நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளி...
திருப்பத்தூர் தொகுதி: அமைச்சர் பெரியருப்பனை எதிர்த்து இலங்கை எம்.பி-யின் மாமனாரா?
அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக இலங்கை எம்.பி-யின் மாமனாரைக் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகப் பரவி வரும் தகவல் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிவகங்கை திமுக மாவட்டச் செயலாளரான கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திருப்பத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.
அதிலும் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை விட 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.
கடந்த தேர்தலில் இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மருது அழகுராஜ், தற்போது திமுக-வில் இணைந்து விட்டார்.
'வருகின்ற தேர்தலில் எங்கள் அண்ணன் பெரியகருப்பனை எதிர்த்து நிற்கச் சரியான ஆளே இல்லை, அதனால் 5-வது முறையாக வெற்றி பெறுவார்' என்று திமுகவினர் பெருமையமாகக் கூறி வரும் நிலையில்தான், அதிமுக சார்பில் பொன் மணிபாஸ்கரன் போட்டியிட உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

மாவட்ட கவுன்சில் சேர்மனான பொன் மணிபாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகியாகவும் உள்ளார். தொழிலதிபரான இவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பதால் திருப்பத்தூர் தொகுதி அவருக்குத்தான் என்று அதிமுகவினர் கூறுகிறார்கள்.
அவரும் சமீபகாலமாக திருப்பத்தூர் தொகுதிக்குள் வலம் வந்து கட்சியினரைச் சந்தித்து வருகிறார். முன்னாள் எம்.எல்.ஏ உமாதேவனும் இத்தொகுதியை எதிர்பார்த்தாலும் அமமுக-வுக்கு சென்று வந்தது கட்சியில் அவருக்கு மைனசாக உள்ளது.
அதே நேரம், "மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரையை வைத்துக்கொண்டு, தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வரும் திருப்பத்தூரை பாஜக-வுக்கு தள்ளிவிடுவோம், ரிஸ்க் எடுக்க வேண்டாம் " என்று அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் யோசித்து வருகிறாராம்.
இப்படியொரு பேச்சு பரவி வரும் நிலையில்தான் பாஜக சார்பில் திருப்பத்தூரிலுள்ள பிரபல தனியார் கல்லூரி நிர்வாகி ராமேஸ்வரன் என்பவர் தொகுதியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருவதாகச் சொல்கிறார்கள்.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகியாக இருந்த ராமேஸ்வரன் கடந்த 2023 ஆம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார்.
இவருடைய மகளை இலங்கை முன்னாள் அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் எம்.பி-யுமான ஜீவன் தொண்டமானுக்குச் சமீபத்தில் மணம் செய்து கொடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் திருப்பத்தூரில் நடந்த இத்திருமண விழாவுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உட்பட இலங்கை அமைச்சர்களும், அமைச்சர் பெரியகருப்பன், கனிமொழி, கார்த்தி சிதம்பரம், பிரேமலதா, அண்ணாமலை உள்ளிட்ட தமிழக அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பொருளாதார ரீதியாகவும், இந்தியாவிலும் இலங்கையிலும் அரசியல் ரீதியாகவும் செல்வாக்குள்ள இவர், பெரியகருப்பனை எதிர்த்துப் போட்டியிட வைக்க பாஜக தமிழகத் தலைமையில் முயற்சித்து வருகிறார் என்கிறார்கள்.
பிரதான கட்சிகள், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை அறிவிக்கும் வரை சிவகங்கை மாவட்ட அரசியலில் இதுபோன்ற பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.















