36 பயணிகளுடன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; கவலைக்கிடமான நிலையில் ஒருவர்...
Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் & ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்
விஜயின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது.
அ. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என படம் தொடங்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்தது.

கடந்த சனிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரெய்லர் அந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.
விஜய் இதற்கு முன்பே பல பிறமொழித் திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து, அதில் வெற்றியையும் பதித்திருக்கிறார். அந்தப் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா...
காதலுக்கு மரியாதை:
இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அவர் மலையாளத்தில் இயக்கியிருந்த 'அனியதிப்ராவு (Aniyathipraavu)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்.
மலையாள வெர்ஷனிலும் ஷாலினிதான் கதாநாயகியாக நடித்திருப்பார். விஜய் நடித்த கதாபாத்திரத்தில் இந்த மலையாள ஒரிஜினல் வெர்ஷனில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்திருப்பார். பிறகு தெலுங்கிலும் 'நேனு பிரேமிஸ்துனானு' என்ற தலைப்பிலும் இப்படம் ரீமேக் ஆனது.
சொல்லப்போனால், இப்படத்தை முதலில் தமிழில் இயக்குவதற்குதான் ஃபாசில் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அது நடக்காமல் போனதால் மலையாளத்தில் முதலில் இப்படத்தை எடுத்திருக்கிறார்.

நினைத்தேன் வந்தாய்:
இயக்குநர் செல்வபாரதி இயக்கியிருந்த இத்திரைப்படம் 1998-ல் வெளியானது. இப்படம் தெலுங்கில் வெளிவந்த 'பெல்லி சண்டாடி (Pelli Sandadi)' என்ற படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது.
தெலுங்கில் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இவர் 'வாரிசு' படத்தில விஜயின் அண்ணனாகவும் நடித்திருப்பார்.
டோலிவுட்டின் இன்றைய டாப் தயாரிப்பாளர்களாக இருக்கும் அஸ்வினி தத், அல்லு அரவிந்த் ஆகியோர்தான் தமிழ், தெலுங்கு என இரண்டு வெர்ஷனையும் தயாரித்திருந்தார்கள்.
அப்போது, ஸ்ரீ ராகவேந்திரா மூவீஸ் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அஸ்வினி தத், அல்லு அரவிந்த், இயக்குநர் ராகவேந்திரா ராவ் ஆகியோர் இணைந்து படங்களைத் தயாரித்து வந்தனர்.
ப்ரியமானவளே:
'நினைத்தேன் வந்தாய்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் இயக்குநர் செல்வபாரதி இயக்கியிருந்தார்.
விஜய் - சிம்ரன் நடிப்பில் 2000-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருந்தது.
தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளியான 'பவித்ர பந்தம் (Pavitra Bandham)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'ப்ரியமானவளே'.

ப்ரண்ட்ஸ்:
மலையாளத்தில், 1999-ல் சித்திக் இயக்கியிருந்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை, தமிழில் அதே தலைப்பில் ரீமேக் செய்து 2001-ம் திரைக்குக் கொண்டு வந்தார்.
மலையாளத்தில் ஜெயராம், முகேஷ், மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும்தான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
தமிழில், ஜெயராம் நடித்த கேரக்டரில் விஜயும், முகேஷ் நடித்த கேரக்டரில் சூர்யாவும், ஸ்ரீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணாவும் நடித்திருந்தார்கள்.
பத்ரி:
'ப்ரண்ட்ஸ்' படத்தைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு விஜய் நடித்த 'பத்ரி' திரைப்படமும் ரிலீஸ் ஆனது.
தெலுங்கில், பவன் கல்யாணை வைத்து இயக்குநர் பி.ஏ. அருண் பிரசாத் இயக்கிய 'தம்முடு' திரைப்படத்தை, தமிழில் விஜயை வைத்து 'பத்ரி' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்.
யூத்:
தெலுங்கில் வெளிவந்த 'சிரு நவ்வுதோ (Chiru Navvutho)' படத்தின் தமிழ் ரீமேக்தான் விஜய் நடித்திருந்த 'யூத்' திரைப்படம். 'S/O சத்யமூர்த்தி (S/O Sathyamurthy)', 'அல வைகுந்தபுரமுலோ (Ala Vaikunthapurramuloo)' போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இப்படத்தின் கதாசிரியர்.
தமிழுக்கு முன்பே இத்திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. நடிகை சந்தியா கான்தான் தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வசீகரா:
'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே' போன்ற ரீமேக் படங்களைத் தொடர்ந்து, விஜயை ஹீரோவாக வைத்து இந்த ரீமேக் படத்தையும் இயக்கினார் இயக்குநர் செல்வபாரதி.
நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளிவந்த 'நுவ்வு நாகு நச்சாவ் (Nuvvu Naaku Nachav)' என்ற டோலிவுட் படைப்பின் தமிழ் ரீமேக்தான் வசீகரா. இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இப்படத்திற்கும் கதாசிரியர்.
கில்லி:
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'ஓக்கடு' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'கில்லி'.
தெலுங்கு வெர்ஷனான 'ஓக்கடு' படம் சூப்பர் ஹிட்டடிக்க, தமிழ் ரீமேக் 'கில்லி'யும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.
ஆதி:
தெலுங்கில் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் வெளிவந்த 'அதனொக்கடே (Athanokkade)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் 'ஆதி'. 'திருமலை' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த ரீமேக் படத்தையும் இயக்குநர் ரமணா இயக்கினார்.
விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகரும், ஷோபா சந்திரசேகரும் தங்களுடைய 'வி வி கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்தனர்.
போக்கிரி:
மகேஷ் பாபு நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் 'போக்கிரி'.
இதே தலைப்பில், இப்படத்தை தமிழில் விஜயை வைத்து பிரபு தேவா ரீமேக் செய்து திரைக்கு கொண்டு வந்தார்.

வில்லு:
'போக்கிரி' பட வெற்றிக்குப் பிறகு விஜயை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கினார் பிரபு தேவா.
இப்படம் இந்தியில் வெளிவந்த 'சோல்ஜர்' படத்தை தழுவி எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
காவலன்:
இயக்குநர் சித்திக் மலையாளத்தில் திலீப், நயன்தாராவை வைத்து எடுத்த 'பாடிகார்ட்' படத்தை தமிழில் விஜய், அசினை வைத்து 'காவலன்' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இத்திரைப்படம்தான் அசின் நடித்த கடைசி தமிழ் படம்.
நண்பன்:
இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'நண்பன்' திரைப்படம் என்ற தகவல் பலரும் அறிந்ததே!
'3 இடியட்ஸ்' படத்தின் கதை சேத்தன் பகத் எழுதிய 'ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்' நாவலை மையப்படுத்தியதுதான்.
'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் ரீமேக் திரைப்படமென்றால் அது 'ஜனநாயகன்'தான். இதுபோல, விஜய் நடித்த பல ஹிட் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன.

கத்தி திரைப்படத்தை தெலுங்கில் 'கைதி நம்பர் 1' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்கள். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த 'சிவகாசி' படத்தை தெலுங்கில் 'விஜயதசமி' என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார்கள்.
இதுமட்டுமின்றி, விஜய்க்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த 'திருமலை' திரைப்படம் வங்கதேச நாட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதுபோல, 'திருப்பாச்சி', 'பூவே உனக்காக', 'துப்பாக்கி', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற விஜயின் ஹிட் திரைப்படங்களும் பிற மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.
விஜயின் ரீமேக் படைப்புகளில் உங்களுடைய ஃபேவரிட் என்னவென்பதை கமெண்டில் பதிவிடுங்கள்...




















