நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுதின விழா | Photo Album
டெல்லி கார் வெடிப்பு: ``படித்தவர்களையும் தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை?" - பா. சிதம்பரம் கேள்வி
ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில், ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில்தான் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது?
இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், நான் இரண்டு வகையான தீவிரவாதிகள் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறேன். வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள்.
ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிய விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நான் இதைத் தெரிவித்தேன்.
உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள் என்ற எனது கருத்தைக் குறிப்பிட்டதற்காக நான் கேலி செய்யப்பட்டு, இணையத்தில் வசைபாடப்பட்டேன்.
எனினும், அரசாங்கம் இதைப் பற்றி மிகவும் மௌனம் காத்தது என்று நான் சொல்லியாக வேண்டும்.
ஏனெனில், உள்நாட்டில் உருவான தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.
இந்தப் பதிவின் நோக்கம், இந்தியக் குடிமக்களை படித்தவர்களையும் கூட தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்னென்ன என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



















