செய்திகள் :

BB Tamil 8 Day 13: சாச்சனாவின் ‘உணவு’ பிரச்னை; ஆட்டத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கிறாரா விசே?

post image
பிக் பாஸ் சீசனுக்கும் முட்டைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு சீசனிலும் முட்டை தொடர்பான சர்ச்சைகள் உத்தரவாதமாக வெடிக்கும். இந்த எட்டாவது சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே இங்கும் வெடித்தது. உணவை வைத்து பிரச்னை ஏற்படுத்துவது என்பது பிக் பாஸின் முக்கியமான ஆயுதம். எனவே அது தொடர்பான சண்டைகள் நேர்வதில் ஆச்சரியமில்லை.

ஆனால் - இந்தப் பிரச்னையை ‘கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா?’ என்கிற நீண்ட கால விவாதம் மாதிரி, நீண்ட நேரத்திற்கு இழுத்ததில் பார்வையாளர்கள் நிச்சயம் நொந்து போயிருப்பார்கள். 

‘சுருக்கமா பேசுங்க.. தெளிவாப் பேசுங்க’ என்று போட்டியாளர்களை தொடர்ந்து வலியுறுத்தும் விஜய் சேதுபதி, தானும் அதைப் பின்பற்றலாமே? ஒரு மணி நேரத்திற்கா சம்மந்தி, முட்டைப் பிரச்சினையை இழுப்பீர்கள் பாஸ்…? ஒருவேளை பிக் பாஸ் டீம் சொதப்பி விட்டதா? முதல் வாரத்தில் பாஸ் ஆன விசே, இரண்டாவது வாரத்தில் பின்னால் போகிறாரோ?!

பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 13


பிக் பாஸ் எடிட்டிங் மீது எப்போதுமே எனக்கு பிரமிப்பும் மதிப்பும் உண்டு. சற்று யோசித்துப் பாருங்கள். இத்தனை காமிராக்கள், 24 மணி நேரமும் பதிவு செய்கிறது என்றால் அதிலிருந்து ஒரு நாளில் கடல் அளவிற்கான ஃபுட்டேஜ்கள் கிடைக்கும். பார்த்தாலே தலை சுற்றும். அவற்றிலிருந்து முக்கியமான நிகழ்வுகளை கவனமாகப் பொறுக்கியெடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் மட்டும் போதாது.. ஒரு கோர்வையாக, ‘ஸ்டோரி’ போல சமைக்க வேண்டும். அதில் ஒரு ஹீரோ வேண்டும். ஒரு வில்லன் வேண்டும். சுவாரசியமாகவும் தர வேண்டும். உண்மையில் இது கற்களில் இருந்து அரிசியைப் பொறுக்குகிற சள்ளை பிடித்த வேலை. 

இந்த  நோக்கில் பிக் பாஸ் குழுவின் அசாதாரணமான உழைப்பை பல முறை வியந்திருக்கிறேன். ஆனால் நேற்று என்னவாயிற்று? ‘சம்மந்தி பிரச்சினை இதோ முடிந்து விடும்..’ என்று கொட்டாவியை மென்று கொண்டு அமர்ந்திருந்தால், ‘நீங்க சொல்லுங்க. ஹலோ. நீங்க சொல்லுங்க” என்று உணவுப் பிரச்சினையை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இழுத்துக் கொண்டிருந்தார் விசே. விட்டால் காமிராவின் வழியாக பார்வையாளர்களை நோக்கி ‘இதப் பத்தி நீங்க என்ன நெனக்கறீங்க.. ஒரு ஆட்டோ பிடிச்சு ஸ்டூடியோ வந்து சொல்லிட்டுப் போங்க.. அதுவரைக்கும் நாங்க வெயிட் பண்றோம்’ என்று கூட சொல்லி விடுவாரா என்று தோன்றி விட்டது. அத்தனை இழுவை. 

முட்டை போல் உருண்டு கொண்டேயிருந்த ‘சம்மந்தி’ பிரச்சினை


‘என்னமோ.. இன்னிக்கு நிகழ்ச்சி நடத்தற மூடே இல்ல..’ என்கிற மாதிரியே அரங்கத்திற்குள் நுழைந்த விஜய் சேதுபதி, ‘வெள்ளிக்கிழமை ஏதோ கலவரம் நடந்திருக்கு.. வாங்க என்னன்னு பார்க்கலாம்’ என்று ஆரம்பித்தார். (கடந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்வு காட்டப்படவில்லை). அது கலவரமெல்லாம் இல்லை. குழாயடிச் சண்டை. 

