``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
``மீன்பிடித்து படிக்கவைத்த காதலன்; வேலை கிடைத்ததும் கைகழுவிய காதலி'' - போலீஸ் வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜின் (35). இவர் முள்ளூர்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மரியதாஸ்–புஸ்பரதி ஆகியோரின் மகள் கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்தார். காதலியின் விருப்பப்படி கத்தார் நாட்டில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்ததன் மூலம் கிடைக்கும் சம்பளத்தில் கேத்ரின் பிளஸ்ஸியை ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்கவைத்துள்ளார் சுஜின். கல்லூரியில் படிக்க அவ்வப்போதுபணம் அனுப்பி வைத்துள்ளார்.
ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பு முடிந்த பிறகு கேத்ரின் பிளஸ்சி பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சுஜினிடம் கூறி பெங்களூருக்குச் சென்றார் கேத்ரின் பிளஸ்சி.
இதற்கிடையே இருவரும் ஒரு பெந்தே கோஸ்தே சபையில் வைத்து கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும், சுஜினிடம் கேத்ரின் பிளஸ்சி ஒரு கோரிக்கை வைத்தார்:
"அக்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதால், நான் திருமணம் செய்துகொண்ட விவகாரம் வெளியில் தெரிந்தால் அவளது திருமணத்தை பாதிக்கும். எனவே நாம் பழையபடி நமது வீடுகளில் தனித்தனியாக வசிக்கலாம்" என கேத்ரின் பிளஸ்சி கூறினார்.
இதையடுத்து இருவரும் திருமணம் ஆனதை மறைத்து, அவரவர் வீடுகளில் தனித்தனியாக வசித்துவந்தனர்.

இதற்கிடையே சுஜின் மீண்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்று உள்ளார். கேத்ரின் பிளஸ்ஸி பெங்களூருக்குச் சென்று தனியார் நிறுவனத்தில் பயிற்சியில் இணைந்தார்.
பெங்களூரில் வசிக்க ரூம் வாடகை உள்ளிட்ட பல செலவுகளுக்காக, பலமுறை ஜிபே மூலமும் வங்கி வழியாகவும் சுஜினிடம் பணம் பெற்று உள்ளார் கேத்ரின் பிளஸ்ஸி. இதற்கிடையே, கேத்ரின் பிளஸ்ஸியின் அக்கா திருமணம் முடிந்தது.
இனி தனது மனைவியுடன் சேர்ந்து வாழலாம் என்ற ஆசையில் சுஜின் கத்தார் நாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். ஏதோ காரணங்களைக் கூறி, சேர்ந்து வாழ கேத்ரின் பிளஸ்ஸி சம்மதிக்கவில்லை. மூன்றுமுறை கத்தார் நாட்டில் இருந்து வந்தபோதும் கேத்ரின் தன்னுடன் வாழ சம்மதிக்கவில்லை.
காதலியின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கண்ட சுஜின், அவரது நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தார். அதில், கேத்ரின் பிளஸ்ஸி பெங்களூரில் வேறு ஆண் நண்பருடன் பழகி வருவதும், பல இடங்களுக்கு சென்றுவருவதும் தெரியவந்துள்ளது. அதுசம்பந்தமான புகைப்படங்களும் சுஜினுக்கு கிடைத்துள்ளது.
இதனால் மனம் உடைந்த சுஜின், காதலிக்கு அனுப்பிய பணத்தின் ஆவணங்கள், இவர்கள் வாட்ஸ் அப்பில் சாட் செய்த ஸ்கிரீன் ஷாட்கள், பெந்தே கோஸ்தே சபையில் திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சிகள், திருமணம் செய்துகொண்ட புகைப்படம், மற்றும் கேத்ரின் பிளஸ்ஸி வேறு ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தன்னை திருமணம் செய்துகொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 12 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக கேத்ரின் பிளஸ்ஸி மீது குழித்துறை நீதிமன்றத்திலும் மோசடி வழக்கு தொடர்ந்தார் சுஜின். காதலி கேத்ரின் பிளஸ்ஸியை நம்பி வாழ்க்கையை இழந்ததாகவும், காதலியிடம் இருந்து பணத்தை மீட்டு தருவதோடு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுஜின் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குழித்துறை கோர்ட் உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் கேத்ரின் பிளஸ்ஸி மீது வழக்கு பதிவு செய்தனர். 7 ஆண்டுகளாக காதலித்த பெண் மீது காதலன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவமாக இது கூறப்படுகிறது.















