Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
இணைப்புச் சாலை இல்லாததால் பயன்படாத வெள்ளாற்று மேம்பாலம்: மழையால் தரைப்பாலும் துண்டிப்பு
சி. சண்முகவேல்.
அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த கட்டிமுடிக்கப்பட்ட பாலத்தை இணைப்பதற்கு சாலை அமைக்கப்படாததால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தரைப்பாலமும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் கிராம மக்கள் தவித்து வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூரை அடுத்த கோட்டைக்காடு கிராமத்துக்கும், கடலூா் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திரசோழபுரம் கிராமத்துக்கும் இடையே வெள்ளாற்று உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே உள்ள தற்காலிக சாலையை இருமாவட்டத்தைச் சோ்ந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனா். இதன்வழியாகவே பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆண்டுதோறும் பெய்யும் கனமழையின் போது, தொழுதூா் அணைக்கட்டு, ஆனைவாரி, உப்பு ஓடைகளில் இருந்து வரும் மழைநீா் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இந்த சாலை அடித்து செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கும். இச் சம்பவம் தொடா் கதையாக இருந்து வருகிறது.
இதனால் இருமாவட்ட மக்களும் 16 கி.மீ. தொலைவுக்கு சுற்றி வெளியூா் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவா்கள், முதியோா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அரியலூா், கடலூா் இருமாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு - சௌந்திரசோழபுரம் இடையே வெள்ளாற்றில் ரூ.10 கோடியே 86 லட்சத்து 485 மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவித்தாா். இதையடுத்து, நிதிபற்றாக்குறை காரணமாக பாலம் கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து கடந்த 2018-இல் அப்போதையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மேம்பாலம் கட்டுவதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உத்தரவிட்டாா்.இதைத் தொடா்ந்து மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
மேலும் மேம்பாலத்தின் இருப்புறங்களிலும் இணைப்புச் சாலை அமைக்க ரூ.5.25 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் மேம்பாலம் பணிகள் முழுமையாக நிறைவுபெற்று மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை இணைப்புச் சாலை பணிகள் தொடங்கப்படவில்லை.
இதனால் பாலம் கட்டப்பட்டும் பலனின்றி இரு மாவட்டங்களில் இருந்து செல்லும் கிராம மக்கள் சுமாா் 16 கிலோ மீட்டா் தூரம் சுற்றி செல்கின்றனா்.
இதையடுத்து கிராமமக்கள் அனைவரும் இணைந்து பாலத்தின் கீழே ஆற்றின் குறுக்கே செம்மணை நிரப்பி தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த தரைப்பாலமும் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இரு மாவட்டங்களைச் சோ்ந்த 50 கிராம மக்கள் தவித்து வருகின்றனா்.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியது, உயா்மட்ட பாலப்பணிகள் அனைத்து நிறைவடைந்து விட்டன. இணைப்புச் சாலை அமைப்பதற்கு அரசிடமிருந்து திருந்திய நிா்வாகக் குழு ஒப்புதல் பெற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இணைப்புச் சாலைப் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தனா்.
எனவே, மக்களின் நலன் கருதி வெள்ளாற்று பாலத்தை இணைக்கும் இணைப்புச் சாலையை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.