தொல்காப்பியம் முற்றோதல்: `1602 நூற்பாக்களை மனப்பாடமாக ஓதி' 10-ம் வகுப்பு அரசு பள...
Delhi: ``செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதலே'' - உறுதி செய்த NIA
தேசிய புலனாய்வு முகமை (NIA) டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களைப் (IED) பயன்படுத்தி உமர் உல் நபி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.
அதிகாரிகள் கைது செய்த நபியின் நெருங்கிய கூட்டாளியின் மூலமாக இதனை உறுதி செய்துள்ளனர்.

NIA அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில், பாம்போர் ஒன்றியத்தில் உள்ள சம்பூரா கிராமத்தைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற நபரை கைது செய்தனர். இவர் நவம்பர் 10 அன்று 13 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாக்குதலை நடத்த நபியுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் பெயரிலேயே வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புல்வாமாவைச் சேர்ந்த உமர் உன் நபு ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் NIA பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருகிறது.
NIA Makes a Breakthrough in Red Fort Area Bombing Case with Arrest of Suicide Bomber’s Aide pic.twitter.com/ABt3na9tOo
— NIA India (@NIA_India) November 16, 2025
இந்த வெடிப்புடன் தொடர்புடைய விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேரை NIA ஞாயிறு அன்று (நவ. 16) விடுதலை செய்துள்ளனர். இவர்களை முக்கிய குற்றவாளியான நபியுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக விளக்கமளித்தது.
விடுவிக்கப்பட்ட டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோர் நூஹ் பகுதியில் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவர்கள் முன்பு நபியுடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அல் ஃபலா பல்கலைக்கழகத்துடனும் தொடர்பில் இருந்துள்ளனர். வெடி மருந்துக்கான ரசாயனங்கள் உர வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்டதா என்ற ரீதியிலும் NIA விசாரணை நடத்தியது.
இந்த வழக்குக்காக NIA, வெடிப்பில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளை விசாரித்துள்ளது. இதில் டெல்லி காவல்துறை, ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தரபிரதேச காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது.
இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அத்தனை பேரையும் கைது செய்யவும், பெரிய சதியை வெளிக்கொண்டு வரவும் பல மாநிலங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.














