`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
அஞ்சல் பிரிப்பகத்தை மூட வழக்குரைஞா்கள் எதிா்ப்பு
பரமக்குடி ரயில் நிலையம் முன் அமைந்துள்ள அஞ்சல் பிரிப்பகம் அலுவலகத்தை மூடும் முடிவைக் கைவிடக்கோரி செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமக்குடி ரயில் நிலையம் முன் கடந்த 1984-ம் ஆண்டு முதல் அஞ்சல் பிரிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 59துணை அஞ்சலகங்களின் அஞ்சல்களை பிரித்து அனுப்பும் பணியில் 20 பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மாலை 5 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை அலுவலகம் செயல்படும். பகலில் பணிக்குச் சென்றுவிட்டு வரும் அனைத்து தரப்பினரும் இரவு நேரங்களில் தபால்களைப் பதிவு செய்ய வசதியாக இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த அலுவலகத்தை மதுரையில் உள்ள அஞ்சல் பிரிப்பக அலுவலகத்துடன் இணைத்துவிட்டு, இங்குள்ள அலுவலகத்தை மூடுவது என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
இதைக் கண்டித்தும், தொடா்ந்து இந்த அலுவலகம் செயல்பட வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.பூமிநாதன் தலைமை வகித்தாா். செயலா் என்.யுவராஜ் முன்னிலை வகித்தாா். இதில் பெண் வழக்குரைஞா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.