BB Tamil 9: "வினோத் மேல பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்; ஆனா, நீ.!"...
இஸ்ரோவின் பாகுபலியில் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் 'BlueBird Block-2' எதற்காக இந்த செயற்கைக்கோள்?
தகவல் தொடர்பு சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அமரிக்காவின் BlueBird Block-2 செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிச.24) ஏவப்பட்டிருக்கிறது.
அமரிக்காவின் இந்த செயற்கைகோளை இஸ்ரோவின் LVM3 -M6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

இஸ்ரோ
இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது தளத்தில் இன்று காலை 8.54 மணிக்கு LVM3 -M6 ராக்கெட் ஏவப்பட திட்டமிட்டிருந்தது.
ஆனால் ஒரு சில காரணங்களால் 90 விநாடிகள் தாமதத்திற்கு பின்னர் ராக்கெட் ஏவப்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட ராக்கெட் 15 நிமிடம் 62 வினாடிகளில் 520 கி.மீ உயரத்தில் உள்ள புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
BlueBird Block-2 செயற்கைக்கோளின் திட்டம் என்ன?
இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் BlueBird Block-2 தான்.
இதன் எடை 6100 கிலோ என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தலைமையிடமாகக்கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள BlueBird Block-2 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மதிப்பில் இந்த செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இது.
விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது.
எந்த கூடுதல் சாதனங்களும் (dish, antenna, special receiver) இல்லாமல், சாதாரண 4G & 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைப்பு கொடுப்பதுதான் இதன் பிரதான நோக்கம்.
காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், பாலைவனம் போன்ற இடங்களில் மொபைல் டவர் இல்லாவிட்டாலும் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்
ப்ளூ பேர்ட் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் LVM3-M6 ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM வகை ராக்கெட்டாகும்.
இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட ராக்கெட்டில் திட, திரவ மற்றும் கிரையோஜனிக் அடுக்குகள் உள்ளன.
சந்திரயான் 1, சந்திரயான் 2 போன்ற விண்கலன்கள் இதே LVM3 ராக்கெட் மூலம் தான் ஏவப்பட்டிருந்தது.

இஸ்ரோ தலைவர்
LVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன்,
"இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும்.
இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.
இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
மோடி பாராட்டு
LVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். "இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் BlueBird Block-2 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது.
உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது.
இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
இதற்காக கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது" என்று மோடி பாராட்டியிருக்கிறார்.



















