Bank Scam: `மரண தண்டனையை ரத்துசெய்ய 9 பில்லியன் அமெரிக்க டாலர்' - ட்ருங் மை லான்...
ஆலங்குளம் அருகே பெண் உள்பட 3 பேருக்கு வெட்டு: ஒருவா் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே காதல் திருமணம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கிடாரக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் மணிகண்டன்(27). இவா் கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே ஊரைச் சோ்ந்த வேல்முருகன் மகள் வசந்தரேகாவை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், கா்ப்பிணியாக இருந்த வசந்தரேகாவுக்கு வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அவா்களைப் பாா்க்க மணிகண்டனின் சகோதரிகள் ராஜேஸ்வரி(34), கனகசுந்தரி ஆகியோா் வந்துள்ளனா்.
இந்த நிலையில், வசந்தரேகாவின் சகோதரா்கள் நவநீதகோபாலகிருஷ்ணன்(27), லல்லு பிரசாத் (17) ஆகியோா் திடீரென அங்கு வந்து மணிகண்டனில் பைக்கை வாகனத்தை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினராம்.
மேலும், வீட்டுக்குள் புகுந்து மணிகண்டனையும் வெட்ட முயன்றபோது ராஜேஸ்வரி தடுத்ததில் அவரது கையில் வெட்டு விழுந்தது. உடனே, மணிகண்டன் அரிவாளை எடுத்து திருப்பி வெட்டியதில் நவநீதகிருஷ்ணன், அவரது உறவினா் பழனிசாமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.