``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" - சீனாவை எச்சரித்...
'தலைமுறைகளின் கனவு வெற்றி!' - உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மகுடம் சூடிய வீராங்கனைகள்!
இந்திய கிரிக்கெட் இதுவரை ஆண் கிரிக்கெட்டர்களால் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. கபில்தேவும், சச்சினும், தோனியும் கோலியும்தான் விளையாட்டை விரும்பும் இளைஞர்களின் ஆஸ்தானமாக மதிக்கப்பட்டார்கள்.

காரணம், அவர்கள்தான் இந்திய கிரிக்கெட்டுக்கு அத்தனை வெற்றிகளையும் குவித்து கொடுத்தார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் பெண் வீராங்கனைகளின் பெயரையும் இணைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்படி 2011 இல் வான்கடேவின் தெருக்கள் திருவிழா கோலமாகி இந்தியாவே கொண்டாடும் ஒரு உலகக்கோப்பை கிடைத்ததோ அதைபோல நவி மும்பையின் தெருக்கள் கொண்டாட்டத்தில் திளைக்க, இதோ தங்களின் முதல் உலகக்கோப்பையை வென்று வரலாற்றை படைத்திருக்கிறார்கள் இந்திய மகளிரணியினர். கபில்தேவ், தோனி இந்த வரிசையில் தன்னுடைய பெயரையும் பதித்து நிற்கிறார் ஹர்மன்ப்ரீத் கவுர்.
இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டிருந்தது. ஒரு உலகக்கோப்பையில் அதுவும் நாக் அவுட்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது ஆபத்தான விஷயம். இந்தியாவே பல முறை அடி வாங்கியிருக்கிறது. ஆனால், இந்த முறை காற்று இந்தியா பக்கமாக வீசியது. ஜெமிமா தன் வாழ்நாளுக்கும் சொல்லிக்கும் அளவுக்கான ஒரு இன்னிங்ஸை ஆடினார். தோனியின் 91* என்பது எப்படி மறக்கமுடியாத எண்ணாக மனதில் நிற்கிறதோ அதேமாதிரி ஜெமிமாவின் அந்த 127* என்கிற எண்ணையும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

அசாத்தியமான வெற்றி அது. இந்த வெற்றிதான் இந்த உலகக்கோப்பையின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தது. அத்தனை பேரையும் இறுதிப்போட்டியை நோக்கி எதிர்பார்க்க வைத்தது. யாரிடம் கேட்டாலும் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதே மிகப்பெரிய விஷயம் என்கின்றனர். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டின் பரிணாமத்தை பார்த்தவர்களுக்கு இந்தியா ஆஸ்திரேலியாவை விட பல பலமான சிக்கல்களையும் ஆபத்துகளையும் தாண்டியிருக்கிறது என்பதை அறிய முடியும்.
இன்றைக்கும் உலகளவிலும் சரி இந்தியளவிலும் சரி ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையாக பெண்கள் கிரிக்கெட் மதிக்கப்படுவதில்லை. ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வெளிச்சம் பெண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைப்பதே இல்லை. இதோ இந்த உலகக்கோப்பையையே எடுத்துக் கொள்ளுங்களேன். கிரிக்கெட்டை மையமாக கொண்ட எந்த பெரிய நகரத்திலும் எந்த பெரிய மைதானத்திலும் இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை. இரண்டாம் கட்ட மைதானங்களில் மட்டுமே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. காரணம், இன்னும் நான்கு மாதங்களில் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை நடக்கப்போகிறது. பிசிசிஐக்கு அந்த உலகக்கோப்பைதான் முக்கியம். அதற்காக அத்தனை மைதானங்களையும் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது இல்லை.

கடைசியாக 2013 இல் இந்தியா ஓடிஐ உலகக்கோப்பையை நடத்தியிருந்தது. தொடர் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்புதான் போட்டி அட்டவணையையும் மைதானங்களையும் இறுதி செய்தார்கள். ரஞ்சியில் மும்பை அணி வான்கடேவில் தங்களின் போட்டிகளை ஆட விரும்புகிறது என்பதற்காக பெண்கள் உலகக்கோப்பைக்கு அந்த மைதானத்தை கொடுக்காமல் பார்த்துக் கொண்டது பிசிசிஐ. இப்படி எப்போதுமே ஆண்கள் கிரிக்கெட்டுக்கு பல படிகள் கீழான நிலையில்தான் பெண்கள் கிரிக்கெட்டை வைத்திருப்பார்கள்.
பெண்கள் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும்தான் மாறி மாறி வென்றிருக்கின்றன. காரணம், அந்த அணியினர் அதிகமான போட்டிகளில் ஆடுவார்கள். எல்லா பார்மட்டிலும் கவனம் செலுத்துவார்கள். உள்ளூர் கிரிக்கெட்டின் தரமும் சிறப்பாக இருக்கும். ஆனால், இங்கே அதற்கெல்லாம் இடம் கிடையாது. அந்த 2013 உலகக்கோப்பை இருக்கிறதல்லவா? அதற்கு முன்பான இரண்டு மாதங்களில் இந்திய அணி எந்தப் போட்டியிலும் ஆடியிருக்காது. அதேமாதிரி, கொரோனா காலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியாவின் ஆண் கிரிக்கெட்டர்கள் அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு கிரிக்கெட் ஆடாமல் இருந்திருப்பார்கள். ஆனால், இந்திய பெண் கிரிக்கெட்டர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு கிரிக்கெட் ஆடாமல் இருந்திருந்தார்கள். ஆண்களுக்கான போட்டிகளை நடத்த முனைப்பு காட்டிய பெண்களுக்கான போட்டிகள் நடக்கும் போது நடக்கட்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள்.

