``கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது... அவர் அமர்ந்தே கோஷமிடட்டும்" - நாடாளுமன்றத்தில் ...
3 உயிர்களைக் குடித்த கொரிய மோகம்; தந்தையின் மிரட்டல்.. முடிவுரை எழுதிய கேம்?- அதிர்ச்சிகர தகவல்கள்!
டெல்லி அருகில் உள்ள காஜியாபாத்தில் நேற்று காலை சகோதரிகளான நிஷிகா(16), பிராச்சி(14), பாகி(12) ஆகியோர் தாங்கள் வசித்து வந்த குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் 3 பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து கொரிய ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதோடு கொரிய நாடகங்களையும் மொபைல் போனில் பார்த்து பொழுதைக் கழித்தனர். மூவரும் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடன் தொல்லை, திருமண மிரட்டல்
விசாரணையில் சகோதரிகளின் தந்தை சேதன் குமாருக்கு ரூ.2 கோடி அளவுக்கு கடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் தனது மகள்கள் பயன்படுத்தி வந்த மொபைல் போனை பிடுங்கி அதில் அவர்களின் ஐ.டியை டெலிட் செய்துவிட்டு, அந்த போனை விற்பனை செய்துள்ளார். அதில் கிடைத்த பணத்தில் 800 ரூபாய்க்கு மின் கட்டணம் செலுத்தியிருக்கிறார். அதோடு தொடர்ந்து மொபைல் விளையாட்டில் மூழ்கி இருந்தால், மூன்று பேருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவேன் என்றும் சேதன் குமார் மிரட்டி இருக்கிறார். மேலும் பணப் பிரச்னையால்தான் மூன்று சகோதரிகளையும் பள்ளிக்கு அனுப்ப சேதன் குமார் ஆர்வம் காட்டவில்லை என்றும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மொபைல் போன்கள் தங்களிடமிருந்து பிடுங்கப்பட்டதால், மிகுந்த அதிருப்தியில் இருந்திருக்கின்றனர். `நாங்கள் இந்தியர்கள் கிடையாது. நாங்கள் கொரியாவைச் சேர்ந்தவர்கள்' எனக் கூறி வாதம் செய்திருக்கிறார்கள்.
அதோடு, ``கொரிய நாடகங்களைப் பார்க்க முடியாமலும், கொரிய ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட முடியாமலும் மூன்று பேரும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவை எடுத்துள்ளனர்'' என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சேர்ந்து செல்ஃபி எடுத்து, அதனை மொபைல் போனில் ஸ்கிரீனில் வைத்து இருந்தனர்.
தந்தைக்கு இரண்டு திருமணம்
சிறுமிகளின் தந்தை சேதன் குமார் இரண்டு முறை திருமணம் செய்துள்ளார். அவர் திருமணம் செய்த இரு பெண்களும் சகோதரிகள் ஆவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பெண்களின் மூன்றாவது சகோதரியும் சேதன் வீட்டிற்கு வந்தார். இதனால் ஏற்கனவே சேதன் திருமணம் செய்திருந்த இரண்டு பெண்களும் வீட்டை விட்டு சென்றனர். அவர்களை காணவில்லை என்று போலீஸில் புகார் செய்த பிறகு இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
சகோதரிகள் மூன்று பேரும் ஆரம்பத்தில் சாதாரண சவால்கள் இருக்கும் கொரிய விளையாட்டுகளை தங்களது மொபைல் போனில் விளையாடினர். அதில் இறுதி சவால் தற்கொலை செய்வதாகும்.
கொரியாதான் எங்கள் வாழ்க்கை
மூன்று சகோதரிகளும் எழுதி வைத்திருந்த கடிதத்தில், "கொரியாதான் எங்கள் வாழ்க்கை, அப்படியிருக்க, எங்கள் வாழ்க்கையை விட்டுப் போகும்படிச் சொல்ல உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது? நாங்கள் கொரியாவை எவ்வளவு நேசித்தோம் என்பது உங்களுக்குத் தெரியாது. இப்போது நீங்கள் அதற்கான ஆதாரத்தைப் பார்த்துவிட்டீர்கள். இப்போது கொரியாவும் கொரிய பாப் இசையும்தான் எங்கள் வாழ்க்கை என்பதில் நாங்கள் உறுதியாகிவிட்டோம். கொரிய நடிகர் மற்றும் கொரிய-பாப் குழுவை நாங்கள் நேசித்த அளவுக்கு உங்களையும் குடும்பத்தையும் நாங்கள் நேசிக்கவில்லை. கொரியாதான் எங்கள் வாழ்க்கை" என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. தந்தை கொரிய நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்காததால் அவர்கள் மிகவும் அதிருப்தியில் இருந்தனர் என்பது அவர்களின் கடிதத்திலிருந்து தெரிய வந்தது.

















