நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளி...
`இது பாதிக்கிணறு தாண்டிய கதை மாதிரிதான்!' - உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமும் பின்னணியும்!
23 ஆண்டுகாலப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் என வந்தவர்கள் எல்லாம் கொடுத்த வாக்குறுதிதான். ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் அமைதியாகி விடுவார்கள். இப்போது காலம் கனிந்து வந்திருக்கிறது. 'தேர்தல் நெருங்குவதால் அரசு ஊழியர்களின் குடும்ப ஓட்டுகளை கவர்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்' என்று ஒரு தரப்பு சொல்கிறது. எதுவாக இருந்தாலும் இது நல்ல செய்தி. 5.82 லட்சம் அரசு ஊழியர்கள் இதனால் பயன் பெறுவார்கள். அவர்களின் குடும்பம் கொஞ்சம் நிம்மதியடையும்.
இதுநாள் வரை இருந்த நடைமுறையை மாற்றி, தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இது 2003-க்கு முந்தைய பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போலவே இருந்தாலும் இதிலும் சில குறைபாடுகள் இருப்பதாகக் கருத்துத் தெரிவிக்கிறார்கள், தொழிற்சங்கத்தினர்.

பழைய ஓய்வூதியத் திட்டம்
1957 வரை தமிழகத்தில் 'எப்ளாய்மெண்ட் பிராவிடன்ட் பண்ட்' என்ற திட்டம் நடைமுறையில் இருந்தது. ஊழியரின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும். அரசு 10% போடும். ஊழியர் ஓய்வு பெறும்போது இரண்டையும் சேர்த்து தருவார்கள். 1957-க்குப் பிறகு, பொதுவான பிராவிடண்ட் பண்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டப்படி, 30 ஆண்டுகள் பணி செய்து முடித்தவர்களுக்கு, இறுதியாக வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். இதுதவிர அகவிலைப்படி உயர்த்தப்படும் போதும், சம்பளக் கமிஷன் பரிந்துரைகளின் போதும் ஓய்வூதியம் உயரும். ஓய்வூதியர் இறந்துவிட்டால், கணவர் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக செல்லும். ஒருவேளை, குடும்ப ஓய்வூதியம் பெறும் கணவன் அல்லது மனைவி இறந்துவிடும் பட்சத்தில், மகனுக்கு 18 வயது நிறைவடையாமல் இருந்தாலோ, மகளுக்கு திருமணமாகாமல் இருந்தாலோ குடும்ப ஓய்வூதியம் தொடரும்.
தவிர, இதிலிருக்கும் முக்கியமான அம்சம், ஊழியரின் பங்களிப்பு இதில் இருக்காது. அரசே முழுமையாக ஓய்வூதியத்தை வழங்கும். ஓய்வூதியத்திற்கு என்று ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையை ஊழியர் குறிப்பிட்ட சமயங்களில் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும். ஒருவர் சம்பளத்தில் ஓய்வூதியமாக மாதம் 10,000 ரூபாய் பிடிக்கப்படுகிறது என்றால், 6 மாதம் கழித்து இந்த 60,000 ரூபாயில் 60% லோனாக எடுத்துக்கொள்ள முடியும். இந்தத் தொகையை வட்டியில்லாக் கடனாக மாதாமாதம் கட்டிக்கொள்ளலாம். 15 ஆண்டுகள் பணி செய்து முடித்தவுடன், அதுவரை ஓய்வூதியத்துக்காக கட்டிய ஊழியர் பங்களிப்பு எவ்வளவு சேர்ந்திருக்கிறதோ அதில் 60% தொகையை திரும்பக் கட்டத் தேவையில்லாத லோனாக எடுத்துக்கொள்ளலாம். அதுபோக மீதமிருக்கும் ஊழியர் பங்களிப்பை ஓய்வுபெறும்போது மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். இதற்கு Non-Withdrawable என்று பெயர். ஓய்வூதியம் வழங்குவது முழுக்க முழுக்க அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது.

