Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவான தகவல்!
நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகளின் சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காலையில் தீர்ப்பு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
``ஜனநாயகன் படத்தை கடந்த டிசம்பர் 22-ந்தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் வெளியிடலாம். அதாவது, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவே்டும் என்று கூறி யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தது.

அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறுஆய்வு செய்யவேண்டும் என்று கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், டிசம்பர் 22-ந்தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், இந்த முடிவை தணிக்கை வாரிய தலைவர் எடுத்துள்ளார். தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்வதற்கு முன்பு இதுபோன்ற முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பரிந்துரை செய்த பின்னர், இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும்."
இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார்.
இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஐகோர்ட்டில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அதாவது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிப்பதாக கூறினர்.
இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஆன்லைன் மூலம் டெல்லியில் இருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசனும் ஆஜராகி, ‘‘படத்தை மறுஆய்வு குழு பரிந்துரையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. 7-ந்தேதி புகார் நகல் தாக்கல் செய்தோம். 9-ந்தேதியான நேற்று வழக்கின் தீர்ப்பை நீதிபதி அவசர கதியில் பிறப்பித்து விட்டார். தணிக்கை வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அவகாசம் வழங்கவில்லை. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள், பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் காட்சிகள் உள்ளது என்று புகார் வந்ததால், படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வாறு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது.

இதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர வில்லை. தணிக்கை சான்றிதழ் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி உத்தரவிட்டது சரியில்லை. எனவே, அவரது உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்’’ என்று வாதிட்டனர்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘தனி நீதிபதி முழுமையாக விசாரித்துதான் தீர்ப்பு அளித்துள்ளார். படத்தை பார்த்த குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மறுஆய்வு குழுவுக்கு இதுபோல பரிந்துரை செய்ய முடியாது. இது புதுவிதமாக நடவடிக்கையாக உள்ளது. படத்தை 9-ந்தேதி (நேற்று) வெளியிட திட்டமிட்டு, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட செயலால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை’’ என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், ‘‘தணிக்கை சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அப்படியிருக்கும்போது, தணிக்கை சான்றிதழ கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே படத்தை வெளியிடும் நாளை எப்படி முடிவு செய்தீர்கள்? இவ்வாறு முடிவு செய்து, நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்காமல் என்ன அவசரம் இந்த வழக்கில் உள்ளது?" என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


















