செய்திகள் :

Rocket Driver Review: காலப்பயணம் செய்யும் கலாம்; ஃபேண்டஸியில் இது புதுசு! ஆனாலும் ஏமாற்றம் ஏன்?

post image
சென்னையில் இயற்பியல் பட்டப்படிப்பைப் படித்துக்கொண்டிருக்கும் பிரபாவுக்கு (விஸ்வத்) அப்துல் கலாம் போல விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது ஆசை. அப்பாவின் வற்புறுத்தல் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்யத் தொடங்குகிறார். இந்த வெறுப்பான வாழ்வை அவரது நண்பரும் டிராபிக் போலீஸுமான கமலாவிடம் (சுனைனாவிடம்) புலம்பித் தீர்க்கிறார். இப்படியான சூழலில் கையில் எட்டணாவோடு சென்னைக்கு வந்திருக்கும் ஒரு பதின்வயது சிறுவனை (நாக விஷால்) சவாரியில் சந்திக்கிறார். சிறிது நேரத்திலேயே அவர் 1948-லிருந்து வந்திருக்கும் சிறு வயது அப்துல் கலாம் என்பது தெரிய வருகிறது. கலாமை 2023-லிருந்து 1948-க்கு பிரபா திரும்ப அனுப்பி வைத்தாரா, இல்லையா என்பதே இந்த ஃபேண்டஸி படத்தின் கதை.
Rocket Driver Review

நடக்கின்ற அனைத்தையும் சலிப்பாகப் பார்க்கின்ற மனோபாவம், தன் ரோல்மாடலைக் கண்டுபிடித்த தருணத்தில் எழும் ஆச்சரியம் என முதல் படத்திலேயே பாஸ் மதிப்பெண் வாங்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஸ்வத். செல்போன், வண்டி என நகரத்தை ஆச்சரியமாகப் பார்ப்பது, ‘அண்ணா, நான் இந்த ஊருக்குப் புதுசு’ என வெள்ளந்தித்தனமாக கோரிக்கை வைப்பது, தன் பால்ய சினேகிதனாக, தன் வயதைச் சேர்ந்தவராகவே முதியவரைப் பார்ப்பது எனக் கதாபாத்திரத்தின் தன்மையை அப்படியே கொண்டுவந்திருக்கிறார் நாக விஷால். டிராபிக் காவலராக வரும் சுனைனாவுக்கு வண்டிகள் ஓடாத சாலையில் போடப்பட்ட சிக்னல் போலக் கதையின் போக்கைத் தொந்தரவு செய்யாத, தாக்கத்தை ஏற்படுத்தாத பாத்திரம். இரண்டாம் பாதியில் ஏ.பி.ஜெ-வின் பால்ய நண்பராக வரும் காத்தாடி ராமமூர்த்தி ஆங்காங்கே நெகிழ்ச்சியை உண்டாக்குகிறார். இவர்கள் தவிர ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

ஒளியுணர்வில் ‘ஃபீல்குட்’ தன்மையையும், ராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய கடற்கரை பகுதிகளின் எழிலையும் ரம்மியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரெஜிமல் சூர்யா தாமஸ். அதனை நன்றாகக் கோர்த்து தொழில்நுட்ப ரீதியாகப் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன். கௌசிக் கிரிஷ் இசையில் வரும் ‘அவரும் செத்துட்டாராம்’ பாடல் கதையின் ஓட்டத்துக்கு உதவி இருக்கிறது. பின்னணி இசையில் ஒலிக்கும் ரெட்ரோ பீட்கள் போதுமானதாக இல்லை.

Rocket Driver Review

எல்லா வகையிலும் புதுமையான ஒரு கதையைச் சொல்ல முயல்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்தசங்கர். படம் ஆரம்பித்தவுடனேயே கற்பனை கனவு காட்சியுடன் தொடங்கி, வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் மூலம் ‘ஏவுகணை ஓட்டத்திற்குப் போடப்படும் கவுன்ட் டவுன்’ போல புதிய பயணத்துக்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறது திரைக்கதை. ஆனால் ஒரு மனிதர் ஒரு காலக்கோட்டிலிருந்து மற்றொரு காலக்கோட்டுக்கு வருகிறார் என்கிற மிகப்பெரிய விஷயத்தை நாயகன் சில நிமிடங்களில் நம்பிவிடுவது போல அமைக்கப்பட்ட காட்சிகள் நம்பத்தன்மையைக் குறைகின்றன. நாயகன் கூட தன் ஆதர்ச நாயகன் என்ற வகையில் ஏற்றுக்கொள்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும் டிராபிக் போலீஸ் சுனைனாவும் அதை அப்படியே நம்புவது ஏமாற்றமளிக்கும் ஃபேண்டஸி! இருந்தும் ஆங்காங்கே ‘பீல்குட்’ படத்துக்கே உரிய விஷயங்களை ‘டிக்’ அடித்துப் படத்தை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்கிறது முதல் பாதி.