தவிர இன்னொரு வசதியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உண்டு. ஒருவர் ஓய்வுபெறும்போது 40,000 சம்பளம் வாங்குகிறார் என்றால் அவருக்கு ஓய்வூதியமாக 20,000 கிடைக்கும். ஓய்வூதியம் பெறும்போதே, ஏதேனும் அவசரத்தேவை ஏற்படும்போது அந்த 20 ஆயிரத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை 15 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டு மொத்தமாக ஊழியர் எடுத்துக்கொள்ள முடியும். பிறகு அந்த 20 ஆயிரத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையை கழித்துவிட்டு மாதாமாதம் ஓய்வூதியம் தருவார்கள. 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் 20,000 அவருக்கு ஓய்வூதியமாக வந்துவிடும். இதற்கு commutation என்று பெயர். ஓய்வூதியரின் அவசரத் தேவைக்கு இது உதவும். இந்த பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.
2003-ல் புதிய பொருளாதாரக் கொள்கை வந்தபிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடக்கிவிட்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இதில் அனைத்து மாநிலங்களும் இணைய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10% பிடித்தம் செய்து, தங்கள் பங்களிப்பாக 10% சேர்த்து மத்திய அரசுக்கு வழங்கவேண்டும். இந்த நிதியை நிர்வகிக்க 11பேர் கொண்ட, Pension Fund Regulatory and Development Authority என்ற ஆணையத்தை உருவாக்கியது மத்திய அரசு. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் 11 பேரில் 7 பேர் கார்பரேட் நிறுவனங்களை நடத்தும் முதலாளிகள், தொழிற்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர், பிற மூவர் அதிகாரிகளாகவோ அரசுப் பிரதிநிதிகளாகவோ இருப்பார்கள். இந்தக்குழு அந்த பணத்தை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்யும். 2003-ல் இருந்து இதுவரைக்கும் இந்த ஆணையத்திடம் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை, 33 லட்சம் கோடி.
புதிய ஓய்வூதியத் திட்டப்படி, ஊழியர் ஓய்வு பெற்றவுடன், அதுவரை ஊழியரும் மாநில அரசும் செலுத்திய தொகை, அதன்வழி கிடைத்த ஷேர் மார்க்கெட் லாபம் எல்லாவற்றையும் கணக்கிட்டு, மாதாமாதம் பென்சன் வழங்கப்படும். இதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்தமாதிரி ஊழியர்கள் தங்கள் பங்களிப்பைத் திரும்பப் பெறமுடியாது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளும் இணைந்துவிட்டன, தமிழக அரசைத்தவிர.

புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, 'நாங்கள் மத்திய அரசோடு இணைய மாட்டோம். எங்கள் பணத்தை ஏன் உங்களுக்குத் தரவேண்டும், நாங்களே எங்கள் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டப்படி ஓய்வூதியம் கொடுத்துக்கொள்கிறோம்' என்று கூறி, Pension Fund Regulatory and Development Authority ஆணையத்தை ஏற்க மறுத்துவிட்டார். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் தொகையையும் அரசு வழங்கும் தொகையையும் சேர்த்து மாநில அரசே நிர்வகிக்கத் தொடங்கியது.
எல்.ஐ.சி உள்ளிட்ட சில நிறுவனங்களில் அந்தத் தொகை முதலீடு செய்யப்பட்டது. சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தபோது தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து அதையெல்லாம் வாபஸ் பெற்றார்கள். இன்றைக்கு அந்தத் தொகை கிட்டத்தட்ட 86,000 கோடி.
ஒன் டைம் செட்டில்மெண்ட்
புதிய ஓய்வூதியத் திட்டப்படி நாங்களே ஓய்வூதியம் வழங்குகிறோம் என்று சொன்ன தமிழக அரசு, அதைச் செய்யவேயில்லை. அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது, ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்த 10%, அரசின் பங்களிப்பு 10% இரண்டையும் சேர்த்து, 7% வட்டியுடன் ஒன் டைம் செட்டில்மெண்டாக கொடுத்து கணக்கை முடித்து விட்டார்கள். உண்மையைச் சொன்னால் இது பெயருக்குத்தான் பென்சன் ஸ்கீம். ஆனால் பைனான்ஸ் கம்பெனி மாதிரி தான் இயங்கியது.
ஆனால், Pension Fund Regulatory and Development Authority அமைப்போடு தமிழக அரசு சேராததில் ஒரு நல்ல விஷயம் உண்டு. அதில் இணைந்திருக்கும் பட்சத்தில் தமிழகத்திருலிந்து ஒரு பெரிய தொகை மத்திய அரசின் நிர்வாகத்துக்குச் செல்லும். இன்றைக்கு 86,000 கோடியை தமிழக அரசு சுயமாக நிர்வகிக்கிறது. அந்த அமைப்பில் சேர்ந்திருந்தால் இந்தத் தொகையை அந்த அமைப்பிடம் செலுத்தியிருக்க வேண்டும். இது ஒன்று.

இன்னொரு விஷயமும் இருக்கிறது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட், இமாச்சல் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடந்தபோது பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளுமே பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தன. வாக்குறுதி அளித்த கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்துவிட்டன. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குச் செல்ல கொள்கை முடிவு எடுத்து அறிவித்தும் விட்டன. ஆனால் மத்திய அரசு அதை நிராகரித்து விட்டது.
Pension Fund Regulatory and Development Authority அமைப்பில் போட்ட பணத்தை திருப்பித்தர மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டது. அதனால் அறிவிக்கப்பட்டும் அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தமிழக அரசு Pension Fund Regulatory and Development Authority அமைப்பில் சேராததால் இப்போது சுயமாக முடிவெடுக்க முடிகிறது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 2.80 லட்சம் பேர் ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தால் 5.82 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
சரி, இந்த தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சாதக பாதகங்கள் என்னென்ன?
"23 ஆண்டுகாலப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள். ஆனால், இது பாதிக்கிணறு தாண்டிய கதை மாதிரிதான். தற்போது கொண்டு வந்துள்ள உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பழைய மாதிரியே வாங்கும் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வரும். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் ஊழியரின் பங்களிப்பு கட்டாயமாக இருக்கிறது. ஊழியர் சம்பளத்தில் 10%, இதற்காக பிடித்தம் செய்யப்படும். அந்த வகையில் இதுவும் புதிய ஓய்வூதியத் திட்டம் போல பங்களிப்புத் திட்டமாகவே இருக்கிறது..." என்கிறார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் சீனிவாசன்.
"Commutation, Non-Withdrawable போன்ற சலுகைகளும் இதில் இல்லை. அதுவும் எங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. குறைவான சம்பளம் வாங்கும் தொகுப்பூதிய ஊழியர்கள் 40-50 வருடங்கள் வேலை செய்துவிட்டு 2000 ரூபாய் ஓய்வூதியம் வாங்குகிறார்கள். இதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இதையும்கூட தொடர்ந்து போராடிதான் பெற்றிருக்கிறோம். மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமே 7000 ரூபாய் என்று தீர்மானித்திருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு, அவர்களையும் இந்தத் திட்டத்துக்குள் கொண்டு வந்து நியாயமான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்..." என்கிறார் சீனிவாசன்.

