Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
`தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளும் ஒன்று சேர்கிறதா?' - இணைப்புக்கு அஜித் பவார் ஆர்வம்!
மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கடந்த 2023-ம் இரண்டாக உடைந்தது. இதனால் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் துணை முதல்வர் அஜித் பவார் பக்கம் சென்றனர். எனவே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அஜித் பவார் அணிக்கு சென்றுவிட்டது. இப்போது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வேறு சின்னத்துடன் தேர்தலில் போட்டியிடுகிறது. கட்சியில் ஏற்பட்ட பிளவு பவார் குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அஜித் பவார் மற்றும் சரத் பவார் குடும்பமும் பேசாமல் போனது.
தற்போது மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சி தேர்தல் நடந்து வருகிறது. புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கோட்டையாக இருந்துள்ளது. எனவே அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இங்கு தனித்து போட்டியிடுகிறது.

இங்கு முதல் முறையாக சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. ஆரம்பத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கடிகாரம் சின்னத்தில் சரத்பவார் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்று அஜித் பவார் நிர்ப்பந்தம் செய்தார்.
ஆனால் சரத் பவார் அதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து இரு அணிகளும் அவரவர் சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் முதல் முறையாக இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
அஜித்பவார் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். இப்போது இரு அணிகளும் ஒன்றாக இருக்கிறது. பவார் குடும்ப பதட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொண்டர்களும் அதையே விரும்புகின்றனர்''என்று தெரிவித்தார்.
அதோடு புனே மாநகராட்சி தேர்தலுக்கு பொது செயல்திட்டத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் முதல் முறையாக அஜித் பவாரும், சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.
இரு அணிகளும் இணைவது குறித்து சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறுகையில், ''கட்சி உடைந்த பிறகு முதல் முறையாக இரு அணிகளும் தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்ந்திருக்கிறது. இது புனே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு மட்டும்தான். அடுத்து என்ன நடக்கிறது என்பதை பிறகு பார்க்கலாம்''என்று தெரிவித்தார்.
அஜித் பவார் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு இருந்த பேனரில் அஜித் பவார் மற்றும் சரத் பவார் ஆகியோரின் புகைப்படம் இருந்தது. அதனை சுட்டிக்காட்டிய நிருபர்கள் இது நிரந்தரமாக இருக்குமா என்று கேட்டனர்.
``அதற்கு உங்களது வார்த்தை உண்மையாகலாம்" என்று சரத்பவார் தெரிவித்தார்.
அஜித்பவார் கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே அளித்த பேட்டியில், ``இரு அணிகளும் இணைவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எந்த முடிவாக இருந்தாலும் இரு கட்சிகளும் இணைந்து எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். கடந்த மாதம் அதானி நிறுவனத்தின் தலைவர் கெளதம் அதானி பாராமதிக்கு வந்திருந்தார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல் முறையாக சரத்பவாரும், அஜித்பவாரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அதோடு இதில் சரத் பவார் தனது வீட்டில் வைத்த விருந்தில் அதானியும், அஜித் பவாரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த விருந்துக்கு பிறகுதான் புனேயில் சரத் பவார் கட்சியுடன் கூட்டணி வைக்க அஜித் பவார் சம்மதம் தெரிவித்தார். இத்தேர்தலை தொடர்ந்து எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இவ்விவகாரத்தில் சுப்ரியாவும், அஜித்பவாரும் முடிவு எடுப்பார்கள் என்று சரத்பவார் கூறிவிட்டார். ஆனாலும் கட்சியை அஜித் பவார் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.!


















