கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album
காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை
சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குதல், குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.

அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, "சிவகங்கை மாவட்டத்தில் 12,500 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 5.35 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, 'சைக்கிள்கள் வழங்குவது பிற்பட்டோர் நலத்துறை, வாங்குவது பள்ளி கல்வித்துறை' என்று தெரிவித்தார். அதில் சிறு திருத்தம், கொடுப்பது முதல்வர் ஸ்டாலின், வாங்குவது பள்ளி மாணவர்கள். இதில், மாணவர்கள் விட 57,000 மாணவிகள் கூடுதலாக சைக்கிள்கள் பெறுகின்றனர். இதற்கு அதிக மாணவிகள் பள்ளியில் சேர்ந்து படிப்பதுதான் காரணம். இதுதான் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வெற்றி.

அக்காலக்கட்டத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். படிக்க உரிமை கிடையாது. அனைத்துப் பெண்களையும் படிக்க வைத்தது திராவிட இயக்கம். நூறு ஆண்டு போராட்டம், தியாகத்துக்கு பிறகுதான் இந்த நிலையை அடைந்தோம். ஒரு குடும்பத்தின் ஏழ்மை நிலையை போக்கக்கூடியது கல்வி. பொருள், பணத்தை மட்டும் கொடுப்பது அல்ல கல்வி, அதோடு நம்பிக்கையையும், ஆற்றலையும் தருகிறது.
அதனால்தான் இந்தியாவிலேயே அதிக திட்டங்களை கல்வித்துறையில் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் சிந்தனை ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். பெரியவர்களை விட அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள் குழந்தைகள்தான். சொல்லப்போனால், பெற்றோருக்கே குழந்தைகள்தான் ஆசிரியர்கள்.
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்ந்து பகுத்தறிவை வலியுறுத்தினர். பகுத்தறிவு என்றால் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால்தான் தெளிவான பதில் கிடைக்கும். அதனால்தான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. உலக நாடுகளோடு போட்டியிடக் கூடிய அளவுக்கு தமிழகத்தை உயர்த்த வேண்டும்.

அதற்கு மாணவர்கள் விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிகளில் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் 8 லட்சம் கல்லூரி மாணவர்கள் மாதம் ரூ 1000 பெறுகின்றனர். விரைவில் கல்லூரிகளில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் ரீல்ஸ் பார்க்கிறோம். ரீல்ஸ் வாழ்க்கை கிடையாது, அதில் வருவது எல்லாம் முக்கால்வாசி பொய்தான். ரியலாக கல்விதான் கை கொடுக்கும். கல்வியோடு சேர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கல்வியில் முன்னேறினால் குடும்ப பொருளாதாரம் முன்னேறும். அது மூலம் தமிழகமும் முன்னேறும். ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்கி மற்ற பாடங்களை நடத்த வேண்டாம். முடிந்தால் மற்ற பாடவேளைகளையும் உடற்கல்விக்கு கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்" இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேச்சு போட்டியில் பரிசு பெற வந்த எட்டாம் வகுப்பு மாணவியை துணை முதல்வர் முன் மீண்டும் பேசச் சொன்னபோது, "மாணவர்களின் பெற்றோர்கள் மதுவிற்கு அடிமையாகி மதுபானக் கடைகளில் குடியிருக்கிறார்கள், இவர்களால் எப்படி தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளர்களாக வளர்க்க முடியும்?" என்ற ரீதியில் பேசியது அங்கிருந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சங்கடப்படுத்தினாலும் துணை முதல்வர் மாணவியை பாராட்டி நூல் பரிசளித்தார். இந்தச் சம்பவம் விழாவில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


















