போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாட...
Doctor Vikatan: தலைச்சுற்றல் பிரச்னை, ஏன் இ.என்.டி மருத்துவரைப் பார்க்க வேண்டும்?
Doctor Vikatan: என் அம்மாவுக்கு கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் பிரச்னை இருக்கிறது. மருத்துவரை அணுகியபோது , இது வெர்டிகோ பாதிப்பாக இருக்கலாம் என்றும் இ.என்.டி மருத்துவரைப் பார்க்கும்படியும் சொன்னார். தலைச்சுற்றலுக்கு இ.என்.டி மருத்துவர் ஏன்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

வெர்ட்டிகோ பிரச்னைக்கு எந்த மருத்துவரைச் சந்திப்பது என்ற குழப்பம் பலரிடமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
இந்தப் பிரச்னைக்கு ஆலோசனை பெற காது, மூக்கு, தொண்டை மருத்துவர் (இ.என்.டி) அல்லது நரம்பியல் மருத்துவர் அல்லது பொது மருத்துவர், இவர்களில் யாரை வேண்டுமானாலும் அணுகலாம்.
சில நேரங்களில் இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை கொடுக்க ஒரு குழுவே சேர்ந்து இயங்க வேண்டியிருக்கலாம்.
வெர்ட்டிகோ பிரச்னை ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். காது தொடர்பான பிரச்னையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். நரம்பியல் பாதிப்புகள் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். பொதுவான காரணங்களால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம்.

முதலில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து பார்ப்பது அவசியம். உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என்பதை முழுமையாகப் பார்த்துத் தெரிந்துகொண்ட பிறகு, தேவையின் அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைச் சந்திப்பதுதான் சரியானதாக இருக்கும்.
இந்தப் பிரச்னைக்காக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகும்போது, சம்பந்தப்பட்ட நபரின் முழுமையான ஆரோக்கிய தகவல்கள் கேட்கப்படும்.
வெர்ட்டிகோ தொடர்பான முதல் அறிகுறி எப்போது ஏற்பட்டது, எப்படிப்பட்ட அறிகுறி என்பது மிக முக்கியமாகக் கேட்கப்படும். அந்த முதல் அறிகுறிதான் அந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது, எப்படிப்பட்ட சிகிச்சை தேவைப்படும் என்று முடிவுசெய்வதற்கான க்ளூவாக இருக்கும்.
பெரும்பாலான நபர்களுக்கும் இந்த முதல் அறிகுறி நினைவில் இருப்பதைப் பார்க்கலாம். தேவையான தகவல்களைத் திரட்டியதும், இ.என்.டி தொடர்பான மற்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
அதாவது, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதையடுத்து பிரத்யேகமான இ.என்.டி பரிசோதனைகள் செய்யப்படும்.
கேட்கும் திறனைப் பரிசோதிக்கும் ஆடியோகிராம் சோதனை செய்யப்படும். கூடவே, காதின் உள்ளே உள்ள அழுத்தமும் அளவிடப்படும். அதற்கு 'இம்பீடன்ஸ்' என்று பெயர். அதையடுத்து உள்காது எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான டெஸ்ட் செய்யப்படும்.
இப்படிச் செய்யப்படுகிற ஒவ்வொரு பரிசோதனையுமே இந்தப் பிரச்னையை அணுகவும், சிகிச்சையைத் தொடரவும் முக்கியமானது.
எல்லா டெஸ்ட் ரிசல்ட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சிகிச்சை குறித்த முடிவுக்கு மருத்துவர் வருவார். அதற்கேற்ப, பிரச்னைக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















