செய்திகள் :

BB Tamil 9 Day 42: “விஜய்சேதுபதி மாதிரியே நடிப்பேன்"- கலகல திவாகர்; பம்மி நிற்கும் அடாவடி நபர்கள்

post image

திவாகர் வெளியேற்றப்பட்டார். இதற்காக தமிழக மக்கள் அதிகம் சந்தோஷமடைய முடியாது. “பிக் பாஸ்ல நிறைய நாள் என்னால் இருக்க முடியாது செல்லம்... வெளில நிறைய சூட்டிங் இருக்கு. தயாரிப்பாளர்கள் வெயிட்டிங்” என்று இண்டர்வியூக்களில் அவர் அளந்து விடக்கூடும். விஜய் டிவி அவரை தத்தெடுத்துக் கொண்டு குக் வித் கோமாளியில் கூட வரக்கூடும். 

ஆக.. நடிப்பு அரக்கனிடமிருந்து இப்போதைக்கு விமோசனமில்லை. 

வெளியேயும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் அதையேதான் செய்தார். கூடுதலாக பாருவின் கைப்பாவையாக சில அலப்பறைகள். அவருடைய பங்களிப்பால் ஷோவிற்கு உபயோகமோ, என்னமோ, பெரும்பாலான பார்வையாளர்களுக்கு எரிச்சல்தான் மிச்சம். 

BB Tamil 9 Day 42

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 42

“பிரச்சினையோட பின்விளைவுகளைப் பத்தி யோசிக்கறதே இல்ல. ‘எங்க பார்வையில்’ இப்படி..ன்னு சொல்றாங்க’ என்று அலுத்துக் கொண்டபடி வீட்டிற்குள் சென்றார் விசே. 

“வீட்ல 60 காமிராக்கள் இருக்கு. எல்லாத்துலயும் ரீல்ஸ் பண்ணிட்டேன்” என்று பெருமிதமாக சொன்னார் திவாகர். “பொதுவா.. காமிரால வர்ற சினிமாவைப் பார்த்துதான் குழந்தைகள் அலறும்.. ஆனா இங்க காமிராவே உங்களைப் பார்த்து அலறி முகத்தை திரும்பிக்குது.. அப்பவும் விட மாட்றீங்க” என்பதை சர்காஸமாக சொன்னார் விசே. 

அடுத்தது பாரு உணவை வீணாக்கிய மினி பஞ்சாயத்து. இதற்காக எப்போதோ கொட்டப்பட்ட சாம்பாரையும் கிச்சடியையும் அப்படியே பாதுகாத்து எடுத்து வந்திருந்தது பிக் பாஸ் டீம். குப்பைக் கவரை நோண்டுவதில் சபரியையே மிஞ்சி விட்டார்கள். 


பாரு, திவாகர் போன்ற அடாவடி நபர்களுக்கும் ரசிகர் குழு உருவாகி விடும் என்று சொல்லியிருந்தேன். ‘இவர்கள் எல்லாம் நேச்சுரலாக இருப்பவர்களாம்.. மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தி விடுபவர்களாம்.. உள்ளே இருப்பதை மறைக்க மாட்டார்களாம்’.. ரசிகர்கள் இப்படியொரு வியாக்கியானம் தருவார்கள். 

அதிகாரத்தின் முன்னால் பம்மி நிற்கும் அடாவடி நபர்கள்


ஆனால் பாருங்கள்.. வாரஇறுதி விசாரணை நாளில், இந்த ‘வெளிப்படையாக’ பேசுபவர்கள் அப்படியே பம்மி நிற்பார்கள். ஏனெனில் சக போட்டியாளர்களை மலினமாக பேசுவதைப் போல அதிகாரத்தை எதிர்க்க முடியாது. ஆதாயங்கள் போய் விடும். எனவே அசட்டுத்தனமாக இளித்து நிற்பார்கள். இப்போது மனதில் தோன்றுவதையெல்லாம் பேச முடியாது. அதிலும் பாருவின் மைண்ட் வாய்ஸ்களை வீ்ட்டின் ஸ்பீக்கர் ஒலிபரப்புவது போல நுட்பம் வந்தால் விசே அடுத்த எபிசோடிற்கு வரவே மாட்டார் என்று தோன்றுகிறது. 

