Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்க...
விழுப்புரத்தில் சிறுத்தை வந்தது எப்படி? - விக்கிரவாண்டி டோல்கேட்டில் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி
விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு அருகே, இன்று அதிகாலை வராக நதியின் மேல் அமைந்திருக்கும் பாலத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதைப் பார்த்த வாகன ஓட்டிகள், விக்கிரவாண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து அங்கு விரைந்த போலீஸார், விழுப்புரம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு செய்த வனத்துறையினர், படுகாயங்களுடன் உயிரிழந்து கிடந்த சிறுத்தையின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வு சோதனைக்காக விழுப்புரம் வன விலங்கு மையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``உயிரிழந்த ஆண் சிறுத்தைக்கு மூன்று முதல் நான்கு வயது இருக்கலாம். சிறுத்தை சாலை ஓரத்தில் உயிரிழந்து கிடந்ததால், சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனாலும், இன்று மாலை நான்கு மணிக்கு நடைபெற இருக்கும் உடற்கூராய்வு சோதனைக்குப் பிறகுதான் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.
சிறுத்தையைப் பார்ப்பதற்காக வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கியதால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் போலீஸார் மூலம் சரி செய்யப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் சோலை திருமண நிலையம் அருகில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர்.
அதையடுத்து அங்கு ஆய்வு செய்த வனத்துறையினருக்கு, சிறுத்தை நடமாட்டத்துக்கான தடயங்கள் கிடைக்கவில்லை. அதையடுத்து கடந்த 2024-ல் விழுப்புரம் – வேட்டவலம் சாலையில் இருக்கும் வீரபாண்டி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.

அப்போதும் அவர்களுக்கு சிறுத்தை நடமாட்டத்துக்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. அப்போது, `விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், வீரபாண்டி, கடையம், பழைய கருவாட்சி, கல்வந்தல் தொடங்கி, வேட்டவலம் வரை மலைத்தொடரும் வனப்பகுதியும் இருக்கின்றன.
அங்கிருந்து வழிதவறி சிறுத்தை வந்திருக்கலாம் என்று தெரிவித்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் தெரிந்தால் 9962637936 என்ற செல்போன் எண்ணில் புகார் அளிக்குமாறும் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் இன்று சிறுத்தை மர்மமாக உயிரிழந்த சம்பவம், விழுப்புரம் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.


