சம்மந்தி என்பது கேரளத்தில் செய்யப்படும் தேங்காய் துவையல் மாதிரி உணவு. (இப்பத்தான் எனக்கே தெரியும்!)  அன்ஷிதா தயார் செய்திருந்த இந்த வஸ்து ஒரு உருண்டையளவுதான் இருந்திருக்கும் போல. அசைவ உணவுப் பழக்கம் இல்லாத சாச்சனா, அதற்கு மாற்றாக சைவ உணவு சார்ந்த தொடுவுணவுகளை சற்று அதிகமான பங்கு எதிர்பார்க்கும் வழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது. ‘சின்னப் பெண்தானே?” என்று பெண்கள் அணியும் சாச்சனாவிற்கு சற்று கூடுதலாகத் தந்திருக்கிறார்கள். 

பிக் பாஸ் வீடு

ஆனால் இந்த ‘சம்மந்தி’ பிரச்சினையில் ‘தனக்கு போதுமான அளவு கிடைக்கவில்லை. அதற்கு மாறாக அன்ஷிதாவின் நண்பர்களுக்கு அதிக பங்கு போகிறது. இரண்டு முறைக்கு மேல் கேட்டும் தனக்கு தரப்படவில்லை’ என்கிற அவமானவுணர்ச்சி பொங்க, சாச்சனா வெடித்து அழுது சாப்பாட்டைக் கொண்டு போய் குப்பையில் கொட்டும் அளவிற்கு ஆத்திரப்பட்டு விட்டார். 

அந்த வீட்டிலேயே மிக குறைவான வயதுள்ளவர் சாச்சனா. அனுபவம் குறைவு. அதற்கேற்ற மனமுதிர்ச்சியைத்தான் அவரிடம் எதிர்பார்க்க முடியும். எனவே அன்ஷிதா, சுனிதா உள்ளிட்டவர்கள், சாச்சனாவின் வயது கருதியாவது இத்தனை ஆத்திரமாக ரியாக்ட் செய்திருக்க வேண்டியதில்லை. அதைப் போலவே சாச்சனாவும் இந்தப் பிரச்னையை விசாரணை நாளில் கூட நினைத்து நினைத்து பொங்கி அழுமளவிற்கு இழுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. 

சாச்சனாவின் பிரச்னை ‘சம்மந்தி’ அல்ல - தோல்வி குறித்த பதட்டம்


‘கொலைக் கேஸைக் கூட ஒத்துப்பான். ‘குண்டு’ போட்டதை ஒத்துக்க மாட்டான்’ என்று லேகியம் விற்கும் பிதாமகன் ‘சூர்யா’ சொன்னது மாதிரி, ‘உணவுப் பங்கீட்டில் மோசடி செய்தேன்’ என்கிற குற்றச்சாட்டு அன்ஷிதாவைப் பாதித்ததில் ஆச்சரியமில்லை. இது போன்ற உணர்வு சார்ந்த குற்றச்சாட்டு எவரையுமே பாதிக்கும்.  பல நாட்களுக்கு பார்த்து பார்த்து சமைத்து பரிமாறும் ஒருவரிடம் “நீங்க எனக்கு சரியா சாப்பாடு தரலை” என்று கை நீட்டி குற்றம் சொன்னால் அது அவர்களை அதிகமாக வேதனைப்படுத்தும். ‘அய்யா.. நீங்க பாராட்டக்கூட வேண்டாம்.. இப்படியா பழி சுமத்துவீங்க?” என்று கலங்க வைக்கும். நம் வீடுகளில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் நடைமுறை அவஸ்தைகளில் இதுவும் ஒன்று. எனவே விசே சொன்னது மாதிரி, அன்ஷிதாவின் கோபத்தில் நியாயம் உள்ளது. என்றாலும் அவர் இத்தனை ஹிஸ்டீரிக்கலாக கத்தி ‘தண்ணிய குடி.. தண்ணிய குடி’ என்று மற்றவர்கள் சமாதானம் செய்யுமளவிற்கு உணர்ச்சிவசப்பட்டிருக்கத் தேவையில்லை. 

