செய்திகள் :

"நீங்கெல்லாமல் ஏன் Phd படிக்கிறீங்கனு..." - பட்டமளிப்பு விழாவில் புகாரளித்த மாணவர் கூறுவதென்ன?

post image
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனின் முன்னிலையில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், ஆராய்ச்சி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாகப் புகார் மனு ஒன்றை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கொடுத்திருந்தார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து அறிவதற்காக பிரகாஷைத் தொடர்பு கொண்டோம்.

பிரகாஷ்

இதுதொடர்பாகப் பேசிய அவர், "பாரதியார் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் விடுதி ஒன்று இருக்கிறது. அதில் ஆராய்ச்சி மாணவர் ஒருவரைக் கண்காணிப்பாளராக நியமித்திருந்திருந்தார்கள். ஆராய்ச்சி மாணவர்களைக் கண்காணிப்பாளர் போன்ற பணிகளில் அமர்த்துவது சரியான விஷயம் கிடையாது என்று புகார் ஒன்றை அளித்திருந்தேன். ஆனால், அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்கும், இதர மாணவர்களுக்கும் வளாகத்திற்குள் மைதானம் இருக்கிறது. ஆனால், அதை வாடகைக்கு விடுகிறார்கள். அதனை வாடகைக்கு விடாதீர்கள் என்று பலமுறை வலியுறுத்தினோம்.

ஆனால் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. தங்களுக்கு நேரும் பிரச்னைகளை ஆராய்ச்சி மாணவர்கள் சொன்னால் அவர்களை ஆய்வறிக்கையை (thesis) முடிக்க விடாமல் செய்கிறார்கள். இந்த மாதிரி மிரட்டலான போக்குகள் பரவலாக இருக்கிறது. அதனால் ஆராய்ச்சி மாணவர்கள் பெரும்பாலான பிரச்னைகளை வெளியில் சொல்லப் பயப்படுகிறார்கள். நிர்வாகத்திடம் புகார் அளித்தால் இது மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்பதால்தான் நான் ஆளுநரிடம் புகார் அளித்தேன். ஆனால் பட்டமளிப்பு விழாவில் மற்ற மாணவர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது ஆளுநரிடம் நான் மனு அளித்தது தவறுதான். அதற்காக நான் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். ஆராய்ச்சி மாணவர்களை, ஆராய்ச்சி மாணவர்கள் போலவே நடத்துவதில்லை. அகாடமி தொடர்பான வேலைகளைத் தவிரப் பேராசிரியர்கள் தங்களது சொந்த வேலைகளுக்கும் மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பட்டமளிப்பு விழா

அதனால் ஆராய்ச்சி வேலைகளில் எங்களால் முழுவதுமாக கவனம் செலுத்த முடிவதில்லை. வளாகத்திற்குள் இரண்டு ஆதி திராவிடர் விடுதிகள் இருக்கிறது. அதனை பொது விடுதியாக மாற்றி விட்டார்கள். அதனால் ஆதி திராவிடர் மாணவர்களும் கட்டணம் செலுத்தி அங்குத் தங்கக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். Viva சமயத்தில் ஆராய்ச்சி மாணவர்களிடம் இருந்து சில பேராசிரியர்கள் பணம், நகை, பொருட்கள் போன்றவற்றைக் கேட்கிறார்கள்.

ஸ்போர்ட்ஸ் டே நடத்தி 4, 5 வருடங்கள் ஆகிறது. ஆனால் அந்த விழாவை நடத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட பணத்தை மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இந்த மாதிரியான முறைகேடுகள் நடந்துகொண்டு இருக்கிறது. சாதிரீதியான பாகுபாடுகள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொரு தலித் மாணவரும் இதனை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஒரு தலித் மாணவனை ஆய்வுக்கூடத்திற்குள் விடாமல் வெளியில் நிற்க வைத்திருக்கிறார்கள். ஏன் இவர்களெல்லாம் பி.ஹெச்.டி படிக்க வருகிறார்கள் எனச் சிலர் கேட்கிறார்கள். இம்மாதிரியான நிறைய பிரச்னைகளை ஆராய்ச்சி மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள்" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY