"என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது; நிறைய கஷ்டப்பட்டோம்" - நட...
தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!
அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை.
அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர்.
அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் உக்ரம் தணித்தார்.
அவ்வாறு பிரபஞ்சத்தின் நடுக்கம் தீர்த்த பெருமானாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலமே திருபுவனம்.
மற்றுமொரு புராணத்தில் திரிபுரங்கள் எனப்படும் மூன்று அசுரக் கோட்டைகளை ஈசன் எரித்து அதனால் மக்களிடம் உண்டான நடுக்கத்தைப் போக்கியவர் என்பதாலும் இவருக்கு கம்பகரேஸ்வரர் அதாவது நடுக்கம் தீர்த்த பெருமான் என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.

கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது.
இங்கு அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறாள் அன்னை. அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.
இங்குள்ள கம்பகரேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. காண்பதற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் புராணகால சிறப்பு பெற்றது.
தமிழகத்தின் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம். வரகுண பாண்டியனுக்கு உண்டான தோஷம் நீங்கிய தலம் இந்தத் திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் ஆலயம்.
முன் வாசல் வழியே நுழைந்து ஈசனை வணங்கி, நடுக்கம் தீர்ந்தது மீண்டும் தோஷமும் நடுக்கமும் பீடிக்காத வகையில் பின்வாசல் வழியே சென்றான் என்கிறது தலபுராணம். இன்றும் அவ்வாறே நோயுற்றவர்கள் ஈசனை வழிபட்டுத் திரும்பிச் செல்கின்றனர்.

நாட்டிய கரண சிற்பங்கள், மனுநீதிச் சோழன் வரலாறு, போர்க்களக் காட்சிகள், தலைக்கோலி பட்டம் பெற்ற பெண் சிற்பம், யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமான் பெருமானும் செல்லும் சிற்பம் என இந்த ஆலயம் முழுக்கவே அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
ஏழு நிலைகள் கொண்ட பிரமாண்ட கோபுரம், சச்சிதானந்த விமானம் கொண்ட கருவறை, மண்டபங்கள், எண்ணற்ற சந்நிதிகள் என ஆலயம் பரந்து விரிந்துள்ளது.
ஆலயக் கருவறை உயர்ந்த தளத்தில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் கொண்டுள்ளது. கருவறை சந்நிதி, யானை இழுத்துச் செல்வது போன்ற ரத அமைப்புடன் அமைந்திருக்கிறது.
இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி வேறெங்கும் காண முடியாத பிரமாண்டமும் அழகும் கொண்டது. ஏழரை அடி உயரம் கொண்டு அச்சமூட்டும் வகையில் சரபர் காட்சி அளிக்கிறார். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர்.
ஞாயிறு ராகு காலத்தில் 11 வாரங்கள் தொடர்ச்சியாக 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து சரபேஸ்வரரை வணங்கினால் எல்லாவித அச்சங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும். தீய சக்திகளின் பிரச்னைகள், சத்ரு பயம், வழக்குப் பிரச்னைகள் எல்லாம் விலகி வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.

இங்கு வந்து ஈசனையும் சரபேஸ்வரரையும் வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.





