முந்தைய சீசனில் முத்துக்குமரன், விஜே ஆனந்தி போன்றவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கோர்வையாகவும் நகைச்சுவை கலந்தும் சொல்லும் திறன் படைத்திருந்தார்கள். விசேவின் கறார்த்தனத்தை மீறியும் இவர்களால் பிரகாசிக்க முடிந்தது. விசேவும் இதை ரசித்தார். ஆனால் இந்த சீசனில் அப்படி பேசுவதற்கு ஒருவர் கூட இல்லை. தவறு செய்த பள்ளி மாணவர்கள் போலவே நிற்கிறார்கள். இதன் உச்சம் திவாகர். 


ஆக.. மற்ற நேரங்களில் வாயைப் பிளக்கும் பாரு, சாம்பார் வீணாக்கிய விஷயத்தில் அசட்டுத்தனமாக நின்று கொண்டிருந்தார். அப்படியே நின்றிருந்தால் கூட தப்பித்திருப்பார். “ஹிஹி.. நான் கிச்சன் பக்கமே போனதில்லை. சர்வ் பண்றது எப்படின்னு தெரியாது” என்று அபத்தமாக பொய் சொல்ல எஸ்கேப் ஆக முயல “ஏம்மா.. ஸ்பூன்ல எடுத்து ஊத்தறதுக்கு ஆக்ஸ்போர்டு போயா படிச்சிருக்கணும்..?” என்று விசே சரியாக மடக்க மீண்டும் அசட்டுத்தனமான இளிப்புடன் நின்றார் பாரு.  உணவை வீணாக்கிய எஃப்ஜேவிற்கும் சைடு கேப்பில் ஊமைக்குத்தாக குத்தினார் விசே. 

வரிசையாக ஊமைக்குத்து குத்திய விசே


அடுத்ததாக வளர்ப்பு பிரச்சினை. இந்த விவகாரத்தில் கம்ருதீன் மாட்டுவது இரண்டாவது முறை. இரண்டு முறையும் ‘அதோட அர்த்தம் எனக்கு சரியா தெரியல’ என்று புளுகினார். இந்த டாப்பிக்கில் பாரு எழுந்து கொள்ளாமல் எஸ்கேப் ஆக முயல, அவரையும் எழுப்பிய விசே “கம்ருவாவது ஸாரி சொன்னாரு. நீங்க சொன்னீங்களா..?” என்று கேட்க பாருவிடம் பதில் இல்லை. 


இதற்குள் ரம்யா கைதூக்க “அதுக்குள்ள என்னம்மா.. அவசரம்..?” என்று கோபித்துக் கொண்ட விசே ‘இருங்க.. உங்களுக்கு அப்புறம் வரலாம்ன்னு இருந்தேன்.. இப்பவே வரேன்..’ என்பது போல “கேப்டன்சி டாஸ்க்ல ஒரு மனுஷன் ஒன்றரை மணி நேரமா தொங்கிக்கிட்டு இருக்கான். அங்க போய் காமெடி பண்ணிட்டிருக்கீங்க” என்று வெளுத்தார். வினோத்திற்கு உள்ளே குஷியாக இருந்திருக்க வேண்டும். 

ஆனால் தனக்கு ஆதரவு கிடைத்ததற்காக வினோத் அதிக நேரம் சந்தோஷமடைய முடியவில்லை. அடுத்ததாக அவருக்கும் ஊமைக்குத்து விழுந்தது. “வியானா வந்து அவங்க கருத்தைச் சொல்லும் போது சீக்கிரம் சொல்லி முடிங்கன்னு சொல்றது என்ன பழக்கம?” என்று காட்டமானார் விசே. 


