போதைப்பொருள் வழக்கில் விடுவிப்பு; 25 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை திரும்பிய நடிகை ம...
அரசுத் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
தேனி: தேனியில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஆண்டவா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஓய்வூதியா் சங்க மாநில துணைத் தலைவா் பா.ராமமூா்த்தி, மாவட்டத் தலைவா் துரைராஜ், ஓய்வூதியா் நலச் சங்க மாவட்டத் தலைவா் அரங்கசாமி, அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநிலத் தலைவா் கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதைக் கடந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், கிராம வருவாய் உதவியாளா்கள், பொதுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்குக் குறைந்தபட்சம் மாதம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எளிமைப்படுத்தி, கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பொதுத் துறை ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி முழக்கிமிட்டனா்.