செய்திகள் :

`வேட்டையன்... என்கவுன்ட்டர்... நீதிபதி சத்யதேவ்..!’ - மனம் திறக்கும் நீதிபதி சந்துரு

post image
‘வேட்டையன்’ படம் வெளியாகி என்கவுன்ட்டர் குறித்த விவாதங்களை எழுப்பிக்கொண்டிருக்கும் சூழலில், ரஜினிக்கு டஃப் ஃபைட் கொடுத்த அமிதாப் பச்சனின் ‘நீதிபதி சத்யதேவ்’ கதாப்பாத்திரமும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

ஏற்கனவே, ’ஜெய்பீம்’ படத்தின் நீதிமன்றக் காட்சியில் நீதியரசர் சத்யதேவின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். தற்போது, அவரது இயக்கத்தில் வெளியான ‘வேட்டையன்’ படம், போலீஸின் போலி என்கவுன்ட்டர்கள் குறித்தும் அதனால் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் பேசியிருப்பது, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டுமல்ல, சமூக அக்கறை கொண்டோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதற்குக் காரணம் அமிதாப் பச்சனின் `சத்யதேவ்’ கதாப்பாத்திரம் பேசும் என்கவுன்ட்டர்களுக்கு எதிரான கோணம்தான்.

முன்னாள் நீதிபதி சந்துரு மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்டோரால் ஆரம்பிக்கப்பட்ட லா அகாடெமிக்கும் சத்யதேவ் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இந்தளவுக்கு எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் நீதிபதி சத்யதேவ் யார்? அவர் கொடுத்த தீர்ப்புகள் என்ன? ‘வேட்டையன்’ படம் குறித்த பல்வேறு கேள்விகளை நீதிபதி சந்துருவிடம் முன்வைத்தேன்.

நீதிபதி சத்யதேவ்

”நீதிபதி சத்யதேவின் அப்பா, தாண்டவன் செட்டியார் கோவையில் புகழ்பெற்ற வக்கீலாகப் பணியாற்றியவர். சத்யதேவ் கோவையில் பிறந்தாலும் பட்டப்படிப்பையும் சட்டப்படிப்பையும் சென்னையில்தான் படித்தார். அரசு வழக்கறிஞராக பணியாற்றிய சத்யதேவ், 1978-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். சுமார் 12 வருட பதவி காலத்தின் கடைசியில், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பையும் வகித்தார். அவர், அரசு வழக்கறிஞராக இருக்கும்போது நெருக்கடி காலத்தில் அவருக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளேன். அப்பொழுது, எனக்கு வயது 25. அவருடைய வயது 50. ஆனால் அதையெல்லாம் என்றும் பொருட்படுத்தியதில்லை. இப்படிதான் எங்களது ஆரம்ப அறிமுகம் தொடங்கியது.

அதன் பின்னர், அவர் நீதிபதியானதும் பல வழக்குகள் நடத்த நேர்ந்தது. எங்களைப் போன்ற ஜுனியர் வக்கீல்களை அவர் நடத்திய விதம் எங்களை உருக வைத்தது. நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல் இருப்பது வழக்குகளுக்குத் தேவையான கருத்தை மட்டும் வாதத்தில் வைப்பது போன்ற பல விஷயங்களைக் அவரிடம் கற்றுக்கொண்டேன். அவரின் ஓய்வுக்குப்பிறகு, என்னை ஒருநாள் அவரது வீட்டில் சந்திக்கச் சொன்னார். அப்போது, அவரது பீரோவிலிருந்து ஒரு வெகுமதி பொட்டலத்தை என்னிடம் கொடுத்தார். என்னவென்று கேட்டபோது, அது என் திருமணத்திற்கான பரிசு என்று சொன்னார். நான், திருமணமாகி எட்டு வருடம் ஆகிவிட்டதே என்று சொன்னதும் ’நீ உன் திருமணத்துக்கு நீதிபதிகளை அழைக்க மறுத்துட்ட. நான் இப்போ, சாதாரண சத்யதேவ், வாங்கிக்கொள்” என்றார்.

