``ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்'' - விவசாயத்தில் சாதித்த லக்னோ இளம் பெண்; எப்படி ...
S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, 'பொதுக்குழுவில் நான் பேசிய பிறகு ஒரு வாரமாக திமுக கதறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசிய கட்சிதான் திமுக. நாம் ஒன்றிய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் எதிர்த்துதான் போராடுகிறோம். ஆனால், நேற்று இரவிலிருந்து காவல்துறையினர் நம்மை ஒரு வழி செய்துவிட்டனர்.
5 அடிக்கு மேடை போட்டிருக்கிறீர்கள், மூன்று அடிக்குதான் மேடை போட வேண்டும். போட்ட மேடையை அகற்றுங்கள் என்கின்றனர். நீங்கள் என்ன பாஜகவோடு மறைமுக கூட்டணியில் இருக்கிறீர்களா? தமிழக சட்டமன்றத்தில் S.I.R யை எதிர்த்து ஏன் தீர்மானம் போடவில்லை. இதனால்தான் சொல்கிறோம் திமுக பாஜகவோடு மறைமுக கூட்டணி வைத்திருக்கிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள் என ஏழை மக்கள் அத்தனை பேரும் காலையில் கிளம்பி வேலைக்குச் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார்கள். அவர்கள் எப்படி விண்ணப்பப் படிவங்களை வாங்கி நிரப்ப முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு இது கூடத் தெரியாதா? மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இரண்டு மூன்று ஆண்டுகள் நேரமெடுத்து இந்தப் பணியைச் செய்திருக்க வேண்டும். சிறப்பு திருத்தத்தைப் பற்றி தலைவர் நேற்றிரவு பேசிய வீடியோ இதுவரை 3 கோடி மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஒரு வாக்கு நீக்கப்பட்டால் கூட தலைவர் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வார்.
தமிழகத்தில் S.I.R யை நடைமுறைப்படுத்தும் அமல்படுத்தும் அதிகாரம் திமுகவிடமே இருக்கிறது. BLO க்கள் தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவர்கள் அல்ல. BLO க்களாக திமுக உறுப்பினர்கள் மாறிவிட்டார்கள். BLO க்கள் எல்லா வீடுகளுக்கும் நேரில் சென்றார்களா என்பதை நிரூபிக்க என்ன வழிமுறை இருக்கிறது? மாநில அரசு கொடுக்கும் பட்டியலைத்தான் தேர்தல் ஆணையம் நம்பும். GenZ வாக்காளர்களுக்கு நாம்தான் உதவ வேண்டும்.

எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேறியபோது அவரிடம் பெரிய படைபலம் கிடையாது. அப்போது எம்.ஜி.ஆர் மீதும் கட்டமைப்பு இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. தவெகவின் கட்டமைப்பே மக்கள்தான்.
வீடு வீடாக தவெக தொண்டர்கள் சென்று மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். மக்களுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை சரி செய்ய வேண்டும்.
ஆனந்த் பேசுகையில், 'குறிப்பிட்ட பகுதியில் ஆளும்தரப்புக்கு வாக்களிக்காத மக்களை கூட்டாக நீக்குவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உயிருடன் இருக்கும் மக்களின் வாக்குரிமையைப் பறிப்பது கண்டிக்கத்தக்கது. படித்தவர்களுக்கே கடினமான செயல்பாட்டில் பாமரர்கள் என்ன செய்வார்கள்? கேட்கிற கேள்விக்கு அவர்களிடம் எந்த பதிலுமில்லை.

நேர்மையற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்குவழியில் வெல்ல நினைக்கின்றனர். யார் வெல்ல வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். குளறுபடிகள் நிறைந்த சிறப்பு தீவிர திருத்தத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். BLO அதிகாரிகள் அத்தனை வீடுகளுக்கும் நேரில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். அவர்களை திமுக, பாஜக தொண்டர்கள் மிரட்டுவதிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாவிடில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்.

எங்கள் வருகையால் நிறைய பேர் நடுங்கிப் போயிருக்கிறார்கள். இனியும் எங்களை ஏமாற்ற முடியாது. தவெக கொடியைப் பார்த்தாலே 7-8 கிலோ மீட்டருக்கு முன்பாக காவல்துறையினர் வண்டியை நிறுத்திவிடுகிறார்கள். மற்ற கட்சியெல்லாம் காசு கொடுத்து கூட்டம் கூட்டுகையில் தன்னெழுச்சியாக கூடும் கூட்டம் தவெகவுக்குதான். இன்னும் 5 மாதம்தான். அதனால் மக்களுக்காக வேலை பாருங்கள் காவல்துறையினரே.

















