``கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது... அவர் அமர்ந்தே கோஷமிடட்டும்" - நாடாளுமன்றத்தில் ...
மும்பை: லிஃப்ட்டில் பலூன்களுடன் ஏறிய நபர்; நொடிப் பொழுதில் நடந்த அசம்பாவிதம்; இருவர் காயம்!
மும்பை, கோரேகாவ் பகுதியில் உள்ள அமோல் டவர் என்ற குடியிருப்பு கட்டடத்தில் இருக்கும் லிஃப்டில் பலூன் வெடித்து தீப்பிடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜ்குமார் என்பவர் சாக்குமூட்டையில் ஹீலியம் காஸ் நிரப்பப்பட்ட பலூன்களுடன் லிஃப்டில் ஏறினார். அவரைத் தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் ஹிமானி (21) என்ற பெண் ஏறினார். மேலும் ஒருவர் ஏறியதால் லிஃப்டில் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சாக்குமூட்டையில் இருந்த காஸ் நிரப்பப்பட்ட பலூன் சத்தத்துடன் வெடித்து, தீப்பிடித்தது. இதனால் மாணவியும், மற்றொரு நபரும் லிஃப்டில் இருந்து நிலைதடுமாறி வெளியில் ஓடினர். ஆனாலும் அவர்களுக்குக் கை, கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது.
பலூன் எடுத்து வந்த நபர் லிஃப்டில் கீழே விழுந்து கிடந்தார். அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இது குறித்து குடியிருப்பாளர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ''சம்பவம் நடந்த கட்டடத்தில் வசிக்கும் அர்பித் ஜெயின் என்பவர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட பலூன் ஆர்டர் செய்திருந்தார்.

அதனை எடுத்து வந்த நபரிடம் எப்படி அதனை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று பலூன் கடை உரிமையாளர் ஜெய்ஸ்வால் சொல்லவில்லை. எனவே ஜெய்ஸ்வால் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவனக்குறைவால் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் வெடித்தாலும் தீப்பிடிக்காது. ஆனால் ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருந்தால் தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பலூனில் எந்த மாதிரியான வாயு நிரப்பப்பட்டு இருந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்றார்.
மாணவி ஹிமானி உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஹிமானிக்கு சொந்த ஊர் சூரத் ஆகும். அவர் மும்பையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
















