ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏ...
திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில்: வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும்!
திருவள்ளூர், சென்னை நகருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம்.
திவ்ய தேசங்களில் முக்கியமானது. இங்குதான் பெருமாள் சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
'எவ்வுள் கிடந்தான்' என்ற பெயரில் பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திருத்தலம். சப்த ராமத்தலங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரும் திருமழிசைபிரானும் வேதாந்த தேசிகரும் மங்களாசாசனம் செய்த தலம். இங்கு சுவாமி வீரராகவன் என ஸ்ரீராமரின் திருநாமத்திலேயே எழுந்தருளியிருப்து விசேஷம்.
முன்னொரு காலத்தில் சாலிஹோத்ர முனிவர் இக்கோயிலின் குளக்கரையில் தங்கித் தவமியற்றி வந்தார். முனிவரின் கடுமையான தவத்துக்குத் திருவுளம் கனிந்த பெருமாள், வயதான அந்தணர் வடிவம் தாங்கி வந்து, 'பசிக்கிறது, அன்னம் கொடு' என்று கேட்டாராம். இருப்பதை இருபங்காக்கி அதில் ஒன்றை வயோதிகருக்குக் கொடுத்தாராம் முனிவர்.

ஆனால் அதை அருந்தியும், 'தன் பசி தீரவில்லை' என்று வயோதிகர் சொல்ல மீதம் உள்ள பங்கையும் அவருக்கே கொடுத்தாரம். அதை உண்டு பசி தீர்ந்த அந்தப் பெரியவர், 'தான் அயர்ச்சி நீங்க எவ்வுள் கிடக்க' என்று கேட்டாராம். உடனே முனிவரும் தன் ஆசிரமத்தின் உள்ளே, 'இவ்வுள்' என்று காட்டினாராம். அங்கே சென்று வயோதிகர் ஓய்வெடுத்தார்.
கொஞ்ச நேரம் கழித்து உள்ளே சென்ற முனிவர் அங்கே பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பதைக் கண்டார். சிலிர்த்தார். பெருமாளை மனம் உருகத் தொழுதார். அவருக்கு ஆசி வழங்கிய பெருமாள், 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். பெருமாளின் திருக்காட்சியே கிடைத்தபின் வேறு என்ன வரம் கேட்கத்தோன்றும்...
'இனி கலியுகம் முடியுமட்டும் இங்கே இத்திருக்கோலத்தில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்' என்று வேண்டிக்கொண்டாராம். இப்படித்தான் இந்தத் தலத்தில் பெருமாள் கோயில்கொண்டு சேவை சாதிக்கத் தொடங்கினார் என்கிறது தலபுராணம்.
வியக்கவைக்கும் கட்டடக் கலை
கோயில் வளாகத்தினுள் நுழையும்போதே சிறிய திருவடியான ஆஞ்சநேயரின் சந்நிதியை தரிசிக்க முடியும். ஆஞ்சநேயரை வழிபட்டு திருக்கோயிலுக்குள் செல்ல முயன்றால் நம்மை வரவேற்கிறது எழில் மிகு ராஜகோபுரம். இந்த ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இதில் மஹா வாஜனம், கண்டம், கபோதம் போன்ற உறுப்புக்களுடன், சுமார் ஆறடி உயரத்துக்கு உபபீடம் அமைந்து கோபுரத்தின் அமைப்பைப் பிரமாண்டமாகக் காட்டுகிறது. அதற்கு மேல் அமைந்துள்ள தாங்குதளம் வர்க பேதமாக அமைந்துள்ளது.
இதில் ஐந்து வகை அதிஷ்டானங்கள் உள்ளன. கோபுர வாயிலுக்குக் கிழக்கே, இடமிருந்து வலமாகப் பார்த்தால் தாங்குதளத்தில் பட்டிகையை ஒத்த ஓர் உபானமும், அதன் மேல் பத்ம உபானமும், அதன் மேல் ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் கொண்டு பாத பந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது.

சிற்ப நுணுக்கங்கள் அறிந்தவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் இந்த கோபுர அமைப்பு பக்தர்களுக்கு கம்பீரமான இறைவனின் திருக்கோலத்தை நினைவூட்டுகிறது.
ஏராளமான இறைவுருவங்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டு நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. கோபுர தரிசனம் கண்டு வணங்கி உள் நுழைந்தால் நாயக்கர் காலத்தில் எழுப்ப பட்ட மண்டபத்தின் தெற்கு திசை வழி வழியாக ஆலயத்துக்குள் நுழைய வேண்டும்.
