BB Tamil 9: "ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.!" - விஜய் சேதுபதி
நீலகிரி: ``இந்த திட்டம் வெற்றி பெற்றால் வனங்கள் அனைத்தும் வளமாகும்'' - வனத்துறை
200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தேயிலை, காஃபி, மலை காய்கறிகளை இங்கு அறிமுகம் செய்ததுடன், அழகுத் தாவரம் என்கிற பெயரில் மேலை நாடுகளில் இருந்து பல்வேறு வகையான தாவரங்களையும் அறிமுகப்படுத்தினர்.

அதில் ஒன்றுதான் 'lantana camara' எனப்படும் உண்ணிச் செடிகள். பிரிட்டிஷ் குடியிருப்புகளில் இருந்து மெல்ல பரவி வனப்பகுதிகளில் ஊடுருவிய உண்ணிச் செடிகள், இன்றைக்கு பல்கிப் பெருகி அழிக்க முடியாத அந்நிய களைத்தாவரமாக உருவெடுத்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் யானை வழித்தடங்கள் முதல் புல்வெளிகள், பூர்வீகத் தாவரங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து வரும் இந்த உண்ணிச் செடிகளை முற்றாக அகற்றக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் தான் தேயிலை தொழிற்சாலைகளுக்கான எரிபொருளாக மாற்றும் புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறது வனத்துறை.
முதுமலை பழங்குடி மக்களுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக அவர்களை வைத்தே உண்ணிச் செடிகளை அகற்றி வருகின்றனர்.
அகற்றப்பட்ட உண்ணிச் செடிகளை இயந்திரங்களின் உதவியுடன் பொடியாக்கி கம்ப்ரஸர்கள் மூலம் கட்டிகளாக மாற்றி வருகின்றனர்.
தேயிலைத் தூள் தயாரிக்க சிறந்த எரிபொருளாக உண்ணிச்செடிகள் மாறி வருவதால், தேயிலை தொழிற்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது குறைவதுடன் ஏக்கர் கணக்கில் பரவிக்கிடக்கும் உண்ணிச் செடிகளும் அழிந்து வருகின்றன.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர்,
"நீலகிரியின் வன வளங்களை அழிக்கும் மிகப்பெரிய அழிவு சக்தியாக அந்நிய களைத்தாவரங்கள் உருவெடுத்து வருகின்றன. நம்முடைய மண்ணுக்கே உரித்தான உள்ளூர் தாவரங்களை அழித்து வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தேவைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
பார்த்தீனியம், உண்ணி உள்ளிட்ட பல அந்நிய களைத்தாவரங்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீவிரமான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் உண்ணிச் செடிகளையும் அகற்றி வருகிறோம். பழங்குடிகள் மூலம் அகற்றப்படும் உண்ணிச் செடிகளை உலர்த்தி இயந்திரங்கள் மூலம் உருளை வடிவ எரிபொருள் கட்டிகளாக மாற்றி வருகிறோம்.
ஒரு டன் எரிபொருள் கட்டி ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கூடலூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக இந்த எரிபொருள் கட்டிகளை விற்பனை செய்து வருகிறோம். டீ தூள் தயாரிக்க மாற்று எரிபொருளாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக்கப்பட்டால் வனங்கள் அனைத்தும் வளமாகும்" என்றனர்.





