வுமன்ஸ் ப்ரீமியர் லீகையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிய அமன்ஜோத் கவுர், ஸ்ரீசரணி போன்றோர் வுமன்ஸ் ப்ரீமியர் லீக் மூலம் வந்தவர்கள் என பிசிசிஐ பெருமைப்பட்டுக் கொள்ளும். ஆனால், ஐ.பி.எல் யைப் பார்த்து தங்கள் நாடுகளில் லீக் தொடர்களை தொடங்கிய ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இந்தியாவுக்கு முன்பாகவே பெண்களுக்கான லீகை தொடங்கிவிட்டன. உலகின் பணக்கார ஸ்திரமான போர்ட் என பெருமைப் பேசும் பிசிசிஐ மிகத் தாமதமாகத்தான் பெண்களுக்கென தனி லீகை தொடங்கியது.
2005 வரைக்கும் Women's Cricket Association of India எனும் அமைப்பின் கீழ்தான் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் இயங்கி வந்தது. அதன்பிறகுதான் பிசிசிஐயின் கீழ் இந்திய பெண்கள் அணி கொண்டு வரப்பட்டது. டிராவிட்டும் மிதாலி ராஜூம் ஒன்றாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்கள். அப்போது டிராவிட் 'இந்திய அணிக்கு ஆட தொடங்கிய பிறகு இரயிலில் பயணித்ததே இல்லை...' என அவர் கூறியிருப்பார்.

அடுத்ததாக மிதாலி ராஜ் பேசுகையில், 'டிராவிட் இரயில் சென்றதே இல்லை என்றார். ஆனால், நான் இந்திய அணிக்கு ஆடிக்கொண்டிருந்த போதும் இரயிலில் பயணித்திருக்கிறேன். அதுவும் ஹைதராபாத்திலிருந்து டெல்லி வரைக்கும் முன்பதிவில்லாத பெட்டியில் என்னுடைய கிட்களோடு பயணித்திருக்கிறேன்.' எனக் கூறுவார். அதேமாதிரி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா கூறுகையில், '2005 உலகக்கோப்பையில் நாங்கள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வரை எங்களுக்கு Non AC அறைகளைத்தான் தங்குவதற்கு புக் செய்தனர்.' என்கிறார். 1983 உலகக்கோப்பையை ஆண்கள் அணி வென்ற பிறகே இந்திய அணி ஸ்திரமடைய தொடங்கிவிட்டது. கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரமாகிவிட்டார்கள். அதிகம் சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டுக்கு அவர்களுக்கு கிடைத்ததில் 20-30% கிடைப்பதற்கே நீண்ட காலம் ஆகிவிட்டது.
வெளிநாட்டு பயணங்களின் போது தங்குவதற்கு இடமில்லாமல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வீடுகளிலெல்லாம் தங்கி கிரிக்கெட் ஆடியிருக்கின்றனர். ஒரே பேட்டை பல வீராங்கனைகளும் பகிர்ந்து பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் ஓடி களைத்து கொடுத்த பேட்டனை வாங்கிக் கொண்டுதான் ஹர்மனும் ஸ்மிருதியும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பிசிசிஐயின் கீழ் வந்தவுடன் இந்த நிலையெல்லாம் கொஞ்சம் மாறியது. ஆனால், அவர்களும் Cost Cutting என்ற பெயரில் பெண்களுக்கு குறைவான போட்டிகளையே நடத்தினர்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஆண் கிரிக்கெட்டர்களுக்கு இணையான போட்டி ஊதியத்தை பெண் கிரிக்கெட்டர்களுக்கும் கொடுப்பதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால், இப்போதும் வருடாந்திர ஒப்பந்த ஊதியத்தில் ஆண் கிரிக்கெட்டர்களுக்கும் பெண் கிரிக்கெட்டர்களுக்கும் பாரதூரம் இருக்கிறது என்பது வேறு கதை. இத்தனையையும் தாண்டிதான் அவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த கோணத்தை மனதில் வைக்காமலேயே அவர்கள் தோற்கும் போது, 'மீண்டும் அடுப்பறைக்கே செல்லுங்கள்!' எனும் தொனியில் கடுமையாக வன்மத்தை கொட்டும் ஒரு கூட்டம் இன்னமும் இருக்கவே செய்கிறது.
2020 ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி மெல்பர்னில் நடந்திருக்கும். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய அந்தப் போட்டிக்கு அரங்கம் முழுமையாக நிரம்பியிருக்கும். அப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 'ஆண்களின் கிரிக்கெட்டை போல பெண்கள் ஆடும் ஒரு போட்டியை காண மைதானம் முழுக்க ரசிகர்கள் நிரம்பியிருப்பார்கள் என நான் கற்பனை கூட செய்ததில்லை. என் வாழ்நாளில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு இணையாக பெண்கள் கிரிக்கெட்டும் மதிக்கப்படுவதை மட்டும் பார்த்துவிட வேண்டும். அதுதான் என்னுடைய மிகப்பெரிய ஆசை.' எனக் கூறியிருப்பார்.

இந்திய பெண்கள் அணியின் முதல் கேப்டனான சாந்தா ரங்கசாமி தொடங்கி அஞ்சும் சோப்ரா தொட்டு இப்போதைய ஹர்மன்ப்ரீத் வரைக்கும் எல்லாருடைய கனவுமே அதுதான். அந்த கனவை நோக்கிய பெரும் பாய்ச்சலின் அறுவடைதான் ஹர்மன்ப்ரீத் & கோ வென்றிருக்கும் இந்த உலகக்கோப்பை. மகுடம் சூடியிருக்கும் இந்திய வீராங்கனைகள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்!


















