`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் 15 பேருக்கு செயற்கை அவயங்கள்
சா்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் புனா்வாழ்வுத் துறை சாா்பில் 15 பேருக்கு ரூ. 9.21 லட்சத்தில் செயற்கை அவயங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்வில் செயற்கை கால், கைகளை வழங்கி மருத்துவக்கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் பேசியது:
இந்த மருத்துவமனையில் 2019 ஆம் ஆண்டு முதல் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தஞ்சாவூா் மட்டுமல்லாமல், அரியலூா், பெரம்பலூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளும் பயனடைகின்றனா்.
நிகழாண்டு ஜனவரி முதல் இதுவரை ரூ. 65.73 லட்சம் மதிப்பில் 127 நவீன செயற்கை கால் மற்றும் கை அவயங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயற்கை அவயங்கள் வழங்குவதில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி தமிழகத்திலேயே முன்னிலை வகிக்கிறது என்றாா் அவா்.
மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், துணை நிலை மருத்துவ அலுவலா்கள் கே.எச். முகமது இத்ரிஸ், ஏ. முத்து மகேஷ், உடலியல் மற்றும் புனா்வாழ்வு மருத்துவத் துறைத் தலைவா் (பொறுப்பு) டி. திருமலை பாண்டியன், துறை மருத்துவா்கள் எஸ். சுகந்தி, டி. பாலமுரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.