ரம்யா கை தூக்கி அடிவாங்கியதைப் பார்த்தாவது சுபிக்ஷா சும்மா இருந்திருக்கலாம். அவரும் கையை தூக்கி “கேப்டன்சி பொறுப்பை என்னால ஹாண்டில் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க” என்று புகார் சொல்ல “அது அவங்க கருத்து. தப்பில்ல. உக்காருங்க” என்று விசே அதட்ட முகம் வாடி அமர்ந்தார் சுபிக்ஷா. 

‘அக்கா.. மன்னிப்பு கேக்க வந்திருக்கேன். ஒழுங்கா வாங்கிக்கோ’


விக்ரம் விவகாரத்தில் நேற்றும் இன்றும் அடிவாங்கியதால் ஒரு வழியாக மன்னிப்பு கேட்க முடிவு செய்தார் பாரு. விசே பிரேக்கில் சென்றதும் இதற்காக எழுந்து சென்றார். அவர் சென்ற தோரணை எப்படி இருந்தது என்றால் “டேய்.. தம்பி.. அக்கா ஒரு மாதிரியா மூடு வந்து மன்னிப்பு கேக்க வந்திருக்கேன்.. இப்பவே வாங்கிக்கோ.. அப்புறம் நீ கேட்டா கூட கிடைக்காது” என்கிற தோரணையில்தான் இருந்தது. 

“இதோ பாரு.. பாரு.. எப்படியும் நீ இதை மறுபடியும் சொல்லத்தான் போறே. ரெண்டு வாரம் ஒழுங்கா இரு.. அப்புறம் வந்து மன்னிப்பு கேளு.. பார்க்கலாம்” என்று விக்ரம் சொன்னது சரியான அணுகுமுறை. ஏனெனில் பாருவின் லட்சணம் அப்படி. இதனால் பாருவிற்கு கோபம் வந்து “அதெல்லாம் நீ சொல்லக்கூடாது.. தப்பு.. தப்பு.. டைம்லாம் நீ கொடுக்கக்கூடாது” என்று கோபமாக விலகினார். எனில் அவர் மன்னிப்பு கேட்க வந்ததே ஒரு பாவனைதான் என்று நன்றாக தெரிகிறது. 

“நான் பாட்டுக்கு சிவனேன்னு உக்காந்திட்டு இருந்தேன். மன்னிப்பு கேட்க வரேன்னு சொல்லிட்டு சண்டை போட்டுட்டு போறா. நான் என்னத்த பண்றது?” என்று விக்ரம் கசப்புடன் சிரிக்க “மன்னிப்பு வாங்கலைன்னா மூக்குல குத்திடுவா போல” என்று சிரிப்புடன் கமெண்ட் அடித்தார் அமித். “அவ கிட்ட ஸாரில்லாம் ஏத்துக்காதீங்க ப்ரோ.. அவ இப்படித்தான் பண்ணுவா” என்று விக்ரமிடம் சொல்லிக் கொண்டிருந்தார், பாருவின் ‘முன்னாள்’ தோழரான கம்மு. 


வினோத்திற்கும் திவாகருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடப்பதால் பஞ்சாயத்து செய்ய முன்வந்தார் சாண்ட்ரா. “யாருடனும் என்னை ஒப்பிடாதீங்க” என்று திவாகர் வழக்கம் போல் கெத்து காட்ட “ஆமாம்.. இவரு பெரிய ரஜினிகாந்து. அவங்களே அடக்கமா இருக்கறாங்க. போடா டேய்” என்பது போல் காண்டானார் வினோத்.

“திட்டு வாங்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா.. பாருவைப் பாருங்களேன். என்ன திட்டு வாங்கினாலும் துடைச்சிட்டு போயிட்டே இருக்கா. அவளே சந்தோஷமா இருக்கும் போது எனக்கென்னன்னு இப்பல்லாம் மனதை தேத்திக்கறேன்” என்று கனி சொன்னது ஒருவகையில் உண்மை. பாரு, திவாகர் போன்றவர்கள் மோசமான முன்னுதாரணமாக இருந்து நல்லவர்களையும் தங்களைப் போலவே மாறுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். 

