கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத...
The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' - எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'?
முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வெளியூருக்கு வருகிறார் பூமா தேவி (ராஷ்மிகா). பிறக்கும்போதே தாயை இழந்த பூமா தேவி, தந்தையினால் வளர்க்கப்பட்டவர்.
கல்லூரியில் கணிதவியல் துறையைச் சேர்ந்த விக்ரம் (தீக்ஷித் ஷெட்டி) என்பவருடன் பூமாவுக்குக் காதல் மலர்கிறது. பூமாவின் ஆசைகள் அத்தனையையும் ஆணாதிக்க எண்ணம் கொண்டு தடுக்கிறார் விக்ரம்.

விக்ரமின் இந்த செயல்கள், பூமாவை ஒரு கட்டத்திற்கு மேல் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கி விட்டோமோ, நம்முடைய எதிர்காலம் என்னவாகும் எனச் சிந்திக்க வைக்கிறது.
காதல் வாழ்க்கையிலிருந்து பிரிந்து போக நினைக்கும் பூமாவை விக்ரம் எப்படியெல்லாம் துன்புறுத்துகிறார், அதிலிருந்து பூமா எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் இந்த டோலிவுட் சினிமாவின் கதை.
படிப்பிற்காக முதல் முறையாக வெளியூருக்கு வரும் பூமா அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துமிடத்தில் வழக்கமான ராஷ்மிகாவே தென்படுகிறார்.
ஆனால், குரூர எண்ணம் கொண்ட காதலனின் துன்புறுத்தலை எதிர்கொள்கையிலும், தன்னை புரிந்து கொள்ளாமல் ஆதிக்க மனப்பான்மையில் தந்தை சொல்லும் சொற்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும் வெகுண்டெழும் இடங்களில் கதையின் நாயகியாக நடிப்பில் அவுட் ஆஃப் ஸ்டேடியம் சிக்ஸர் அடித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா!
டாக்சிக் லவ்வராக வரும் தீக்ஷித் ஷெட்டி, தனது மிரட்டலான நடிப்பால் வெறுப்பை வரவழைத்து விக்ரம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
தந்தையினால் மட்டுமே வளர்க்கப்படும் மகளின் மனவோட்டங்களையும், அவள் சந்திக்கும் சிக்கல்களையும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் தந்தையாக வரும் ராவ் ரமேஷ், தன் கதாபாத்திரம் கோரும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார்.
துர்காவாக அனு இமானுவேல் சில இடங்களில் மட்டுமே சர்ப்ரைஸ் செய்கிறார். அவர் மனம் மாறும் இடங்களில் தேவைப்படும் யதார்த்த நடிப்பிற்குப் பெரிதளவில் மெனக்கெடாமல் கடந்து சென்றிருப்பது ஏனோ!
ஆணாதிக்க சமூகத்தில் சிக்கிய பெண்ணின் உருவமாக வரும் ரோகினி, வசனம் ஏதுமின்றி தன்னுடைய முகபாவனைகளால் பூமாவை மட்டுமின்றி பலரையும் சிந்திக்க வைக்கிறார்.
கதாபாத்திரங்களின் எமோஷன்களை பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு பெரும்பாலான இடங்களில் மிட் க்ளோஸ் அப் ஷாட் அமைத்த ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்தின் ஐடியா சிறப்பு! முதல் பாதி டிராமாவுக்கு மென்மையான லைட்டிங், பரபரக்கும் இரண்டாம் பாதி டிராமாவுக்கு கலர் லைட்டிங் எனக் கவனிக்க வைக்கிறார்.
இரண்டாம் பாதி கதைக் கோரும் நிதான மீட்டரைச் சரியாக எட்டிப் பிடித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சோட்டா கே பிரசாத். ஆனால், முதல் 30 நிமிடங்களில் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் சுவாரஸ்ய மீட்டரை சமன் செய்யத் தவறியிருக்கிறார்.
மென்மையான பின்னணி இசையால் இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி இந்தத் தெலுங்குப் படத்திற்குக் கொடுத்திருக்கும் ட்ரீட்மெண்ட் சால பாகுந்தி!
இதயத் துடிப்பின் ஒலி வருமிடங்களில் பார்வையாளர்களின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்துவிடுமளவுக்குத் தாக்கம் தந்திருக்கிறார். அதே சமயம், பாடல்களில் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வாகப் உணர்வுகளைக் கசியவிட்டு செவிகளுக்கு மென்மை தருகிறார்.
ஆணாதிக்க சமூகம் ஒரு பெண்ணின் மனவோட்டத்தை எப்படி நெருக்கடிக்குள்ளாக்குகிறது, அதிலிருந்து மீண்டு மேலே வருவதற்குக் கல்வியே எப்படி ஆயுதமாக மாறுகிறது எனச் சாட்டையைச் சுழற்றிய இயக்குநர் ராகுல் ரவீந்திரனுக்குப் பாராட்டுகள்! அனைத்து துன்பங்களையும் பொறுத்துக்கொள்ளும் நாயகிக்கு `பூமா தேவி' எனப் பெயர் வைத்ததும் கவிதையான ஐடியா!
ஆணாதிக்க எண்ணம் கொண்டவனின் காதலை மறுக்கும் பெண் எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார், அவரை அவமானப்படுத்தக் கொடூரச் செயல்களைச் செய்யும் காதலன் என்னவெல்லாம் செய்கிறான் எனச் சமகால நிகழ்வுகளையும் சேர்த்துப் பேசும் இடத்தில் தனித்து நிற்கிறது இந்த டோலிவுட் படைப்பு.
காதலன் செய்யும் ஒடுக்குமுறைக்குள் சிக்கிவிட்டால் நம் எதிர்காலம் என்னவாகும் என பூமா சிந்திக்கும் இடத்தில் உவமைகளாக அமைத்த கற்பனை காட்சிகள் பலே ஐடியா!

‘நீயே அதை அசிங்கமா நினைக்காதப்போ, நாம் மட்டும் அதை ஏன் அவமானமாக நினைக்கணும்’ என்பது போன்ற வசனங்களும் படத்திற்கு ஆழம் சேர்க்கின்றன.
ஆனால், விக்ரம் - பூமா தேவி காதல் பற்றிய தொடக்கக் கதையில் இன்னும் கொஞ்சம் புதுமையையும் சுவாரஸ்யத்தையும் பூசியிருக்கலாம்.
கல்லூரிக்குள் இருக்கும் மகளிர் விடுதிக்குள் எப்படி ஒரு ஆண் சாதாரணமாக வந்து போகிறார், அங்கு வார்டன் என்கிற ஒருவர் இருக்கிறாரா என்பது போன்ற லாஜிக் கேள்விகளுக்கும் பதில் தராமல் ஏமாற்றுகிறாள் இந்த ‘தி கேர்ள்ப்ரண்ட்’.
ராஷ்மிகாவின் அசாத்திய நடிப்பு, ஆணாதிக்க எண்ணங்களைத் தோலுரிக்கும் காட்சிகள் என மிளிரும் இந்த ‘தி கேர்ள்ப்ரண்ட்’-க்கு க்ளாப்ஸும் மெடல்களும் நிச்சயம் கொடுக்கலாம்.
















