சுசீந்திரம்: தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழ என்ன காரணம்? ...
`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி
இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒரு மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அங்குள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்தீர் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து வந்த காஜல் என்ற 12 வயது மாணவி பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்தார். உடனே அம்மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்துள்ளார். அதாவது நின்று உட்கார்ந்து எழ வேண்டும்.
மாணவியிடம் பேக்கை கூட கீழே வைக்க விடாமல் பேக்கோடு சிட் அப் செய்யும் படி செய்ய வைத்துள்ளார். மாணவி மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் தனது தாயாரிடம் தனது முதுகு பகுதியில் கடுமையாக வலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அதோடு ஆசிரியை கொடுத்த தண்டனை குறித்தும் தெரிவித்துள்ளார். காஜலை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவரை மும்பையில் உள்ள ஜெ.ஜெ.மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குக் காரணமான பள்ளி மீதும்ம், ஆசிரியை மீதும் வழக்கு பதிவு செய்யாதவரைப் பள்ளியை திறக்க விடமாட்டோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா எச்சரித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி நிர்வாகி சச்சின் மோரே கூறுகையில், உயிரிழந்த மாணவி ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவருக்கு இது போன்ற தண்டனை கொடுத்திருக்கக்கூடாது'' என்று கூறினார். அதோடு அவரது கட்சியினர் பள்ளிக்குப் பூட்டு போட்டனர்.

காஜலின் தாயார் இது பற்றி கூறுகையில்,எனது மகள் பள்ளிப்பையை முதுகில் சுமந்து சென்றபோது, சிட் அப் செய்யச் சொன்னதாக கூறினார். காஜல் வீட்டிற்கு வந்தவுடன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினாள். தனக்கு கழுத்தில் இருந்து கீழ்நோக்கி, முதுகில் வலி இருப்பதாகவும், நடக்க முடியவில்லை என்றும் சொன்னார்'' என்றார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், 'மாணவி மரணத்திற்கு ஆசிரியை கொடுத்த தண்டனைதான் காரணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தால் தவறை ஏற்றுக்கொள்வதாகச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





