இளவரசிங்க போனதால எனக்கு பொசசிவ் வந்துடுச்சு’ - வாயைக் கொடுத்து மாட்டிய திவாகர்


அடுத்ததாக ராஜா ராணி டாஸ்க் பற்றிய விசாரணையை ஆரம்பித்தார். அதற்குள் ஏற்கெனவே பலரும் அடிவாங்கியிருந்ததால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. ‘என்ன அரோரா.. பேசறீங்களா.. நம்மளை கூப்பிடறாங்களா.. இல்லையான்னு பார்ப்போம்..ன்னு எங்களுக்கு டெஸ்ட் வைக்கறீங்களா..?” என்று விசே கிண்டலடிக்க, வழக்கமாக பதில் பேசாத அராரோ.. இப்போது சற்று துணிச்சல் வந்து ‘உங்க டோபோமைன் அதிகமாகும்” என்று அசந்தர்ப்பமாக ஜோக் அடித்தார். 

தானாக எழுந்த கம்ரு, “இந்த வாரம் நல்லா சிரிச்சேன். மக்கள் ஒத்துமையா இருக்கறது எப்படின்னு இந்த டாஸ்க் மூலம் தெரிஞ்சது” என்று என்னத்தையோ பேசி வைக்க “யோவ்.. டாஸ்க் ஃபுல்லா சண்டை போட்டுட்டு அதுல இருந்து ஒத்துமை கிடைச்சுதாம்.. நீங்க எல்லாம் எங்க இருந்துய்யா வர்றீங்க..” என்று விசே கிண்டலடிக்க “இல்ல.. சார். டாஸ்க்கை இவங்க ஆரம்பத்துல சரியா புரிஞ்சுக்கலை” என்று கம்மு சீரியஸாக விளக்கம் அளிக்க “எல்லோரும் கம்முவிற்கு ஸாரி சொல்லுங்க.

அவர் ஒருத்தர்தான் டாஸ்க்கை சரியா புரிஞ்சிக்கிட்ட ஆள். எல்லோரும் அவரைப் பார்த்து கத்துக்கங்க” என்று கிண்டலின் அளவை கூட்டிக் கொண்டே சென்றார் விசே. (கம்மு என்றாலே விசேவிற்கு தனியாக டோபோமைன் வந்து விடுகிறது)

இந்த திவாகர் அமைதியாக நின்றால்கூட தப்பிக்கலாம். ஆனால் வாயைத் திறந்தால் மோசம். “எங்கள் நாட்டு இளவரசிங்க.. எதிர் நாட்டுக்கு போயிட்டாங்க. நான் லவ் பண்ணலாம்ன்னு பார்த்தேன். எனக்கு பொசசிவ்வா வந்துடுச்சி” என்று ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு எதையோ உளற “பொசசிவ் ஆனது மன்னரா அல்லது உண்மையான திவாகரா” என்று விசே மடக்க அசட்டுத்தனமாக சிரித்தார் திவாகர். 

டாப்பிக்கை டக்கென்று மாற்றி “இந்த வினோத் என்னை கிண்டல் பண்றார் சார். பாடி ஷேமிங் பண்றார்” என்று திவாகர் சமாளிக்க முயல, அதில் அவராகவே மாட்டிக் கொண்டார். “அரோரா. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என்று விசே கேட்க “வினோத்தை இவர் ரொம்ப மோசமா பேசினார். நான் அதை தடுத்தேன்.. அதுக்கு சபையிலேயே என்னை ஏய்.. வாயை மூடுன்னு சொன்னார்” என்று அரோரா சொல்ல “இளவரசி சொன்னா அமைச்சர் கேட்டுத்தான் ஆகணும். அவங்களுக்குத்தானே அதிக பவர்” என்பதை சாட்சியங்களுடன் நிரூபித்தார் விசே. 

“அதெல்லாம் இருக்கட்டும். பொசசிவ் ஆனது அமைச்சரா. திவாகரா?’ என்று பழைய கேள்வியை விசே மீண்டும் எடுத்துப் போட வழக்கம் போல் தலையைக் குனிந்து திவாகர் நிற்க “இன்னிக்கு எவ்ளோ நேரமானாலும் பரவாயில்ல. நீங்க பதில் சொல்லாம விடமாட்டேன்” என்று விசே கீழே அமர்ந்துவிட, கூட்டம் வெடித்து சிரித்தது. அப்போதும் பதில் கிடைக்கவில்லை. பின்னணியில் ‘சங்கீத ஸ்வரங்கள் .. ஏழே கணக்கா’ பாடல் ஒலிக்காத குறை. 

