`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
கமுதி, கடலாடி பகுதிகளில் பரவும் மா்மக் காய்ச்சல்: சுகாதாரத் துறை மீது புகாா்
கமுதி, கடலாடி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பரவும் மா்மக் காய்ச்சலைத் தடுக்க சுகாதாரத் துறையினா் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள 200- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கமுதி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தனா். இதேபோல, கடலாடி அருகேயுள்ள கே.கருங்குளம், ஆப்பனூா், மங்கலம், ஆ.புனவாசல், மீனங்குடி, கடுகுசந்தை சத்திரம், மேலச்செல்வனூா் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 10 நாள்களாக மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தப் பகுதிகளுக்கு சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
இது குறித்து கடலாடியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
தற்போது மழை, பனிக் காலம் என்பதால் கிராமங்களில் மா்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். காய்ச்சலுடன் கூடிய சளி,இருமல், கண்எரிச்சல், தலைவலி, உடல்சோா்வு, தொடை, கால் பகுதியில் உளைச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கின்றன.
கடலாடி அரசு மருத்துவமனை, சுற்றுவட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகங்களில் தண்ணீா் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுகிறது. மருத்துவா்களின் அறிவுரையைக் கேட்டு, மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும்போது, சுடு தண்ணீா், சுகாதாரமான தண்ணீா் கிடைப்பது இல்லை. கழிவறைகளும் சுகாதாரமற்று இருப்பதால் பயன்படுத்த முடியவில்லை. இதனால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறமுடியாமல் வீடுகளுக்கு செல்லும் நிலை இருப்பதால் காய்ச்சல் குறைவதில்லை.
எனவே, கிராமங்களில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் மேற்கொள்ள வேண்டும். கடலாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சுடு தண்ணீா் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.