இரண்டாம் பாதியில் காத்தாடி ராமமூர்த்தியின் கதாபாத்திரம் உள்ளே வந்த பிறகுச் சற்றே நெகிழ்வை ஏற்படுத்தும் திரைக்கதை, அடுத்தடுத்த லூப் மோடு காட்சிகளால் நடுக்கடலின் வெறுமையைத் தந்துவிடுகிறது. சொல்ல வந்த விஷயம் விளங்கிய பின்னரும் நடுக்கடல் பயணம், அண்ணாச்சியின் உறவினரைத் தேடுவது எனத் திரைக்கதையை இழுத்திருக்கின்றனர். முதல் பாதியிலும் இத்தகைய ரீப்பீட் மோடு ரீங்காரங்கள் அதிகமே!

Rocket Driver Review

அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த நகைச்சுவை கலாய், நல்லதொரு தியேட்டர் மெட்டீரியல். அப்படிப்பட்ட காட்சிகளை இன்னுமே சேர்க்கத் திரைக்கதையில் வாய்ப்பிருந்தும் தவிர்த்தது ஏனோ?! இதனால் பெரிய தருணங்களாக மாறியிருக்க வேண்டிய இடங்கள் கூட தட்டையான சாதாரண காட்சிகளாக முடிந்துவிடுகின்றன. அதேசமயம் நெகிழ்ச்சியான அந்த க்ளைமாக்ஸ், அதன் மூலம் நாயகன் கற்றுக்கொள்ளும் பாடம் போன்றவை ப்ளஸ்!

மொத்தத்தில் 40 நிமிட ஆந்தாலஜி கதைகளில் ஒன்றாக விரிந்திருக்க வேண்டிய படைப்பை, கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்களுக்கு நீட்டி முழக்கி, அதில் ஆழமில்லாத காட்சிகளையும் சேர்த்ததால் இந்த `ராக்கெட் டிரைவர்' எதிர்பார்த்த உயரத்தை எட்டவில்லை.

Simbu : `என்னுடைய அடுத்த திரைப்படம் இதுதான்!' - `ஹின்ட்'டுடன் அப்டேட் கொடுத்த சிம்பு

நடிகர் சிம்பு அடுத்த படத்திற்கான அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் 'Thug Life' படத்த... மேலும் பார்க்க

`நான் செய்த தவறு; 6 நாள்களாக படுக்கையிலேயே இருக்கிறேன்' - ரகுல் ப்ரீத் சிங்கிற்கு என்ன ஆயிற்று?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.2009 ஆம் ஆண்டு கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் தமிழில் `தடையற தாக்க', `புத்தகம்', `என்னமோ ஏதோ' உள்ளிட்ட படங்... மேலும் பார்க்க

Bhumika `'கன்னத்தில் முத்தமிட்டால்' Miss பண்ணிட்டேன்’ - `ஆப்பிள் பெண்ணே’ பூமிகா ஷேரிங்ஸ்

``நீங்கள் தேர்ந்தெடுத்து நடித்த படங்களின் தாக்கம் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது. அது அழகான நினைவுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் உங்களுக்கு எப்படியானது?”``நான் நடித்த படங்களின் நினைவுகள், ... மேலும் பார்க்க

Selvaragavan : `எவ்ளோ வேணா லவ் பண்ணுங்க, ஊர சுத்துங்க, ஆனா...' - செல்வராகவன் கூறும் காதல் அட்வைஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வாழ்க்கையைப் பற்றி சின்ன சின்ன வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அதுபோல, தற்போது காதல் பற்றி தனது இன்ஸ்... மேலும் பார்க்க

Bloody Beggar: இந்தப் படத்தில் கவின் நடிக்க வந்தது எப்படி?-இயக்குநர் சிவபாலன் அளித்த பதில் இதுதான்!

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பிளடி பக்கர்'.இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது 'ஃபிலமென்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் ச... மேலும் பார்க்க