திவாகரிடம் பதில் எதிர்பார்த்து ஏமாந்த விசே

‘இந்தாளு பேச மாட்டாரு.. நாமதான் பேசியாகணும்’ என்று வெறுப்பில் எழுந்த விசே “ஏங்க.. ஒவ்வொரு காமிராவா போய் துரத்தி துரத்தி ரீல்ஸ் போட தெரியுது. ஆனா ராஜா மாதிரி ஒரு கேரக்டர் கொடுத்தா செய்யத் தெரியலை. மந்திரி கேரக்டர்ன்னா. மூளை நிறைய இருந்திருக்கணுமே.. 60 கேமரால 600 ரீல்ஸ் போடலாம்ன்ற பிளானோடதான் உள்ளே வந்திருக்கீங்களா?” என்று சகட்டு மேனிக்கு விளாசித்தள்ளினார் விசே. 

அடுத்ததாக எழுந்த எஃப்ஜே.. “ண்ணா.. நான் ஒரு கேரக்டர் பிளே பண்ணேன்னா..” என்று வழக்கம் போல் ஆரம்பித்தார். (எத்தனை கேரக்டர்தான் பிளே பண்ணுவாரோ?!) எஃப்ஜே விளக்கமாக சொன்னது என்னவென்று புரியவில்லை. அதற்குள் சுபிக்ஷா எழுந்து ‘சார்.. அது என் ஐடியா என்று புகார் அளித்தார். 

அடுத்த இறுதி டாஸ்க்கிற்கு வந்தார் விசே. “மத்தவங்க கிட்ட இருந்து நம்மளை பாதுகாக்கறதுக்கு எல்லோருமே ஒரு கவசம் வெச்சிருப்போம். அது என்னன்னு ஒவ்வொருத்தரும் சொல்லுங்க” என்றார். இதன் மூலம் ஒவ்வொரு போட்டியாளரின் முகமூடி என்னவென்று மற்றவர்களுக்கு அம்பலமாகி விடும். எனவே தங்களின் ஸ்ட்ராட்டஜியை மாற்றிக் கொள்வார்கள். இதனால் ஆட்டம் சுவாரசியமாகும் என்பதுதான் பிளான். 

ஆனால் இந்தக் கேள்வியை பலரும் சரியாகப் புரிந்து கொண்டார்களா என்று தெரியவில்லை. என்னென்னமோ சொன்னார்கள். ‘இவங்க கூட பேசி என்ன ஆகப் போறது’ என்பது மாதிரி விசேவும் விட்டு விட்டார்.

“உங்க கவச ஆயுதம் என்ன?” - விதம் விதமாக வந்த பதில்கள்

“என்னோட ஹியூமர்தான் என் ஷீல்ட். ரொம்ப எமோஷனலான விஷயத்தைக் கூட காமெடி கலந்துசொல்வேன்” என்றார் விக்ரம். “என்னோட பேச்சுத்திறன் மற்றும் கலைதான் என் ஷீல்ட்” என்றார் பாரு. தவறு செய்து சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வாராம். (பார்றா!). “என்னோட கல்விதான் என் கவசம். லிமிட்டா நடந்துப்பேன்” என்று ஒரு மாதிரி குன்சாக சொன்னார் திவாகர். 

சபரியின் டர்ன் வரும் போது அவர் ஆத்மார்த்தமாக பேசியதைப் போல் இருந்தது. “நான் எமோஷனலி வீக் ஆன ஆளு.. ஆனா ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி காட்டிப்பேன். அதான் என் ஷீல்ட்.  எல்லோரோட குட் புக்ஸ்ல இருக்கணும்.. யாரையும் ஹர்ட் பண்ணிடக்கூடாதுன்னு நெனப்பேன். அதனால டிப்ளமாட்டிக்கா இருந்துட்டேன். வாய் விட்டு அழணும்னு போல இருக்கு.. “ என்று சபரி தழுதழுக்க “உடைஞ்சுதான் பாருங்களேன்.. அதுவும் நல்லாத்தான் இருக்கும்” என்று சமாதானப்படுத்தினார் விசே. 

