’’வானத்துல இருந்து பூமியைப் பார்த்தோம்’’ - மாணவர்களை விமானத்தில் பறக்க வைத்த நல்...
துபாயில் ஷாருக் கான் பெயரில் பிரமாண்ட கோபுரம் - மும்பையில் நடந்த கோலாகல விழாவில் நடிகர் நெகிழ்ச்சி
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கான் பெயரில் துபாயில் ஒரு பிரமாண்டமான சொகுசு குடியிருப்பு கோபுரம் கட்டப்பட உள்ளது.
"ஷாருக்ஸ் டான்யூப்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தின் அறிமுக விழா, மும்பையில் ஒரு நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட டான்யூப் குழுமத்துடன் இணைந்து ஷாருக் கான் இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
டான்யூப் குழுமத்தின் நிறுவனர் ரிஸ்வான் சாஜனுடன் ஷாருக் கான் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இந்தத் திட்டத்தின் அறிமுக விழாவை இந்தியாவில் நடத்த விரும்பியதாக ஷாருக் கான் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாவில் ஷாருக் கான் பேசியதாவது, "என் தாய் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். தனது பிள்ளைகள் வரும்போது, 'அப்பாவின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது, பாருங்கள்' என்று பெருமையுடன் காட்டுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
துபாயில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க வரும் மக்களுக்கு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்திருக்கிறார்.
"ஷாருக்ஸ் டான்யூப்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வானுயர கட்டடம், 56 மாடிகளுடன் பிரமாண்டமாக அமையவுள்ளது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படுவதற்கு சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















