலமந்திரம் உபதேசித்தார். புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடையை திறந்து பூஜைகளை தொடங்கினார்.

தினமும் அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 1 மணிக்கு உச்சபூஜையுடன் நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சார்த்தப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். அந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நடை சார்த்தப்பட்டிருக்கும் சமயத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படிவழியாக அனுமதிக்கப்படுகின்றனர். நடை திறக்கப்பட்ட பிறகு அவர்கள் வடக்குநடை வழியாக ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துகொள்ளலாம்.

தினமும் 90,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்ககளுக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் பம்பா, நிலக்கல், வண்டிப்பெரியார் சத்திரம், செங்கனூர் ஆகிய 4 இடங்களில் நேரில் சென்று ஸ்பாட் புக்கிங் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டிசம்பர் 3-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. டிசம்பர் 5-ம் தேதியும் முழுமையாக முன்பதிவு முடிந்துவிட்டது.




















