விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் - பிரபலமாகும் `ஏர்போர்...
ஆவின்: கெட்டுப்போன வெண்ணெய் கொள்முதல்; கோடிக்கணக்கில் இழப்பு - வலுக்கும் சிபிசிஐடி விசாரணை கோரிக்கை
`மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய், ஆவின் நிர்வாகத்துக்கு ரூ. 4 கோடி நிதியிழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மோசடியை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, "மதுரை ஆவினுக்கு வடமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 81 டன் வெண்ணெய் கெட்டுப்போய் மிகப்பெரிய நிதியிழப்பை ஏற்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, இதில் ஆவின் இணைய அதிகாரிகளும், மதுரை மாவட்ட ஆவின் அதிகாரிகளும் கூட்டணி அமைத்து மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வருகிறது.
இந்த மோசடி குறித்து ஆவினில் உள்ள விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை இன்றி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஏனெனில், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் விற்பனைக்கு தேவையான அளவை விட கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டுவரும் நிலையில் வெண்ணெய் கையிருப்பு அதிகமான நிலையிலும் நெய் உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வரை தமிழ்நாடு முழுவதிலும் தட்டுப்பாடாகவே இருந்து வருகிறது.

அதே சமயம் கையிருப்பில் இருந்த வெண்ணையை நெய்யாக உற்பத்தி செய்து சந்தைக்கு விநியோகம் செய்யாமல், வெண்ணையை வெளிச் சந்தையில் அப்படியே விற்பனை செய்து கமிஷன் பார்க்கும் வேலைகளை ஆவின் அதிகாரிகள் ஜரூராக செய்து வருவது கவலைக்குரியதாகும்.
குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், அம்மாப்பாளையம் பால் பொருட்கள் உற்பத்தி பண்ணையில் மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 250 மெட்ரிக் டன் வெண்ணையும், மற்ற சில மாவட்ட ஒன்றியங்களின் பால் பண்ணைகளில் இருந்து சுமார் 250 மெட்ரிக் டன் வெண்ணையும் சேர்த்து சுமார் 26 கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மெட்ரிக் டன் வெண்ணையை NCDFI eMarket மூலம் ஆவின் நிர்வாகம் விற்பனை செய்துள்ளது நமது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது.
ஏனெனில் பால் உற்பத்தி போக உபரியாக இருக்கும் வெண்ணெய் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை பதப்படுத்தி பயன்படுத்தலாம் எனும் போது, 5 மாதத்திற்குள் அதனை அவசர, அவசரமாக NCDFI eMarket மூலம் விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஆவின் அதிகாரிகளுக்கு ஏன் வந்தது?
அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் சுமார் 500 டன்னுக்கு மேல் வெண்ணெய் கையிருப்பு இருந்துள்ள நிலையில் வடமாநிலத்திலிருந்து மதுரை ஆவினுக்கு வெண்ணெய் கொள்முதல் செய்திருப்பது முழுக்க, முழுக்க ஆவினை சுரண்டிய ஆவின் இணையத்தில் (தலைமையகம்) உள்ள நிதிப்பிரிவு, தரக்கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் மற்றும் மதுரை ஆவினில் உள்ள முக்கிய அதிகாரிகளின் திட்டமிட்ட கூட்டுக் கொள்ளை என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆவின் பால் பண்ணைகளிலும், பால் பொருட்கள் உற்பத்தி பண்ணைகளிலும் வெண்ணெய், பால் பவுடர் (Skimmed Milk Powder) எவ்வளவு கையிருப்பில் உள்ளது என்கிற விவரங்கள் இணைய அதிகாரிகளுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் சூழலில், இந்த நிதியிழப்பை ஏற்படுத்திய மோசடி செயல் ஆவின் அதிகாரிகளின் திட்டமிட்ட சதி என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே ஆவினில் கையிருப்பில் இருந்த பல்லாயிரம் டன் பால் பவுடர் மற்றும் வெண்ணையை விற்பனை செய்து விட்டு மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுவதாக கூறப்படும் போலியான கூட்டுறவு பால் நிறுவனங்களில் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பால் பவுடர் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்து கோடிக்கணக்கில் கமிஷன் பார்த்து ஆவினுக்கு நிதியிழப்பை ஆவின் அதிகாரிகள் ஏற்படுத்தியிருந்ததால், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் எங்கள் சங்கத்தின் சார்பில் பலமுறை புகார் அனுப்பியும் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மீண்டும் அது போன்ற மோசடி செயலை ஆவின் அதிகாரிகள் துணிச்சலுடன் செயல்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு முழுமையாக வழங்காத ஆவின் நிதிப்பிரிவு அதிகாரிகள், பால் உற்பத்திக்கு பயன்படுத்த தேவையான வெண்ணையை மொத்தமாக விற்பனை செய்து அதிலும் ஜிஎஸ்டி மோசடி செய்திருப்பதாகவும் வரும் தகவல்கள் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
கையிருப்பில் வெண்ணெய் இருந்தும் வட மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் யார் என்பதை கண்டறிந்து ஆவினுக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த இழப்பையும் அவர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்வதோடு, அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


