"ஏற்கெனவே அரசு கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு 13,000 கோடி கூடுதல் செலவாகும் என்கிறார்கள். இது பெரிய சுமையில்லையா?"
" நிச்சயமாக இது சுமையில்லை. தமிழக அரசு உள்நாட்டு உற்பத்தியில் 8.6% வளர்ச்சியடைந்து இருப்பதாக மத்திய அரசே சொல்லியிருக்கிறது. பொருளாதாரத்தில் அகில இந்திய அளவில் இரண்டாவது மாநிலமாக தமிழகம் வளர்ந்திருக்கிறது. அதனால் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தருவது கூடுதல் சுமையல்ல. ஊழியர்கள் நிம்மதியாக வேலை செய்தால் இன்னும் மாநிலம் வளரும். தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கிற திட்டம் திருப்தியளிக்கிறது. அதில் ஊழியரின் பங்களிப்பு பெறுவதை தவிர்க்க வேண்டும், commutation, Non-Withdrawable சலுகைகளை வழங்க வேண்டும். குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மினிமம் ஓய்வூதியத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். முதல்வர் கருணையோடு இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் சீனிவாசன்.
புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 22 வருடங்களில், ஓய்வுபெற்றவர்கள், பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, சுமார் 54,000. இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல் ஒன்-டைம் செட்டில்மெண்ப் பெற்றுவிட்டார்கள். கொஞ்சம் பேர் மட்டும் பிற்காலத்தில் நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் செட்டில்மெண்ட் வாங்காமல் காத்திருக்கிறார்கள். தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தப்பட்ச பணிக்காலமாக 10 ஆண்டுகளும் முழுப் பணிக்காலமாக 30 ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டக் காலத்தில் பணியில் சேர்ந்து ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்ற 48,000 பேருக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

"2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்து இதுநாள் வரை ஓய்வுபெற்று செட்டில்மெண்ட் முழுவதையும் வாங்கியவர்களுக்கும் கருணை ஓய்வூதியம் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். உண்மையிலேயே இதைப் பாராட்டி வரவேற்க வேண்டும். ஒன்டைம் செட்டில்மெண்டாக எவ்வளவு பணம் கைக்குவந்தாலும் ஐந்தாறு மாதங்களில் அது காலியாகிவிடும். அதற்கென்று ஏதோ ஒரு தேவை வந்துவிடும். மாதாந்திரம் ஓய்வூதியம் கிடைக்கும்போது அவர்களுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படும். 40 லட்ச ரூபாய் செட்டில்மெண்ட் வாங்கியவர், சில ஆண்டுகளில் ஒன்றுமே இல்லாமல் கூலி வேலைக்குச் சென்றதை நான் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இது மிகச்சிறந்த முன்னெடுப்பு. இதனால் சுமார் 48,000 பேர் இதனால் பயன்பெறுவார்கள்..." என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சே.பிரபாகரன்
"ஆனாலும் இது முழுமையானதல்ல. இந்த ஓய்வூதியத் திட்டத்திலும் ஊழியருடைய பங்களிப்பு 10% தொடர்கிறது. குறைந்தபட்ச பணிக்காலகத்தை நிறைவு செய்யாத ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு என்று கூறப்படவில்லை. ஊழியர் பங்களிப்பு பெறுவதை மட்டும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் நிச்சயமாக இது பழைய ஓய்வூதியத் திட்டம் தான் என்பதில் சந்தேகமில்லை. முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் கோரிக்கை வைத்துள்ளோம். பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்..." என்கிறார் பிரபாகரன்.
தினந்தோறும் புதிய புதிய பெயர்களில் திட்டங்களை அறிவிக்கிறது, தமிழக அரசு. அதற்காக புதிய பணியிடங்களை உருவாக்குவதில்லை. போதாக்குறைக்கு காலிப் பணியிடங்கள் ஏராளம் இருக்கின்றன. மிகுந்த அயற்சியோடு அரசு ஊழியர்கள் பணியாற்றும் சூழலில், தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் அவர்களுக்கு உற்சாகமூட்டும்.
அது மக்கள் பணியில் எதிரொலித்தால் நல்லது!




