சாச்சனாவின் அடிப்படையான பிரச்சினை ‘உணவு’ அல்ல என்று தோன்றுகிறது. அந்த வீட்டில் அவர் தொடர்ந்து எதிர்கொண்டிருக்கும் பின்னடைவுகள், வீழ்ச்சிகள்தான் ஒன்று திரண்டு உணவுப் பிரச்சினையில் கோபமாக வெடித்திருக்கிறதோ என்று யூகிக்கத் தோன்றுகிறது. ‘Worst performer’ என்கிற பெயரை வாங்கி தண்டனை அடைந்தது, ‘எனக்கு த்ரோபால் நல்லா வரும். ஏன் அந்த ஆட்டத்துல சேர்க்கலை?” என்று கேட்டு அழுதது போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம். ‘இந்த ஆட்டத்திற்கு மறுபடி வந்திருக்கேன். வெற்றியோடுதான் திரும்பிப் போவேன்’ என்று தனக்குத் தானே போட்ட சபதம், அவருக்கே பெரிய அழுத்தமாக மாறியிருக்கிறதோ, என்னமோ?!  

சாச்சனா

வெற்றி அடைவது தொடர்பாக இளம் தலைமுறைக்குத் தரப்படும் அழுத்தம் அவர்களுக்கு பெரிய மனஉளைச்சலாக மாறி விடும் என்பதற்கான உதாரணம் இது. ‘சண்டைல தோக்கறமோ.. ஜெயிக்கறமோ.. முதல்ல சண்டை செய்யணும் குமாரு’ என்கிற வசனம் போல எந்தவொரு விஷயத்திலும் நாம் மேற்கொள்ளும் பயணமும் அது தரும் அனுபவமும்தான் முக்கியம். இலக்கில் வெற்றியா, தோல்வியா என்பது கூட இரண்டாம் பட்சம்தான். தோல்வி என்றாலும் கூட அதுவும் அனுபவமே. 

“ஓகே.. இனிமேல் உணவுப் பங்கீடு விஷயத்தை நீயே பார்த்துக்க” என்று சாச்சனாவிடமே இந்தப் பொறுப்பை அளித்த ஆனந்தியின் செயல் பாராட்டத்தக்கது. புத்திசாலித்தனமும் கூட. உணவுப் பிரச்னை தொடர்பாக நடந்த நீண்ட சண்டையையும் அதற்கும் மேல் நடந்த நீண்ட விசாரணையையும் பார்த்த நம்மில் பெரும்பாலோனோர் ‘இதுக்குப் போயா இத்தனை அக்கப்போரு?!’ என்று நினைத்திருப்போம். கெக்கலி கொட்டி சிரித்திருப்போம். இல்லையா?!

அற்ப விஷயங்களுக்காக நம் வீடுகளிலும் நிகழும் கலவரங்கள்


ஆனால் காமிராவை அப்படியே திருப்பி நம்முடைய வீடுகளின் பக்கமும் பாருங்கள். இதே போன்றதொரு அற்பப் பிரச்னைக்காக நாமும் வீட்டை இரண்டாக ஆக்கியிருப்போம். உப்பு பெறாத விஷயத்திற்கு கன்னாபின்னாவென்று சண்டை போட்டிருப்போம். கண்டபடி வார்த்தைகளை விட்டிருப்போம். உறவுகளைக் காயப்படுத்தியிருப்போம். நெடும் நாட்கள் பேசாமல் இருந்திருப்போம். இவற்றையெல்லாம் பதிவு செய்ய எந்தவொரு காமிராவும் இல்லை என்பது நமக்குள்ள மிகப் பெரிய சௌகரியம். 
ஆனால் மனசாட்சிதான் நம் காமிரா. ‘நாமும் இதே போல் ஒரு சாதாரண பிரச்னைக்கு பெரிய சண்டையைப் போட்டோமே?” என்று பிளாஷ்பேக்கில் பார்த்து அதற்காக கூனிக்குறுகுவதும் இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்று உறுதி எடுத்துக் கொள்வதும்தான், இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதன் மூலம் நமக்கு கிடைக்கிற ஒரே பயன். மாறாக இதை வைத்து வெறும் வம்பு பேசி விட்டு செல்வது நேர விரயம் மட்டுமே. 

