Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA வ...
``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு
மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார்.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் மஜ்காவ் சிட்டி சிவில் கோர்ட்டிற்கு மாற்றி உத்தரவிட்டது.
இவ்வழக்கு நீதிபதி அஜானுதின் காசி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சொத்து வழக்கில் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க கோர்ட் கிளார்க் மனுதாரரிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
மனுதாரர் கோர்ட்டிற்கு வந்திருந்தபோது கோர்ட்டில் கிளார்க்காக வேலை செய்யும் வாசுதேவ் என்பவர் மனுதாரரிடம் வழக்கு குறித்து பேச செம்பூர் உணவகத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.

மனுதாரரும் அங்கு சென்றபோது இவ்வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டுமானால் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். இதில் 15 லட்சம் நீதிபதிக்கும், 10 லட்சம் தனக்கும் என்று தெரிவித்தார். ஆனால் இந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்று மனுதாரர் தெரிவித்தார்.
அப்படி இருந்தும் வாசுதேவ் அடிக்கடி மனுதாரருக்கு போன் செய்து பேசினார். அதோடு லஞ்ச பணத்தை 15 லட்சமாக குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். தொடர்ந்து வாசுதேவ் போன் செய்து பணம் கேட்டதால் இது குறித்து மனுதாரர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.
அம்மனுவை விசாரித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மனுதாரரிடம் லஞ்ச பணத்தை வந்து வாங்கிச் செல்லும்படி கூறி வாசுதேவை வரவழைக்கும்படி கூறினர். அதே போன்று வாசுதேவ் லஞ்ச பணத்தை வாங்க வந்தார். அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அதோடு கைது செய்த பிறகு வாசுதேவ் மூலம் நீதிபதிக்கு போன் செய்தனர். வாசுதேவ் நீதிபதியிடம் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். அதனை நீதிபதிக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதியும் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் நீதிபதி இன்னும் கைது செய்யப்படவில்லை.




















