மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர்...
`40 வழக்குகளில் தொடர்பு; தேடப்படும் முகமுடி கொள்ளையர்கள்’ - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நால்வழிச்சாலையில் மேற்கு காவல் நிலைய போலீஸார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரினை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சாந்தகுமார், மதுரை மாவட்டம் நாகமலையைச் சேர்ந்த சிவகுமார் என்பது தெரிய வந்தது.

இருவரும் திருட்டு, கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட 40 –க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸாரிடம் பேசினோம்,
“முதுகுளத்தூரைச் சேர்ந்த சாந்தகுமார் தற்போது மதுரையில் குடியிருந்து வருகிறார். இவரது நண்பர்தான் சிவகுமார். விருதுநகர், நெல்லை, சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காரில் சென்று வீடுகளை நோட்டமிடும் இவர்கள், ஆட்கள் இல்லாதவீடுகளை குறிவைத்து இரவு நேரங்களில் சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் கொள்ளையடிக்கும் போது சி.சி.டி.வி கேமராக்களில் முகம் பதிவாகாமல் இருப்பதற்காக முகமுடி அணிந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். தடயவியல் சோதனையில் சிக்காமல் இருப்பதற்காக கையுறை அணிந்து கொள்கின்றனர். இவர்கள் இருவரையும் பல்வேறு காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர். தற்போது கோவில்பட்டியில் சிக்கிக் கொண்டனர்.

இருவரிடமிருந்தும் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார், கொள்ளைக்கு பயன்படுத்திய இரும்பு பொருட்கள், நகைகள், கையுறைகள், முகமுடிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை, பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் ஆட்களில்லாத வீடுகளுக்கு செல்லும் இவர்கள், அங்கு எதுவும் சிக்கவில்லை என்றால், ஆத்திரத்தில் அந்த வீட்டில் உள்ள டி.வி, பிரிட்ஜ், பீரோ உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு சென்று விடுவார்களாம். தங்களுக்கு எதுவும் சிக்காவிட்டாலும் வீட்டின் உரிமையாளருக்கு பொருள் சேதம் ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றனர்.