ஜெஃப்ரி

‘இது உன்னோட வீடு. உன்னோட உரிமை. அதைக் கேட்கறதுல்ல என்ன தயக்கம்?’ என்று சாச்சனாவிற்கு அறிவுரை கூறியது உட்பட பல இடங்களில் விஜய்சேதுபதியின் ஹோஸ்டிங் சிறப்பாக இருந்தாலும்  ஒரு விஷயத்தை இவ்வளவு நேரம் இழுத்திருக்க வேண்டாம் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. 

ரணகளத்திற்கு நடுவிலும் கிளுகிளுப்பாக ‘சுனிதா.. நீங்க கோபப்படும் போது அழகா இருக்கீங்க?” என்று அர்னவ் திறமையாக கடலை போட்டதும், அதை பிறகு விசே நக்கல் அடித்ததும் சுவாரசியமான தருணங்கள். சுற்றி சண்டை நடந்து கொண்டிருந்தாலும் சாப்பாட்டில் கவனமாக இருந்த ஜெஃப்ரி, விசாரணையின் போது வெள்ளந்தியாகப் பேசி எல்லோரையும் சிரிக்க வைத்தார். ‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறு ரூபாயை மறந்துடாதீங்க’ என்கிற காமெடியைப் போல சம்மந்தி பிரச்சினையில் முட்டையையும் இணைத்து கலவரத்தை அதிகமாக்கினார் தர்ஷா. இதையும் விசே கிண்டல் செய்தார். 

ஆனால் ‘உணவுப் பங்கீட்டில்’ ஏதோ அரசியல் நடக்கிறது என்று மென்று விழுங்கி சகித்துக் கொண்டிருக்கிறவர்கள், அது தொடர்பான பிரச்னை ஒன்று எழும் போது தானும் அதைப் பற்றி பேசுவது இயல்பானதுதான். ஒன்றிற்கும் மேற்பட்ட புகார்கள் வரும் போதுதான் கையாள்பவர்களுக்கும் அதிக பொறுப்புணர்ச்சி வரும். இந்த நோக்கில் தர்ஷா செய்தது பெரிய பிழையாகத் தெரியவில்லை. இந்த ‘உண்ணாவிரதப் போராட்டத்தை‘க்யூட்’டாக முடித்து வைத்த சவுந்தர்யாவையும் விசே நக்கலுடன் பாராட்டியது சுவாரசியம். 

‘வயிறு நிரம்பிய பிறகு நாம சாப்பிடற இட்லி நம்மளது இல்ல’ 


‘பெண்கள் அணில பயங்கரமான சண்டை. ஆண்கள் அணி குதூகலமா இருந்தது மாதிரி தெரிஞ்சதே.. உங்களுக்குள்ள இந்த மாதிரி பிரச்னை வராதா?” என்று அந்தப் பக்கம் விசே விசாரிக்க, ‘யாருக்கு எவ்வளவு தேவையோ.. அந்த மாதிரி எடுத்துப்போம்’ என்று முத்து பதில் அளிக்க ‘அதெல்லாம் ஓகே. ஆனா முதல்ல சரிசமமா பிரிச்சிடுங்க. அப்புறம் உங்களுக்குள்ள பகிர்ந்துக்கலாம்’ என்று விசே சொன்ன சமத்துவ ஐடியா சரியானது. ‘நம்ம வயிறு நிரம்பிய பிறகு நாம சாப்பிடற இட்லி நம்மளது இல்ல’ என்று விஜய்ண்ணா பேசிய கம்யூனிச கொள்கைக்கு நிகரானது. ‘எங்களுக்கு சாப்பிட எதுவுமே இல்ல சார்’ என்று கையை மடக்கி மடக்கிப் பேசிய ஜெஃப்ரியிடம் ‘நீங்க ஷாப்பிங் செஞ்ச லட்சணம் அப்படி’ என்று பதிலுக்கு விசே நக்கலடித்தது நல்ல டைமிங். 


நீண்ட நேரத்திற்கு இதையே பேசி நம்மை டயர்ட் ஆக்கிய விசே, ஓரு வழியாக அடுத்த விஷயத்திற்கு வந்தார். ‘நாமினேட் ஆனவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க’ என்று ஆரம்பித்து “நாமினேட் ஆனவங்கள்ல ஆண்கள் நிறைய பேர் இருக்கீங்க. பெண்கள் குறைவா இருக்காங்க… ஏன்னு யோசிச்சீங்களா?” என்று ஆண்களிடம் கேட்க பலரும் திறுதிறுவென்று விழித்தார்கள். ‘குதிரை. மந்திரி. சிப்பாய்ன்னு என்னென்னமோ சொல்லி குழப்பிட்டான் சார்’ என்கிற மாதிரி முத்துவின் பக்கம் கையைக் காண்பித்தார்கள். 