பாருவை தள்ளிய தவறு, ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி குப்பைக்கூடையை ஆராய்ச்சி செய்தது, வீட்டின் தல யாக இருந்து எதிர்கொண்ட பிரச்சினைகள், விசாரணை நாளில் எல்லோருமே அவர் மீது புகார் சுமத்தியது போன்ற விஷயங்கள் சபரிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கக்கூடும். விசே சென்ற பிறகு சபையைக் கூட்டி கோவென்று அழ மக்கள் அவரைச் சமாதானப்படுத்தினார்கள். 

தன்னுடைய கவசமாக விசே சொல்லியது நன்று. “முன்னல்லாம் நண்பர்கள் கேட்டாங்கன்னு சில விஷயங்களுக்கு உடனே ஓகே சொல்லிடுவேன். அதனால மத்தவங்க ஆதாயம் அடைஞ்சாங்க. ஆனா எனக்கு பிரச்சினை மட்டும்தான் வந்தது. இப்பல்லாம் நோ சொல்ல கத்துக்கிட்டேன். நிம்மதியா இருக்கேன்” என்று சொன்னது நல்ல அட்வைஸ். சினிமா உலகம் தொடர்பான அனுபவங்களை இப்படியாக விசே அடிக்கடி பகிர்ந்து கொள்ளலாம். 

எவிக்ட் ஆகி ஜாலியாக வெளியே வந்த திவாகர்


எவிக்ஷன் நேரம். “எனக்கு ரெட் கலர்ல டிரஸ் வந்துச்சு. பீதியா இருக்கு” என்று பயம் கலந்த சிரிப்புடன் சொன்னார் பாரு. போட்டியாளர்களின் உறவினர்கள், ஆடை நிறங்களின் மூலம் சங்கேத மெசேஜ் அனுப்புகிறார்களாம். இந்த உத்தி பிக் பாஸில் நெடுங்காலமாக உண்டு. பிக் பாஸ் டீம் இதற்கு சும்மா இருக்குமா? இதன் ரகசியத்தை உடைத்தார் விசே. “வாரா வாரம் வர்ற உடைகளை அப்படியே உங்களுக்கு அனுப்ப மாட்டோம்.. மாத்தி மாத்தி ரொட்டேஷன்லதான் அனுப்புவோம். அதையெல்லாம் யோசிக்காம ஆட்டத்தை ஒழுங்கா விளையாடுங்க” என்றார். 

நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக காப்பாற்றப்பட எஞ்சியிருந்தவர்கள் கனி மற்றும் திவாகர். கனியின் முகத்தில் டென்ஷன். ஆனால் திவாகரோ ‘என்ன மார்க் வேணா வரட்டும்.. நமக்கென்ன..’ என்கிற மாணவனைப் போல் தில்லாக அமர்ந்திருந்தார். ‘திவாகர்’ என்கிற பெயரைக் கொண்ட கார்டை நீட்டினார் விசே. 

“எனக்கு விஜய்சேதுபதி மாதிரியே நடிக்க வருது” - கலகல திவாகர் 


போட்டியாளர்கள் பலரும் திவாகர் என்றே யூகித்திருந்ததால் யாருக்கும் டென்ஷன் இல்லை. பாருகூட திவாகர் பெயரைத்தான் சொல்லியிருந்தார். ரம்யா மட்டும்தான் ‘கனி’ என்றார். ஆக.. யார் முகத்திலும் சோகம் இல்லை. பாரு கூட முதலில் ஜாலியாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென்று அவருக்குள் தனக்கு கிடைத்த அடிமை வெளியே போவது குறித்த கவலை தோன்றியிருக்க வேண்டும்.

