'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ...
`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?
இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக் கதையாக வலம் வந்தது ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், தங்கச் சுத்திகரிப்பு, நகை ஏற்றுமதி என உலகளாவிய தங்க வர்த்தகத்தில் ஒரு மாபெரும் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்தியாவின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக, அதன் ஆண்டு வருமானம் பலரையும் வியக்க வைத்தது. ஆனால், இன்று அந்த வெற்றிக் கதை கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது.
ஆம், இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), ஜூன் 3 அன்று வெளியிட்ட ஒரு இடைக்கால உத்தரவில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தையும் அதன் தலைவர் ராஜேஷ் மேத்தாவையும் பங்குச் சந்தையில் இருந்து வர்த்தகம் செய்யத் தடை விதித்துள்ளது.
கடந்த ஐந்து நிதியாண்டுகளில், சுமார் ₹15.15 லட்சம் கோடி மதிப்பிலான வருவாயை தவறாகக் கணக்கு காட்டி, நிதி மோசடியில் ஈடுபட்டதாக செபி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, ஒட்டுமொத்த தொழில் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தத் தொகை பல சிறிய நாடுகளின் ஒட்டுமொத்த ஆண்டு பொருளாதார உற்பத்தியை விட அதிகம் என்பதுதான் இதில் தலையைச் சுற்ற வைக்கும் விஷயம்!
விசாரணை தொடங்கியது எப்படி?
இந்த பூதம் கிளம்பியது ஒரு பங்குதாரர் அளித்த புகாரில் இருந்துதான். மார்ச் 11, 2024 அன்று செபிக்கு வந்த அந்தப் புகாரில், நிறுவனத்தின் வர்த்தக வரவுகள் (trade receivables) இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக, நீண்டகாலமாக வசூலாகாத வரவுகள், பணம் வசூலிப்பதில் உள்ள சிக்கலையோ அல்லது கணக்கியல் முறைகேடுகளையோ சுட்டிக்காட்டும் ஒரு அபாய அறிகுறியாகும். இந்தப் புகாரைத் தொடர்ந்துதான் செபி தனது விரிவான விசாரணையைத் தொடங்கியது. தடயவியல் தணிக்கைக்காக BDO நிறுவனத்தை நியமித்து, நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களை அங்குலம் அங்குலமாக ஆராய உத்தரவிட்டது.
₹15.15 லட்சம் கோடி... கணக்கில் வராத மர்மம்!
செபியின் விசாரணையில் வெளிவந்த விஷயம்தான் இந்த வழக்கின் மையப்புள்ளி. 2021 முதல் 2025 நிதியாண்டுகள் வரை, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸின் ஒருங்கிணைந்த வருவாயில் சுமார் 97% முதல் 99% வரை அதன் வெளிநாட்டுத் துணை நிறுவனங்கள் மூலமே வந்துள்ளதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமானது, சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் கையகப்படுத்திய சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வால்காம்பி எஸ்.ஏ (Valcambi SA) என்ற தங்கச் சுத்திகரிப்பு நிறுவனம்.
ஆனால், தணிக்கையாளர்கள் வால்காம்பி மற்றும் பிற துணை நிறுவனங்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெரிய முரண்பாட்டைக் கண்டறிந்தனர். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் காட்டிய ஒருங்கிணைந்த வருவாய்க்கும், துணை நிறுவனங்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட வருவாய்க்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்தது.
இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ₹15.15 லட்சம் கோடி வருவாய் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாக செபி குற்றம்சாட்டுகிறது. இது உண்மையென நிரூபிக்கப்பட்டால், இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய வருவாய் மோசடிகளில் ஒன்றாக இது இடம்பிடிக்கும்.

விசாரணையில் ஒத்துழைக்காத மர்மம்
இந்த வழக்கில் இன்னொரு முக்கிய திருப்பம், விசாரணைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என செபி கூறியிருப்பதுதான். தடயவியல் தணிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர் பதிவுகள், விற்பனையாளர் விவரங்கள் மற்றும் முக்கியத் துணை நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்று செபி கூறியுள்ளது. முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பின்மை காரணமாக, தணிக்கையாளர்கள் முழுமையற்ற தகவல்களுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் செபி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சில அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள்
வருவாய் மோசடி குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, வேறு சில விவகாரங்களும் செபியின் சந்தேகப் பட்டியலில் சிக்கியுள்ளன.
ஆப்பிரிக்க சுரங்க முதலீடு: ஆப்பிரிக்காவில் உள்ள தங்கச் சுரங்கங்களில் ₹1,035 கோடி முதலீடு செய்ததாக நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், அந்த முதலீடுகளின் இருப்பு மற்றும் மதிப்பை நிரூபிக்க போதுமான ஆவணங்களை நிறுவனத்தால் வழங்க முடியவில்லை.
