ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக...
உ.பி: தேர்வு எழுதிக்கொண்டிருந்த 12 வயது மாணவனுக்கு மாரடைப்பு: சுருண்டு விழுந்து உயிரிழந்த பரிதாபம்!
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிக அளவில் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தவர் அமய் சிங்(12). இம்மாணவன் பள்ளியில் ஆங்கில தேர்வு எழுதினான். தேர்வு எழுதி முடித்துவிட்டு விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு வந்தான். அவன் இருக்கையில் அமர்ந்தவுடன் அப்படியே கீழே சரிந்து விழுந்தான். உடனே பணியில் இருந்த சக ஆசிரியர்களும், ஊழியர்களும் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவனை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது. இது குறித்து டாக்டர் மனீஷ் சுக்லா கூறுகையில், ''மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோதே அவனுக்கு இருதய துடிப்பு நின்று இருந்தது.

அப்படி இருந்தும் நாங்கள் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு கொண்டு வர முயற்சி செய்தோம். தொடர்ந்து முயற்சி செய்தும் இருதய துடிப்பை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து மாணவன் இறந்ததாக அறிவிக்கப்பட்டான்'' என்றார்.
இளம் வயதில் மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது அவனது பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்து போன மாணவன் அவனது பெற்றோருக்கு ஒரே மகனாவார். ஒரே மகனை பறிகொடுத்த அவரின் தந்தை சந்தீப் சிங் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்.
