இந்தக் கோயிலின் பெரிய மண்டபம் காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடுத்ததாக இருக்கும் முக மண்டபத்தில் நுழைந்தால், கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை தரிசிக்கலாம்.
இந்த இறைவனுக்கு 'எவ்வுள் கிடந்தான்' என்பது திருநாமம். கருவறையில் சாலிஹோத்ர முனிவரோடு பிரம்மனும் காட்சி கொடுக்கிறார்கள்.
பெருமாள் வஸ்திர விசேஷம்
இங்கு பெருமாளுக்கு விசேஷமான ஒரு வஸ்திரத்தை சாத்துகிறார்கள். இங்கு பெருமாளுக்கு வஸ்திரம் சாத்துவது ஒரு விசேஷப் பிரார்த்தனையாக நடைபெறுகிறது.
இந்த வஸ்திரம் வெளியே கிடைக்காது. கோயிலில் பணம் கட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். அதேபோன்று தாயாருக்கு 9 கஜம் புடவை சாத்துகிறார்கள் பக்தர்கள்.
எவ்வுள் கிடந்த பெருமாள் சந்நிதிக்கு மேற்கே (கனகவல்லித்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. நாயக்கர் காலக் கட்டுமானமாகத் தோன்றும் இந்த மண்டபம் பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரில் தொடங்கி, கோயிலின் தென்திசை மதில் சுவர்வரை நீள்கிறது.
தாயார் கனகவல்லியாக அருள்பாலிக்கிறார். ராமாவதாரக் காலத்தில் சொர்ண சீதை விக்ரகமாக அவதரித்த தாயார்தான் ஶ்ரீராமரின் தோள்சேர வேண்டிக்கொண்டு கனகவல்லியாக இத்தலத்தில் அவதரித்தார்.
திருவள்ளூரிலிருந்து 10 நிமிடப் பயணத்தில் ஈக்காடு என்னும் திருத்தலத்தில் அரசனின் மகளாக வசுமதி என்னும் திருநாமத்தோடு அவதரித்தாள் தாயார்.
அவரை ராஜ குமாரனாக வந்து பெருமாள் பெண்கேட்டு மணந்துகொண்டதாக ஐதிகம். இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் சகலவிதமான பொருளாதாரப் பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள்.
தாயார் சந்நிதிக்கு வடக்கே திருமாமணி மண்டபம் அமைந்துள்ளது, அதற்கு வடக்கே ராமர் சந்நிதியும், ராமர் சந்நிதிக்குக் கிழக்கே வேணுகோபாலன் சந்நிதியும், அதற்கு அருகே தேசிகன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன.
கோயில் மண்டபங்கள் அனைத்திலும் அழகான இறைச் சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டு பார்பவர்களுக்கு பக்தியும் கலையுணர்வும் ஒருங்கே ஊட்டுகின்றன.
சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்தக் கோயிலில் ஸ்ரீராமநவமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஸ்ரீராம ஸ்லோகம் - ஸ்ரீராம நாம பாராயணம் செய்து வழிபடுகிறார்கள்.
இங்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் முந்தினம் வந்து பக்தர்கள் தங்கி மறுநாள் முன்னோர்களுக்கு பித்ருக் கடன் செலுத்தி பெருமாளை வணங்கிச் செல்கிறார்கள். இதனால் பித்ரு சாபம் தீர்வதோடு புண்ணியங்கள் பெருகி வாழ்வில் சகலவிதமான பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள்.
நோய்கள் நீக்கும் பரிகாரங்கள்
உப்பு மிளகு வாங்கி மண்டபத்தில் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதன் மூலம் அவர்களின் சருமப் பிரச்னைகள் நீக்கும் என்பது ஐதிகம்.
இங்குள்ள திருக்குளம் ஹ்ருத்தாபனாசினி எனப்போற்றப்படுகிறது. இத்திருக்குள்த்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அணைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதம் என்கிறது தலபுராணம். மேலும் இந்தத் தீர்த்தக் குளத்தில் வெல்லம் கரைத்து வேண்டிக்கொண்டால் தீராத நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுற்றியிருக்கும் கிராம மக்கள் பலருக்கும் இந்தப் பெருமாளே குலதெய்வம் என்பதால் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டையிட்டுக் காதுகுத்தி துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நோய் நொடியின்றி சீரும் சிறப்புமாக வாழும் என்பது அவர்களின் நம்பிக்கை.
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று ஒரு முறை தரிசித்து வாருங்கள். பெருமாளின் திருவருளும் திருக்காட்சியும் நம் சிந்தையை விட்டு நீங்காமல் இருக்கும்.




















