"இலவசம்னு சொல்லிட்டு கட்டணம் வசூலிக்கிறாங்க" - விக்டோரியா அரங்க விவகாரமும் மாநகர...
Khawaja: ``இவை என் வாழ்நாள் முழுவதும் நான் எதிர்கொண்ட அதே இனவெறிதான்" - ஓய்வுபெறும் ஆஸ்திரேலிய வீரர்
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வீரர் ஆவார். கடந்த 2011-ம் ஆண்டில் முதல்முறையாக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 87 டெஸ்ட், 40 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 8,001 ரன்கள் எடுத்துள்ளார்.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக கவாஜா பங்காற்றினார். அந்தக் காலகட்டத்தில் மட்டும் 17 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 7 அரைசதங்களுடன் 1,621 ரன்கள் குவித்தார்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி 25.93 மற்றும் 36.11 எனக் கவனம் ஈர்க்கவில்லை. நடந்துவரும் ஆஷஸ் தொடரில் கூட 5 இன்னிங்ஸ்களில் வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்தச் சூழலில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், ``ஆஷஸ் தொடரில் 5வது டெஸ்டில் கவாஜா ஓய்வை அறிவிக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில், நேற்று உஸ்மான் கவாஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளேன். சிட்னி டெஸ்ட்தான் எனது கடைசி டெஸ்ட். நான் எப்போதும்... இப்போது வரை கூட, சற்றே வித்தியாசமாகவே உணர்ந்திருக்கிறேன்.
நான் நிறவெறிக்கு ஆளான கிரிக்கெட் வீரர். என் பெருமையும் மகிழ்ச்சியும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிதான். ஆனால் நான் நடத்தப்பட்ட விதத்திலும், என்னைச் சுற்றி நடந்த விஷயங்களாலும் நான் வித்தியாசமாக உணர்ந்திருக்கிறேன்.

நான் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன் என்று எனக்குத் தெரியும். கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது என்னை ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன்.
உதாரணமாக ஒன்றைக் கூறலாம். எனக்கு முதுகுத் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அப்போது ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் என்னை அணுகிய விதம் எனது ஆட்டத்திறனைப் பற்றியது அல்ல. அது தனிப்பட்ட தாக்குதலாக மாறியது.
எனது தயாரிப்பு, அர்ப்பணிப்பைக் கேள்விக்குள்ளாக்கினர். அந்தப் பார்வை ஒரு மனிதனாக நான் யார் என்பதைப் பற்றியதாக இருந்தது.
இவை நான் என் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்ட அதே இனவெறிப் பழமைவாதங்கள்தான். நாம் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டோம் என்று நினைத்தேன். பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் யாராவது காயமடைந்தால், நீங்கள் அவர்களுக்காகப் பரிதாபப்படுவீர்கள்.
நான் காயமடைந்தபோது, எல்லோரும் என் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். அதுதான் எனக்கு மிகவும் வருத்தமளித்த விஷயம். இது நான் நீண்ட காலமாகச் சமாளித்து வரும் ஒரு விஷயம்.
இந்த விமர்சனங்கள் ஏன் ஆட்டத்திறன் அல்லது அணித் தேர்வு விவாதங்களை விட ஆழமாகப் புண்படுத்தின. அடுத்த உஸ்மான் கவாஜாவின் பயணம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


