அஃப்ளூயன்ஸ் ஷேர்ஸ் புதிர்: அஃப்ளூயன்ஸ் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ₹11,487 கோடிக்கு விற்பனையும், ₹11,488 கோடிக்கு கொள்முதலும் செய்ததாக ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் கணக்கு காட்டியுள்ளது. ஆனால், விசாரணையின்போது அஃப்ளூயன்ஸ் நிறுவனமோ, "ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் எங்களுடைய வாடிக்கையாளரே இல்லை; அப்படி ஒரு ஒப்பந்தமே நடக்கவில்லை" என்று மறுத்துள்ளது.

தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றப்பட்ட நிதி: நிறுவனத்தின் பணம், அதன் தலைவர் ராஜேஷ் மேத்தாவின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, டெரிவேட்டிவ் வர்த்தகத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் செபி குற்றம்சாட்டியுள்ளது. சுமார் ₹7.4 கோடி பரிவர்த்தனைகள் இப்படி நடந்ததாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு வாரியத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும், இது தொடர்பான விவரங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து மறைக்கப்பட்டதாகவும் செபி கூறியுள்ளது.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் சொல்வது என்ன?
ஆனால் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது. "செபியின் உத்தரவு இடைக்காலமானதுதான். நாங்கள் காட்டியுள்ள வருவாய் கணக்குகள் அனைத்தும் சரியானவை. எந்தத் தவறும் நடக்கவில்லை. செபிக்கும் எங்களுக்கும் இடையே ஒருவித தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதாகத் தெரிகிறது. தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து விரைவில் குழப்பங்களுக்குத் தீர்வு காண்போம்," என்று நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடுவில் சிக்கிய முதலீட்டாளர்கள்
இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள்தான். இதில் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒருவரான பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி (LIC), ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸில் சுமார் 10.8% பங்குகளை வைத்துள்ளது. இந்த முறைகேடுகளால் பங்குதாரர்களுக்கு சுமார் ₹12,726 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என செபி மதிப்பிட்டுள்ளது.
"வருமானம், பிராண்ட் மதிப்பு போன்றவற்றை மட்டும் பார்த்து முதலீடு செய்வது போதாது. ஒரு நிறுவனத்தின் நிர்வாகத் திறன், வெளிப்படைத்தன்மை, தணிக்கையாளர் கருத்துகள் போன்றவற்றையும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த பாடம்," என்கிறார் விபவங்கள் அனுகுலகார பிரைவேட் லிமிடெட் நிறுவனர் சித்தார்த் மௌரியா.
கனரா வங்கியின் தனிப் போராட்டம்
செபி ஒருபுறம் நெருக்கடி கொடுக்க, மறுபுறம் வங்கிகளும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கனரா வங்கி, இந்நிறுவனத்திற்கு வழங்கிய சுமார் ₹509 கோடி கடனை, திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 'வாராக்கடன்' (stressed asset) என வகைப்படுத்தியுள்ளது. இந்த கடனை ஏலம் மூலம் விற்பனை செய்யவும் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இனி என்ன?
முதலீட்டாளர்கள் ஏற்கனவே தங்கள் தீர்ப்பை எழுதிவிட்டனர். செபியின் உத்தரவு வெளியானதும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்கு 5% சரிந்து லோயர் சர்க்யூட்டைத் தொட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், இந்தப் பங்கு தனது மதிப்பில் 80%-க்கும் அதிகமாக இழந்துள்ளது. இருப்பினும், செபியின் உத்தரவு இடைக்காலமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தரப்பு தங்கள் வாதங்களை முன்வைக்க இன்னும் வாய்ப்புள்ளது. இறுதித் தீர்ப்பு வர சில காலம் ஆகலாம். ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அபராதம், சந்தைத் தடை நீட்டிப்பு என கடுமையான விளைவுகளை நிறுவனம் சந்திக்க நேரிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்கு இந்திய கார்ப்பரேட் நிர்வாகத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
"சிறு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு மூலதனத்தின் பெரும்பகுதியை ஒரே நிறுவனத்தின் பங்குகளில் குவிப்பதைத் தவிர்க்க வேண்டும். எவ்வளவு பெரிய, மரியாதைக்குரிய நிறுவனமாக இருந்தாலும், முதலீடுகளைப் பரவலாக்குவதுதான் முதல் விதி. மூலதனத்தைப் பாதுகாப்பதே முதலீட்டின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்" என்று மேலும் எச்சரிக்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.!




















