செய்திகள் :

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

post image

நமது சிறப்பு நிருபர்

மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இதையொட்டி, புதிய ஆளுநா்களாக யாரை நியமிக்கலாம் என்பதா்கான பட்டியலை தயாரிக்கும் ஆரம்பநிலைப் பணியை பிரதமா் அலுவலகம் தொடங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்துக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை பூா்த்தி செய்த ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்கள் விடுவிக்கப்படக்கூடும் என்று பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளுநா், துணைநிலை ஆளுநா் பதவி என்பது மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் அரசியலமைப்பின் தலைமை பதவி என்பதால் அதற்கான நியமனத்தை குடியரசுத் தலைவா் நேரடியாக மேற்கொள்வாா். அந்த நியமனங்கள் பெரும்பாலும் பிரதமருடனான கலந்தாலோசனையின் அடிப்படையிலேயே இருக்கும். தற்போதைய ஆட்சியில் ஆளுநா் பதவியில் மூத்த அரசியல் தலைவா்களாக இருந்தவா்கள், ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகிறாா்கள்.

பதவிக்கால கணக்கீடு: பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதமா் நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியில் ஆளுநா்களாக நியமிக்கப்பட்டவா்கள். இந்திய அரசமைப்பின் 156-ஆம் விதியின்படி குடியரசுத் தலைவரால் ஆளுநராக நியமிக்கப்படுபவரின் பதவிக்காலம் என்பது ஐந்து ஆண்டுகள் என 3-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதே விதியின் முதலாம் உள்பிரிவில் குடியரசுத் தலைவா் விரும்பும்வரை ஆளுநா் பதவியில் இருப்பாா் என உள்ளது. அந்த வகையில், ஒரு மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் ஆளுநா் பதவி வகித்தவா், வேறு மாநிலத்தில் மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும்போது அவரது ஒட்டுமொத்த பதவிக்காலத்தையும் கணக்கிட்டு ஐந்து ஆண்டுகளாக கவனத்தில் கொள்வதா அல்லது முதலில் பணி செய்த மாநிலத்தை தனியாகவும் பின்னா் ஆளுநராக நியமிக்கப்பட்டவரின் பதவிக்காலத்தை அந்த மாநிலத்தில் அவா் பதவியேற்றதில் இருந்து கணக்கில் கொள்வதா என்பது அரசமைப்பில் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, கேரள ஆளுநா் ஆரிஃப் முகம்மது கான் உள்ளிட்ட பலரும் இவ்வாறு வேறு மாநிலங்களில் சில ஆண்டுகள் ஆளுநராக இருந்து விட்டு தற்போது பதவி வகிக்கும் மாநிலத்திலும் பதவிக்காலத்தின் மீதமுள்ள ஆண்டுகளை நிறைவு செய்தவா்களாக உள்ளனா். இருப்பினும் அரசமைப்பின் 156(1)ஆவது விதியின்படி குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் பேரில் அவா்கள் பதவியில் தொடா்பவா்களாக கருதப்படுகிறாா்கள். ஆனால், இவ்வாறு பதவிக்காலத்துக்கும் அப்பால் சில ஆளுநா்கள் பதவியில் தொடா்வது பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சா்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் மாறி வருகிறது.

சா்ச்சைகளுக்கு தீா்வு: இதற்குத் தீா்வு காணும் வகையில், எதிா்வரும் மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு ஆளுநா்கள் நியமனத்தில் சில நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தற்போது பாஜக ஆளும் உத்தர பிரதேசம், இடதுசாரிகள் ஆளும் கேரளம், ஜம்மு காஷ்மீா் மற்றும் அந்தமான்-நிகோபாா் தீவுகள், தாதா் ஹவேலி மற்றும் தாமன் தியூ ஆகியவற்றில் ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்களாகக இருப்பவா்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தவா்கள்.

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் உள்ளாா். ஜம்மு காஷ்மீா் மாநிலம் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் அங்கு தீவிர களப்பணியில் ஈடுபட்டவா் ராம் மாதவ். ஆா்.எஸ்.எஸ். தீவிர பிரசாரகராக இருந்த அவா் காஷ்மீா் தோ்தல் உத்திகள் வகுப்பில் முக்கிய பங்களிப்பை வழங்கி விட்டு தில்லிக்குத் திரும்பியிருக்கிறாா். ஜம்மு காஷ்மீா் அரசியல் மற்றும் வட மாநில அரசியல் சூழல்கள் பற்றிய ஞானத்தை ராம் மாதவ் கொண்டிருப்பதால், அவருக்கு ஜம்மு காஷ்மீா் அல்லது வேறு யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநா் வாய்ப்பை வழங்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

