செய்திகள் :

நீங்கள் நீங்களாகவே இருங்களேன் பெண்களே? | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

"இப்படி சொன்னா அவுங்க மனசு கஷ்டப்படுமே!", "நான் இந்த மாதிரி டிரெஸ் போட்டா அவங்களுக்குப் பிடிக்காதே, எனக்கு அந்த டிரெஸ்லாம் ரொம்ப பிடிக்கும் தான், ஆனா அவுங்களுக்குப் பிடிக்காதே!"..

"ஒரே ஒரு நாள் , அந்த நாள் முழுசும் என் இஷ்டப்படி, எனக்குப் பிடிச்சதை சமைச்சு சாப்பிடணும், நடக்குமா?", "இப்பத் திரும்பிப் பார்த்தா நான் ரொம்ப மாறிட்டேன், எனக்குப் பிடிச்சது என்ன, நான் எப்படி இருப்பேன்னே மறந்து போச்சு!"..

இது போன்று அவ்வப்போது உங்களுக்கும் தோன்றுவதுண்டா?, "இது தான் நான்!", என்று ஊரறிய இருக்க இயலாமல், உறவுக்காக கொஞ்சம் , சமூகத்திற்காக கொஞ்சம் என்று தன்னியல்பை இழப்பது தான் காலப்பயணத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களில் முக்கியமானதாக இருக்கிறதன்றோ!

பெண்
சித்தரிப்பு படம்

அன்பால் ஏற்படும் சில மாற்றங்கள் , அன்புக்குக் கட்டுப்பட்டு சில மாற்றங்கள், உறவுகளுக்குள் விரிசல்களைத் தவிர்க்க சில மாற்றங்கள், எனத் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உட்பட்ட பிறகு தன்னியல்பை தவிர்த்து முற்றிலும் வேறொரு நபராகத் தான் மாறிப் போகின்றனரே இந்தப் பெண்கள்!

வாழும் காலம் மட்டும் தன்னை மறைத்து, தன்னியல்பை மறந்து வாழும் இந்நிலையை மாற்ற முதலடி எடுத்து வைக்க வேண்டியது நீங்கள் தான் பெண்களே! உங்களின் மனநிலையையும், உங்களின் விருப்பங்களையும் எடுத்துக் கூறி உங்களுக்காக நீங்களே வாதாட வேண்டியது அவசியம் தோழிகளே!

பெண்களுக்கு தன்னியல்பு என்பதில்லை, குடும்பத்தினரின் விருப்பமே அவளின் விருப்பம் என்பது போன்ற நம்பிக்கை காலங்காலமாக விதைக்கப்பட்டிருப்பதால், எவரும், எதையும் உடனே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இருப்பினும் சமூகத்திலும், குடும்பத்திலும் உங்கள் குரல் நிச்சயம் மாற்றத்திற்கு வித்திடும்.

சித்தரிப்பு படம்

சமூகத்திலும், குடும்பத்திலும் முன்னர் போன்று அல்லாமல் தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

" நாமும் இது போன்று ஆசைப்பட்டோமே , நம்மால் அப்போது அவ்வாறு செய்ய இயலவில்லையே, இப்போது அதைச் செய்ய அவளுக்கு ஏன் நாம் தடை சொல்ல வேண்டும்?", "நான் என் இயல்பில் இருந்து மாறாமல் இருக்கும் போது அவள் மட்டும் மாற வேண்டும் என்று நான் நினைப்பது சரியா?", " புகுந்த வீடும் ,பிறந்த வீடு போன்றது தானே என்று எங்களையே தங்களின் பெற்றோருக்கு நிகராக ஏற்றுக் கொண்டிருக்கும் பெண்ணின் இந்த ஒரு ஆசையை , இந்த ஒரு இயல்பை நான் ஏன் தடை செய்ய வேண்டும்? அவளின் மனம்போல் அவளின் இயல்போடு அவள் இருக்கட்டுமே!", என்பது போன்று குடும்பத்தினரும் நினைத்தால் ஒரு பெண் தன்னியல்புடன் , என்றும், எப்போதும், எந்தக் காலத்திலும் இருக்க இயலும்.

ஒரு பெண் எந்த இடத்தில் தன்னியல்புடன் இருக்கிறாளோ, எங்கு எந்தவிதப் பூச்சும் இன்றி தன்னைத் தானாக அவளால் வெளிப்படுத்த முடிகிறதோ, அங்கு அவள் மகிழ்ச்சியுடன் வாழ்வது மட்டுமன்றி அவளைச் சுற்றி இருப்பவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது உண்மை. 

சித்தரிப்பு படம்

"எனக்கு இது போன்று செய்து தான் பழக்கம் , அதை நான் செய்து கொள்ளட்டுமா?"

" நான் இதை செய்ய விரும்புகிறேன், இது எனது பல நாள் கனவு".

" எனக்கு இது பிடிக்கவில்லை, நான் இதை செய்வதில் எனக்கு விருப்பமில்லை."

என்பது போன்று எப்போதெல்லாம் உங்களின் இயல்பை நீங்கள் மாற்றிக் கொள்ள நேருகிறதோ, எப்போதெல்லாம் உங்களின் தன்னியல்பிலிருந்து மாறும் நிலைமை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உங்களின் மனநிலையை விளக்கிப் பாருங்கள்.

உறவைக் காப்பாற்றுவது முக்கியம்தான், அதைப் போலவே உங்களின் மனநிலையைக் காப்பதும் மிகவும் முக்கியம். தன்னியல்புடன் பெண்கள் இருப்பதும் சாத்தியமே! மாற்றத்தை நோக்கி குரல் கொடுக்கத் தொடங்குங்கள்!

- வினோதினி வன்னியராஜன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.