நீதிபதி சந்துரு

அப்போதான் அவர், ’நீ வழக்கறிஞரா பணியாற்றி சம்பாதித்தது போதும். நீதிபதி பதவியை ஏற்றுக்கொள் என்று தலைமை நீதிபதி சொன்னால், உடனடியாக சம்மதம் தெரிவிப்பாயா? எனக்கு உறுதிமொழி கொடு’ என்றார். அவருக்குக் கொடுத்த உறுதிமொழியின் பேரில்தான் 2001-ஆம் ஆண்டு தலைமை நீதிபதி என்னிடம் நீதிபதி ஆவதற்கான ஒப்புதலைக் கேட்டபோது, எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஒப்புதலைக் கொடுத்தேன். என் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீதிபதி சத்யதேவ். எப்போதும் என் வாழ்வில் நிறைந்திருப்பார்!” என்று நினைவுகளில் மூழ்கி நிதானமாக பேச ஆரம்பித்தார் நீதிபதி சந்துரு.

”வேட்டையன் எப்படி இருந்தது? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுன்டர்களுக்கு எதிராக பேசி நடித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?”

"த.செ. ஞானவேல் நம்மை ஏமாற்றவில்லை. முரட்டுக்காளை ஒன்றுக்கு மூக்கணாங்கயிறு போட்டுள்ளார். என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டையே என்கவுன்ட்டருக்கு எதிராகப் பேசவைத்தது பாராட்டத்தக்கது. என்கவுன்டர் என்பது போலீஸின் தற்காப்பு நடவடிக்கை என்று கூறுவார்கள். ஆனால், அதை நிரூபித்து விடுதலை அடைய வேண்டிய கடமை போலீஸுக்கு உண்டு. நடைமுறையிலோ என்கவுன்ட்டர் என்பது போலீஸே நீதிபதியாகிவிடுவதைக் காட்டுகிறது.

’காக்க காக்க’ படத்தில் சூர்யா என்கவுன்ட்டரை நியாயப்படுத்துவார். அவரை 'ஜெய்பீம்' படத்தில் வக்கீலாக்கி என்கவுன்ட்டர் நடத்திய காவலர்களை சிறைக்கு அனுப்பும்படி திரைப்படம் எடுத்தார். அதேபோல், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் உயிர்நீத்ததை நியாயப்படுத்திய சூப்பர் ஸ்டாரை வைத்து, ‘வேட்டையன்’ க்ளைமாக்ஸ் காட்சியில் காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர்களுக்கே என்கவுன்டர் தவறு என்று வகுப்பு எடுக்க வைத்துவிட்டார் ஞானவேல். அவருக்கு என் பாராட்டுகள்!”

வேட்டையன்

"ஜெய்பீம் உங்களை மையப்படுத்தியக் கதை. அதுபோல், ‘வேட்டையன்’ படத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?"

"வேட்டையனில் என் பங்கு என்பது முதல் நாளே அப்படத்தைப் பார்த்ததுதான். இன்னும் சொல்லப்போனால், நான் ரஜினி படத்தை இதுவரை தியேட்டரில் பார்த்ததில்லை. மற்றபடி, படத்திற்காக எந்த ஆலோசனையும் ஞானவேல் என்னிடம் கேட்கவில்லை. ஆனால், ஞானவேல் நண்பர் என்பதால் என்கவுன்ட்டர்கள் பற்றியும் பல சட்டக் கூறுகள் பற்றியும் பல மணிநேரம் பேசியிருக்கிறோம். ஒருவேளை அந்த உரையாடல்கள் அவருக்கு உதவியிருக்கலாம்!"

ரஜினி

”நீதிபதி சத்யதேவ் கதாபாத்திரத்தில் அமிதாப் நடித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?”