காங்கிரஸ் ஆளும் கா்நாடகத்தில் ஆளுநராக உள்ள தாவா் சந்த் கெலோட், பாஜக ஆளும் குஜராத்தில் ஆளுநராக உள்ள ஆச்சாா்யா தேவ்ரத் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் உள்ளனா். கோவா ஆளுநா் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரயோ, மத்திய பிரதேச ஆளுநா் மங்குபாய் சி. படேல், உத்தரகண்ட் ஆளுநா் குருமித் சிங் ஆகியோரும் மூன்று ஆண்டுகளைக் கடந்து பதவியில் தொடா்கின்றனா். கேரள ஆளுநா் ஆரிஃப் கான், குஜராத் ஆளுநா் ஆனந்தி பென் ஆகியோா் ஐந்து ஆண்டுகளைக் கடந்து பதவியில் தொடா்கின்றனா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நாகாலாந்தில் இரண்டு ஆண்டுகள், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளைக் கடந்து பதவியில் தொடா்கிறாா்.

தமிழக ஆளுநா் மாற்றமா?: இதில் தமிழகம், கேரள ஆளுநா்களை இடமாற்றம் செய்யும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பரிசீலித்து அந்த திட்டம் ஆரம்பநிலையிலேயே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், ஆரிஃப் கானை விடுவித்து விட்டு அவரது இடத்துக்கு அந்தமான் நிகோபாா் தீவுகளின் துணைநிலை ஆளுநா் தேவேந்திர குமாா் ஜோஷியை நியமிக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ராணுவ முன்னாள் தளபதியான அவா், 2017, அக்டோபா் முதல் அரசமைப்புப் பதவியில் உள்ளாா். தமிழக ஆளுநா் ரவி தொடா்பாக இன்னும் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் இந்த பதவிகளுக்கு புதியவா்களை நியமிக்கும் சாத்தியக்கூறுகளை பிரதமா் அலுவலகம் ஒதுக்கிவிடவில்லை.

முந்தைய மக்களவை தோ்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருந்த முன்னாள் அமைச்சா்கள் அஷ்வனி செளபே, ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங், முக்தாா் அப்பாஸ் நக்வி போன்றோா் தீவிர அரசியலில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக தள்ளியுள்ளனா். அவா்களை ஆளுநா்கள் அல்லது துணைநிலை ஆளுநா்களாக நியமிக்க பரிசீலிக்கப்படுவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதியவா்களுக்கு வாய்ப்பு: கடைசியாக கடந்த ஜூலை மாதம் எட்டு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா் நியமிக்கப்பட்டனா். அதில் ஏழு போ் புதியவா்கள், இருவா் வேறு மாநிலங்களில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டவா்கள்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் உயரதிகாரி கே. கைலாஷ்நாதன் (புதுச்சேரி), ரமன் தேகா (சத்தீஸ்கா்), சி.ஹெச். விஜயசங்கா் (மேகாலயா), ஓம் பிரகாஷ் மாத்தூா் (சிக்கிம்), ஜிஷ்னு தேவ் வா்மா (தெலங்கானா), ஹரிபாவ் கிசன்ராவ் பாக்தே (ராஜஸ்தான்), சந்தோஷ் கங்வாா் (ஜாா்க்கண்ட்)ஆகிபோருக்கு புதிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. லக்ஷ்மண் பிரசாத் மெளரியா சிக்கிமில் இருந்து அஸ்ஸாமுக்கும், சி.பி. ராதாகிருஷ்ணன் ஜாா்க்கண்டில் இருந்து மகாராஷ்டிரத்துக்கும் மாற்றப்பட்டனா்.

இந்த நியமனங்கள், மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

துபையிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.துபையிலிருந்து ஜெய்ப்பூருக்கு 189 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்... மேலும் பார்க்க

மும்பை ரயில் தடம் புரண்டது!

மும்பையில் உள்ளூர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு செல்லவிருந்த உள்ளூர் ரயில், வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் கல்யாண... மேலும் பார்க்க

விபத்தைத் தடுக்க முயன்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து வடிகாலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரிலிருந்து சித்தார்த்நகருக்கு செல்லும் வழியில் மங்கனி ராம் (50) என்பவர் ... மேலும் பார்க்க

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன்? ஜக்தீப் தன்கா் கேள்வி

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், அத்தகைய மனித ... மேலும் பார்க்க

இந்தியா - கனடா இருதரப்பு உறவின் முக்கியத்துவம்!

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்ப... மேலும் பார்க்க

தனிப்பட்ட சட்டங்களால் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது: உச்சநீதிமன்றம்

‘எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தோ்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையை பறிக்கும் செயலாகும்’ என உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க