இனிமே யாரை வெச்சு அனத்துவேன் என்கிற கவலையுடன் “அண்ணே.. இனிமே இங்க நான் எப்படி இருப்பேன்.. யாரையும் எனக்குத் தெரியாதே.. உன்னையே உலகம்ன்னு நெனச்சு வாழ்ந்தேனே” என்று பிலாக்கணம் வைக்க “அழாதம்மா.. தங்கச்சி.. நீ ஸ்ட்ராங் பிளேயர்” என்று திவாகர் ஆறுதல் சொல்ல ‘பாசமலர்’ திரைப்படத்தின் spoof version-ஐ பார்ப்பது போலவே இருந்தது. 

இதுவரை திவாகரை கன்னாபின்னாவென்று கிண்டலடித்துக் கொண்ட வினோத் கூட கண்கலங்கி “எல்லாமே விளையாட்டுக்குத்தான். சீரியஸா எதுவும் சொல்லலை” என்று தழுதழுத்தார். இனிமேல் காம்போவிற்கு என்ன செய்வார்? “நீங்களும் ஹீரோதான்” என்று கேஷூவலாக பேசி பிக் பாஸ் வழியனுப்பி வைத்தார். (அப்ப ஏன் காமிராவை திருப்பி வெச்சீங்களாம்?!)

மேடைக்கு உற்சாகமாக வந்த திவாகரை வரவேற்றார் விசே. “45 நாள் இருப்பேன்னு நெனக்கலை” என்ற திவாகரின் கன்னத்தில் முத்தம் கொடுத்து அவரது ஆசையை நிறைவேற்றினார் விசே. இதுவரைக்கும் கூட நன்றாகப் போனது. ஆனால் கிளம்பும் போது திவாகர் சொன்ன வாக்கியத்தில் விசேவே உள்ளுற நொந்து போயிருப்பார். 

“எங்க வீட்டு பக்கத்துல கூட சொல்லியிருக்காங்க சார். எனக்கு விஜய்சேதுபதி பாடி லேங்வேஜ்ல நல்லா நடிக்க வருதாம்”... (ப்பா.. என்னவொரு தன்னம்பிக்கை?!)

BB Tamil 9: "பெண்களின் காவலராகவும், ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக்கிறாரு, ஆனா"- குற்றம்சாட்டிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னோட லிஸ்ட்லயே நீ இல்ல" - கொளுத்திப் போடும் டாஸ்க்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 41: பாரு, திவாகரை வறுத்தெடுத்த விசே; பார்வையாளர்களை குதூகலிக்க வைக்கும் பிக் பாஸ்

இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று. எனவே தீயாக இருந்தது. ஆனால் முழுக்கவும் நியாயமாக இருந்ததா?வில்லன் பாத்திரம் வலுவாக அமைக்கப்படுவது கமர்ஷியல் திரைப்படங்களின் வெற்றிக்கான ஆதாரமான ஃபார்முலா. அதுபோல... மேலும் பார்க்க

Serial update: ரெண்டாவது பாப்பா, மகிழ்ச்சியில் பரதா; தூர்தர்ஷன் டு பிக்பாஸ் சபரி கடந்து வந்த பாதை

ரெண்டாவது பாப்பா.. மகிழ்ச்சியில் பரதா!சீரியல் நடிகை பரதா இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். ஏற்கனவே மகள் இருக்கும் சூழலில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அவருக்கு நண்பர்கள் பலரும் வாழ... மேலும் பார்க்க

Top Cook Dupe Cook: "சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சிடணும்!" - டி.எஸ்.ஆர்

'அயலி' உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்து நமக்கு பரிச்சயமானவர் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர் (எ) ஶ்ரீனிவாசன். சமூக வலைதளப் பக்கங்களில் இவர் பதிவிடும் உணவு வீடியோக்கள் பெரும் டிரெண்டிங் என்றே சொல்லலாம். சினிம... மேலும் பார்க்க

BB Tamil 9: "நீங்க ஒரு VJ தானே, உங்க ஷோல இப்படி பண்ணா.!"- பார்வதியை சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்... மேலும் பார்க்க