முத்து

‘முத்து.. நீங்க நாமினேஷன் பத்தி டிஸ்கஸ் பண்ணீங்களா.. மத்தவங்களை இன்ஃப்யூயன்ஸ் பண்ணீங்களா?” என்கிற நோக்கில் முத்துவை டார்கெட் செய்தார் விசே. ஒரு கட்டத்தில் ‘ஆமாங்கய்யா’ என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார் முத்து. மற்றவர்களும் ‘இவன் பேச்சைக் கேட்டு நாசமாப் போனோம்’ என்கிற மாதிரியே முகத்தை வைத்துக் கொண்டு எஸ்கேப் ஆக முயன்றார்கள். 

இந்த விஷயத்தில் முத்து செய்ததில் தவறே இல்லை. ரவி சென்ற பிறகு அணியை வழிநடத்த, யோசனைகள் சொல்ல ஆண்கள் அணியில் பெரிதாக எவருமே இல்லை. தத்திகளாக இருக்கிறார்கள். எனவே அந்த வெற்றிடத்தை முத்து நிரப்பியதில் ஆச்சரியமே இல்லை. ஒருவகையில் அதுதான் சரியானதும் கூட.  

ஆட்டத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கிறாரா விசே?!

‘இந்த ஆட்டம் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கானது’ என்பதை பிக் பாஸ் ஆரம்பத்திலேயே தெளிவுப்படுத்தி விட்டார். எனவே அந்த நோக்கில் ஒரு வாக்கும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வாக்கும் போடலாம் என்று முத்து சொன்ன ஆலோசனை அருமையானது. ‘இது என்னோட பிளான். மத்தபடி உங்க இஷ்டம்’ என்பதையும் அவர் ஆரம்பித்திலேயே தெளிவுப்படுத்தி விட்டார். சுயசிந்தனையோடு செயல்படாமல், பிரச்சினை என்று வருகிற போது மட்டும் முத்துவின் மீது கைகாட்டுவது முறையானதல்ல. நிகழ்ச்சியின் இறுதியில் ‘முத்து யோசிச்ச மாதிரியே ஒவ்வொவருத்தருக்கும் தோணியிருக்கலாம்’ என்று ரஞ்சித் சொன்ன கோணமும் ஒருவகையில் சரியானது. 

‘இப்படி ஆடுங்க.. இப்படி ஆடாதீங்க’ என்று போட்டியாளர்களின் திட்டங்களில் விஜய்சேதுபதி மிகையாக மூக்கை நுழைப்பதைப் பற்றி கடந்த வாரத்திலும் எழுதியிருந்தேன். இந்த வாரத்திலும் அதுவேதான் நிகழ்ந்தது. கமல் நடத்தும் ஹோஸ்டிங்கில் என்ன செய்வார் என்றால் ஒருவரின் ஆட்டமுறையில் உள்ள நெருடலை உறுத்தாமல் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுவார். ஆனால் ஆட்டத்தைக் கலைக்க மாட்டார். ‘சொல்லிட்டேன்.. பார்த்துக்கங்க’ என்கிற எச்சரிக்கையை மட்டும் உணர்த்தி விடுவார். ஆனால் விசே என்ன செய்கிறார் என்றால் கால்பந்து விளையாட்டின் நடுவராக மட்டும் அல்லாமல், அவரும் கூட சேர்ந்து பந்தை உதைப்பது நடுவருக்கான அழகல்ல. 

விஜய்சேதுபதி

எலிமினேஷன் பற்றிய எச்சரிக்கையை உணர்த்திய பிறகு ‘ஓகே.. அதைப் பற்றி நாளைக்குப் பேசலாம்’ என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விஜய்சேதுபதி. ஒருவித சோர்வு மற்றும் சலிப்புடன்தான் இந்த எபிசோடை அவர் கையாண்டது போல் தெரிந்தது. 

