"திமுக-வை அழிக்க SIR எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!" - முதல்வர் ...
``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்
மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க. மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இடையே உறவு மோசமடைந்ததைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை அரசு சற்றுக் குறைத்துள்ளது.
இந்நிலையில், மும்பை பாந்த்ரா கலாநகரில் அமைந்துள்ள மாதோஸ்ரீ இல்லத்தின் மேல் ட்ரோன் பறந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ட்ரோன் மூலம் எங்களது வீட்டை கண்காணித்தது வெட்கக்கேடான செயல். ட்ரோன்கள் எங்களது வீட்டு ஜன்னல் வரை வந்துள்ளன.

“நாங்கள் அதனை வீடியோ எடுக்கும் வரை அது அங்கு கண்காணித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வீடியோ எடுப்பதை பார்த்த பிறகுதான் ட்ரோன் ஆபரேட்டர் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். வீட்டுக்குள் எட்டிப் பார்க்கவும், பார்த்துவிட்டால் உடனே விரைவாக வெளியே பறக்கவும் எந்தக் கணக்கெடுப்பு உங்களை அனுமதிக்கிறது?
எம்.எம்.ஆர்.டி.ஏ. எங்களது வீட்டை மட்டும்தான் கண்காணிக்கிறதா? கணக்கெடுப்பு நடக்கும் போது அது குறித்து குடியிருப்பாளர்களுக்கு முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு விளக்கமளித்துள்ள மும்பை மேம்பாட்டு ஆணையமான எம்.எம்.ஆர்.டி.ஏ., “பாந்த்ரா ரயில் நிலையத்திலிருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரை ‘போட் டாக்சி’ சேவை தொடங்குவதற்கான வழித்தடத்தை தீர்மானிக்க சர்வே செய்யப்பட்டதாகவும், இதற்காக போலீஸார் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

போலீஸாரும் இந்த கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா (உத்தவ்) சட்டமன்ற உறுப்பினர் அனில் பரப் கோரிக்கை விடுத்துள்ளார்.
குர்லாவிலிருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வழியாக பாந்த்ரா ரயில் நிலையம் வரை போட் டாக்சி திட்டம் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனை தினமும் சுமார் 6 லட்சம் பேர் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமலுக்கு வர உள்ளது.
















