`ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை' - மதுரை மாவட்ட நீதிமன்றம்
பாராமதி விமான நிலையம்: அடிக்கடி VIP-க்கள் வந்து சென்றாலும் முறையான விமான வழித்தட வசதி இல்லாத நிலை!
பாராமதி விமான நிலையத்தின் ஈடுதளம் அருகே நேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அதிக அளவில் வி.ஐ.பி.க்கள் வருவார்கள் என்பதால் விமான நிலையத்தை தற்போது விமானப்படை தனது கட்டுப்பாட்டில் எடுத்து இருக்கிறது.
பாராமதி விமான நிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்க போதிய வழித்தட வழிகாட்டி வசதி இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையத்தை விமான பயிற்சி நிறுவனம் ஒன்றுதான் பயன்படுத்தி வருகிறது.
அந்த பயிற்சி நிறுவனம் தான் rudimentary Air Traffic Control (ATC) எனப்படும் விமான போக்குவரத்து வழிகாடி சாதனத்தை நிறுவி இருக்கிறது. விமான பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர் அல்லது அங்கு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் ஒருவர்தான் விமானிக்கு ஓடுதளம் குறித்தும், விமான வழித்தடம் குறித்து தகவல் கொடுப்பார்.

விமானிக்கு உடனுக்குடன் தகவல்களை அனுப்புவதற்கு பிரத்யேக வானிலை வசதியோ அல்லது விமான வழித்தட வழிகாட்டி வசதிகளோ இல்லை என தெரிய வந்திருக்கிறது. பாராமதி விமான நிலையத்திற்கு அடிக்கடி வி.ஐ.பி.க்கள் வந்து சென்ற போதிலும் போதுமான வசதிகள் செய்யப்படாமல் இருக்கிறது.
அஜித் பவாரின் விமானம் அந்த வசதி இல்லாத காரணத்தால்தான் விபத்துக்குள்ளானது என்கிறார்கள். பொதுவாக விமான நிலையத்தில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வெளிச்சம் இருக்க வேண்டும். ஆனால் அஜித்பவாரின் விமானம் பாராமதிக்கு வந்த போது 3 கிலோமீட்டர் அளவுக்கு மட்டுமே வெளிச்சம் இருந்தது.
அஜித் பவாரின் விமானம் பாராமதிக்கு வந்து தரையிறங்க முயன்றபோது போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி விமானம் திரும்ப சென்றது. இரண்டாவது முறை தரையிறங்க வந்தபோதும் ஓடுதளத்தை பார்க்க முடியவில்லை என்று பைலட் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு ஓடு தளம் தெரிவதாக கூறி விமானத்தை தரையிறக்க பைலட்டிற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நொடிகளில் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விமானம் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்திற்குச் சொந்தமானது, மேலும் விமானப் பயிற்சிக்காக ரெட் பேர்ட் ஃப்ளையிங் ஸ்கூல் மற்றும் கார்வர் ஏவியேஷனுக்கு ஓடுதளம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது ஒரு "கட்டுப்பாடற்ற விமான நிலையம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விமான நிலையத்தில் ATC உள்ளிட்ட வழக்கமான விமான நிலைய உள்கட்டமைப்பு மற்றும் தரையிறங்கும் அமைப்பு அல்லது பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு ஏற்பாடுகள் போன்ற வசதிகள் இருக்காது.
ஓடு தளம் குறித்து உடனுக்குடன் விமானி அறைக்கு தகவல்களை அனுப்பும் வசதி இல்லாததால், விமானிகள் வெறும் கண்களால் பார்த்தே விமானத்தை இயக்க வேண்டியிருக்கிறது. இந்த விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்று பாராமதி விமான பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் ஒரு விமானி கூறினார்.
அஜித் பவார் மரணம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

