”அமிதாப் நீதிபதி சத்யதேவ் கதாபாத்திரத்தில் நடித்தது சிறப்பாக இருந்தது. பத்திரிகை நிருபர் காலத்திலிருந்து ஞானவேல் நீதிமன்றத்திற்கு தகவல் சேகரிப்புக்கு வந்து செல்வார். அவருக்கு நீதிபதிகளைப் பற்றித் தெரியும். குறிப்பாக, எனக்கு நீதிபதி சத்யதேவ் மேல் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது என்பதை ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டார். அமிதாப் பாத்திரத்திற்கு சத்யதேவ் என்று பெயர் சூட்டிய முடிவு இயக்குநருடையதுதான்!”

”நீட் வேணுமா? வேணாமான்னு சொல்றதுக்கு பதிலா நீட் கோச்சிங் சென்டரை மட்டுமே குற்றம் சொல்லுது ’வேட்டையன்’ என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?”

”குற்றம் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்து இப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வின் விளைவு புற்றீசல் போல முளைத்துள்ள கோச்சிங் சென்டர்கள். அதனால் பணம் படைத்தவர்கள்தான் பலனடைவார்கள் என்பதையெல்லாம் தெளிவாக படத்தில் வெளிப்பட்டுள்ளது!”

வேட்டையன்

”நீதிபதி சத்யதேவ் கொடுத்து முக்கியமான தீர்ப்புகள் என்றால் எதனையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?”

”நீதிபதி சத்யதேவ்வின் 12 வருட நீதிபதி காலத்தில் பல தீர்ப்புகள் வழங்கியிருக்கிறார். அவற்றையெல்லாம் இங்கு பட்டியலிட முடியாது. ஆனால், ஒரு தனியார் கல்லூரி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியபோது போக்குவரத்து நெருக்கடியைக் காட்டி காவல்துறை தடைவிதித்தது. அந்த வழக்கு நீதிபதி சத்யதேவ் முன்பு வந்தது. காலம் தவறாமைக்குப் பெயர் போன அவர், அன்றைக்கு நீதிமன்றம் வருவதற்கு காலதாமதம் ஆனது. காரணம், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திடீரென்று மெரினா கடற்கரை சாலையின் நடுவில் ஒன்றிய அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டதுதான். ’நீதிமன்றத்தில் முதலமைச்சரே போக்குவரத்துத் தடை ஏற்படுத்தியதை சகித்துக் கொள்ளும் நீங்கள், பத்து ஊழியர்கள் சாலை ஓரத்தில் உண்ணாவிரதம் இருப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்’ என்று நான் வாதாடினேன். உடனடியாக போராட்டம் நடத்த அனுமதி கொடுத்தார்.

அதேபோல, எண்ணூர் அனல்மின் நிலையத்தில் எரிசாம்பலை அகற்றும் பணியை சுமார் 100 பெண்கள் செய்தனர். அதற்கடுத்த வருடம் மின்வாரியம், பெண்கள் புடவைக் கட்டிக்கொண்டு உயர் கோபுரத்தில் ஏறி வேலை செய்யமுடியாது என்றுகூறி பெண்களுக்கு அப்பணியை நிராகரித்தது. அதனையெதிர்த்து, ‘130 கோடி இந்தியர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பிரதமர் பதவியிலிருக்கும் இந்திராகாந்தியும் ஒரு பெண் தானே, கேவலம் எரிசாம்பலை பெண்களால் அகற்ற முடியாதா என்று நான் வாதாடினேன். உடனே, நீதிபதி சத்யதேவ் மின்வாரியத்தில் பெண்களை வேலைக்கு வைக்கும் தடையை ரத்து செய்தார்.

நீதிபதி சத்யதேவ்

தற்பொழுது அரசு போக்குவரத்து ஊழியர்கள் பெற்றுவரும் சலுகைகளான பத்து நாள் Casual leave மற்றும் ஓய்வு வயது 58 என்பதையெல்லாம் தனது தீர்ப்பில் உறுதி செய்தவர் அவர். அதேபோல, சட்டமன்றத்தில் நீதிபதிகளைக் குறை கூறிய பேசிய அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கையை அனுப்பும்படி உத்தரவிட்டு ஒரு பெரும் அதிர்ச்சியலையை உருவாக்கியவர் சத்யதேவ்!”

