Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது படிப்படியாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியால் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து 12 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மேலிடத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வோடு கூட்டணி அமைக்க உள்ளூர் தலைவர்கள் முடிவு செய்தனர்.
இக்கூட்டணிக்கு அம்பர்நாத் விகாஷ் அகாடி என்று பெயர் வைத்தனர். இதையடுத்து கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி 12 கவுன்சிலர்களையும் கட்சியில் இருந்து காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

எனவே 12 கவுன்சிலர்களையும் தங்களது கட்சிக்கு இழுக்கும் வேலையில் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் ஈடுபட்டார். இதில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் கணிசமான அளவு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில் 12 கவுன்சிலர்களும் மொத்தமாக பா.ஜ.கவில் சேர முடிவு செய்தனர். ஆனால் காங்கிரஸ் கவுன்சிலர்களை பா.ஜ.கவில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து என்று பா.ஜ.க மாநில அமைச்சர் அசிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கட்சியில் விவாதிக்கப்படும் என்றும், கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களுடன் கூட்டணி வைப்பது சரியல்ல என்றும், அவசரப்பட்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களை பா.ஜ.கவில் சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான் தவறான முடிவு எடுத்து இருப்பதாக அவரது பெயரை குறிப்பிடாமல் அசிஷ் ஷெலார் தெரிவித்தார். காங்கிரஸ் கவுன்சிலர்கள் பா.ஜ.கவில் சேரும் விழா ரவீந்திர சவான் தலைமையில் நடந்துள்ளது. ரவீந்திர சவானின் சொந்த ஊரான டோம்பிவலியில் 20 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஆவர். சிவசேனா(உத்தவ்), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தும், மிரட்டியும் வேட்பு மனுவை வாபஸ் பெற வைத்ததாக பா.ஜ.கவின் ரவீந்திர சவான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.கவில் சேர்ந்த கவுன்சிலர்கள் 12 பேரையும் பதவி நீக்கம் செய்ய கோரி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


















