"திமுக-வை அழிக்க SIR எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்!" - முதல்வர் ...
காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று காலையில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திலும் மொத்தம் 8 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்விற்கு 5,864 ஆண்கள் மற்றும் 2,047 பெண்கள் என மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 7,911 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 5,171 ஆண்கள் மற்றும் 1,745 பெண்கள் என மொத்தம் 6,916 பேர் தேர்வெழுதினர். இத்தேர்விற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில் சுமார் 800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தென்காசியை அடுத்துள்ள இலஞ்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் செயல்பட்ட தேர்வு மையத்தில் இரு இளைஞர்கள் முறைகேடாகத் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தேர்வு மையத்திற்குள் செல்லும் தேர்வர்கள் அனைவரையும் போலீசார் முழுமையாக சோதனை செய்து செல்போன், வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எவ்வித எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இல்லாத அளவில் சோதனைக்குப் பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் இலஞ்சியில் தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் இருவர் தேர்வு அறைக்குள் செல்போன்களை கொண்டு சென்றதும் கேள்வித்தாள்களை செல்போனில் படம் பிடித்து அதை வெளியில் இருந்த நபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் அவர் அனுப்பிய பதில்கள் மூலம் கேள்விகளுக்கான பதிலை எழுதியதாகவும் தேர்வு மையத்தில் இருந்த தேர்வு மைய அலுவலர் கண்டறிந்து போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து குற்றாலம் போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் மற்றும் பாண்டியராஜ் என இரு இளைஞர்களையும், தேர்வு எழுத வெளியில் இருந்து உதவிய பெண் மல்லிகா என்பவரையும் உட்பட மூவரை காவல் நிலையம் அழைத்து சென்று தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டதில் முறைகேடு ஏதும் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.
