”ஓய்வுக்குப்பிறகு நீதியரசர் சத்யதேவ் கடைசிகாலம் எப்படி இருந்தது? அவரது மனைவி, பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?”

”சத்யதேவ் 1990-ல் ஓய்வுக்குப்பிறகு தமிழ்நாடு இசைக்கல்லூரிக்கு முன்னால் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் குடியேறினார். அந்தத் தெருவுக்குப் பெயர் இன்று சத்யதேவ் அவென்யு என்று வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலைக்கு பக்கத்திலும் இன்னொரு சத்யதேவ் அவென்யு உள்ளது.

சத்யதேவ் மகன் மகேஷ் சத்யதேவ் அமெரிக்காவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவரது மனைவியும் மகனுடன் தான் வசிக்கிறார். ’ஜெய்பீம்’ படத்திற்கும் தற்போது, ‘வேட்டையன்’ படத்திலும் சத்யதேவ் குறித்த காட்சிகளுக்காக கடிதம் மூலம் நன்றியை வெளிப்படுத்தினார் சத்யதேவின் மகன்.

நீதிபதி சந்துரு

“நீதியரசர் சத்யதேவ் பற்றி மக்களுக்கு தெரியல. ஆனா, வெள்ளத்துரை மாதிரி என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டுகள் மக்களுக்கு தெரியுறதை பற்றி என்ன நினைக்கிறீங்க?”

”திடீரென என்கவுன்ட்டர் ஸ்பெஷலிட்ஸ்டுகளை வீரர்களாக போற்றும் மனப்பான்மை சமூகத்தில் நிலவுகிறது. ஹைதராபாத் மருத்துவர் பாலியல் வன்புணர்வு கொலை வழக்கில் சுட்டுக்கொல்லப்பட்ட நான்கு பேரும் அப்பாவிகள் என்று சிற்புர்கர் விசாரணை கமிஷன் கூறியது. இப்பொழுது என்கவுன்ட்டர் நடத்திய காவலர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு நிகழ்வை வேட்டையனிலும் பார்த்திருப்பீர்கள். அதைத்தான் அமிதாப் தனது வசனத்தில் ’தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற வசனத்துக்கு எதிராக ’விரைவுபடுத்தப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதி’ ஆக மாறிவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்துவார்!”

”நீதிபதி சத்யதேவ் மகனுக்கு சுயமரியாதை திருமணம் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எந்த இயக்க அரசியலை அவர் முன்னெடுத்தார்?”

”நீதிபதி சத்யதேவ் ஒரு பகுத்தறிவாளர். இறை மறுப்பாளர். 75 வருட உயர்நீதிமன்ற வரலாற்றில் (1950க்குப் பிறகு) பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளில் கடவுள் பெயரில் இல்லாமல் ”உளமாற” என்று பதவி ஏற்கும்போது உறுதி மொழி ஏற்றுக்கொண்ட பட்டியலில் இருக்கும் ஐவரில் முதலாமவர் நீதிபதி சத்யதேவ். அவர் எந்த கட்சியையும் சேராதவர்!”

வேட்டையன்

”சத்யதேவ் லா அகாடமி இப்போது எப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது? எவ்வளவு மாணவர்கள் பயன்பட்டு வருகிறார்கள்?”

”சத்யதேவ் லா அகாடமி என்ற விமானம் தயாராகிவிட்டது. இன்னும் அதற்கு சில கட்டுமானங்கள் தேவை. வானில் பறப்பதற்கு சில மாதங்கள் ஆகலாம்!”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

Rashmika Mandanna: அன்று டீப் ஃபேக் வீடியோ; இன்று மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு தேசிய அம்பாசிடர்!

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் (Deep Fake) வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரைத் தொடர்ந்து, நடிகைகள் கஜோல், கேத்ரீனா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பல... மேலும் பார்க்க