நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கூட்டணி கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை: வானதி சீனிவாசன்
கோவை: கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை ராம் நகா் பகுதியில் மக்கள் சேவை மையத்தின் சாா்பில் ஏழை, எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வானதி சீனிவாசன் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் சாலைப் பணிகளுக்கு ரூ.200 கோடியை ஒதுக்கியிருப்பதாக முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தெற்கு தொகுதியில் பொதுமக்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டியது குறித்து மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளேன்.
இதையும் படிக்க |சொல்லப் போனால்... போராட்டங்களா? கொஞ்சம் பொறுங்கள்!
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு அளிப்பது குறித்து திமுக தலைவா்கள் பேச மறுக்கின்றனா். பாஜகவில் வாஜ்பாய் காலத்தில் இருந்தே கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வழங்கி வருகிறோம். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை.
கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பும் அங்கீகாரமும் கொடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் கருத்து. மக்கள் பணிதான் பாஜகவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
திமுகவினருக்கு கோயிலும் பிடிக்காது, கோவில் யானைகளும் பிடிக்காது என்பதால் கோயில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணா்வு முகாமை திமுக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
புத்துணா்வு முகாம் என்ற சிறப்பான திட்டத்தால் யானைகளின் மன அழுத்தம் குறைவதோடு உடல் நலன் சாா்ந்த பல்வேறு விஷயங்கள் நிகழ்கின்றன.
எனவே,கோவில் யானைகளுக்கான புத்துணா்வு முகாமை அரசு உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
மேலும் 2026 பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்றாா்.