‘இந்த ஆட்டம் செஸ் மாதிரி. அதுக்கு ஏற்ப காய்களை நகர்த்தணும்’ என்று ஆண்களிடம் முத்து பேசிக் கொண்டிருந்ததை சபையில் போட்டுக் கொடுத்து விட்டார் விசே. எனவே அந்த உதாரணங்களை சபையில் வெளிப்படையாக முத்து சொல்ல வேண்டியிருந்தது. ‘செஸ்ல ஜோக்கரும் இருக்காங்களா?’ என்று விசே சொன்னதை பெண்கள் அணி கவனமாக குறித்துக் கொண்டது. எனவே விசாரணை முடிந்த பிறகு ‘யாரை ஜோக்கர்ன்னு சொன்னீங்க.. என்னையா.. என்னையா..?” என்று  பெண்கள் அணியில் ஒவ்வொருவரும் வந்து வம்படியாக ஆஜரானது நல்ல காமெடி. ஆனால் அது ‘தான்தான்’ என்று தர்ஷாவிற்கு உள்ளுக்குள் தெரிந்திருக்கும். அவர் செய்த அலப்பறை அப்படி. 

பெண்களின் எதிர்ப்பை வழக்கம் போல் திறமையாக எதிர்காெண்டார் முத்து. ‘இதுதான் என் கேம். இப்படித்தான் ஆடுவேன்னு சொல்லிட்டேன். எல்லா ரகசியத்தையும் சொல்ல முடியாது’ என்று அவர் சொன்னது லாஜிக்காக சரியானது. ஆண்களைப் பற்றி பெண்கள் தங்களுக்குள் பேசும் கிண்டல்களையெல்லாம் பொதுவில் பகிர்ந்து கொள்வார்களா என்ன?! ‘நாமினேஷன் பத்தி பொதுவுல விவாதிக்கலாமா?’ என்று ஜாக்குலின் எழுப்பிய ஆட்சேபம் சரியானது. ஆனால் பிக் பாஸ் இதுவரை அதை ஆட்சேபிக்கவில்லை. மேலும் முத்து பதில் சொல்ல வேண்டிய பிக் பாஸிற்குத்தான். 

இந்த வாரம் யார் எலிமினேஷன் என்கிற ரகசியம் கசிந்து விட்டது. ‘கோபமா இருக்கற போது கூட க்யூட்டா இருக்கீங்க’ என்று வழிந்த வளர்ந்த மனிதர்தான் வெளியேறப்படவிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

Bigg Boss: ஜாக்குலின், தர்ஷாவை கடிந்துகொண்ட விஜய் சேதுபதி - இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது?

பிக் பாஸ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.நேற்றைய எபிசோடில் வழக்கம்போல விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி விசாரித்தார். குறிப்பாக, சம்மந்தி பஞ்சாயத... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `வெளியேறிய அர்னவ்’ - சக போட்டியாளர்கள் போட்ட ஸ்கெட்ச் தான் காரணமா?

மெது மெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8. ரவீந்தர், தீபக், ரஞ்சித், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன... மேலும் பார்க்க

புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் ‘ஆண்கள் Vs பெண்கள்’ - பரபரப்பாக நடந்து வரும் பிக் பாஸ்!

பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது.புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற... மேலும் பார்க்க

``கல்யாணம் தொடர்பான செய்தி, ரெண்டு பேர் குடும்பத்தையுமே பாதிக்குது” - 'பாக்கியலட்சுமி' திவ்யா கணேஷ்

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றுபாக்கியலட்சுமி. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக நல்ல டி.ஆர்.பியும் கிடைத்து வருகிறது. இ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `அதைபோய் கிண்டல் பண்ணினா என்ன பண்றது?' - ரஞ்சித் குறித்து மனைவி பிரியா ராமன்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 8' பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் `நச்' கவனிப்பு பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் ரஞ்சித். இவருடைய கேம் பி... மேலும் பார்க்க

Kayal Serial: கல்யாணமே முடிஞ்சாச்சு… கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? - `ட்விஸ்ட்’ வைக்கும் சைத்ரா

கயல் சீரியலில் நாயகி கயலுக்கும் நாயகன் எழிலுக்கும் ஒருவழியாகத் திருமணம் முடிந்துவிட்டது. சுமார் ஒரு மாத காலமாக கயல் சீரியலில் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பட்டது.சீரியல் இந்த கட்டத்திற... மேலும் பார்க்க