BB Tamil 9: "அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?"- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான ...
``500+ மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் செய்துள்ளோம்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உடல் நலன் குறித்த கவலைகள் இன்று அதிகரித்தவண்ணம் உள்ளன. 'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப முறையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அவள் விகடன் நடத்திய ‘ஹெல்த் கான்க்ளேவ் 2025’ சென்னை எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
“தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக மக்கள் சென்றுகொண்டிருந்த நிலை மாறி, இன்று 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிகிச்சைக்காக மக்கள் தமிழ்நாடு நோக்கி வருகின்றனர். தமிழ்நாடு ‘மெடிக்கல் ஹப்’ (Medical Hub) ஆக மாறி வருகிறது” என்றார்.
இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டவர்களில் 25%, அதாவது ஆண்டுக்கு 15 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வருகின்றனர்.
“மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, இதயம் பாதுகாப்போம், சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம், பாதம் பாதுகாப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம்” என்று ஏராளமான மேம்பாட்டு திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் இரண்டரை கோடி பயனாளர்களை நெருங்கியுள்ளதை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை 2024-ல் விருது வழங்கி சிறப்பித்தது. மாநில அரசின் ஒரு துறைக்கு இவ்விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தமிழ்நாட்டில் 2,200-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. அதில் பெரும்பாலான கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாது. 500-க்கும் மேற்பட்ட அத்தகைய கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் சேர்த்துள்ளோம்.
மேலும், பெண்களுக்கென்று பிரத்யேகமாக “Women’s Wellness on Wheels” என்ற தலைப்பில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
நாம் நலமுடன் வாழ நல்ல உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் அவசியம். அதிலும் நடைப்பயிற்சி மிகவும் முக்கியம்.
நான் தினமும் 14 முதல் 15 கிமீ நடப்பேன். 2004-ல் நடந்த ஒரு விபத்துக்குப் பிறகு மருத்துவர்கள் “என்னால் நடக்கவே முடியாது” என்றார்கள். இன்று நடப்பது மட்டுமல்லாமல் சிரசாசனம் வரை செய்கிறேன்.
165 மாரத்தான்களில் ஓடியுள்ளேன். இரண்டு ஆண்டுகளில் 25 மாரத்தான்கள் ஓடி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில், மூன்று ஆண்டுகளில் 50 மாரத்தான்கள் ஓடி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில், நான்கு ஆண்டுகளில் 75 மாரத்தான்கள் ஓடி உலக சாதனையிலும் இடம் பெற்றுள்ளேன்," என்று தனது உடல்நல அக்கறையைப் பகிர்ந்துகொண்டார்.

வல்லுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், பாத நலன் குறித்து நீரிழிவு பாத சிகிச்சை மருத்துவர் ராஜேஷ் கேசவன், சிறுநீரக நோய்கள் குறித்து சிறுநீரக மருத்துவர் வெங்கட் சுப்ரமணியம், மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து புற்றுநோய் மருத்துவர்கள் கிரண் குமார் மற்றும் நவீன் பத்மநாபன் ஆகியோர் பங்கேற்று, பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர்.


















