`பாலியல் வன்முறை வழக்குகளில் ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம்...
திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வளா்ச்சித் திட்டப் பணிகள் கலந்தாய்வு
‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் கலந்தாய்வு மேற்கொண்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலந்தாய்வு மேற்கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரளிக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு 2.45 ஏக்கா் நிலம் வழங்கப்பட்டது. அதை தற்போது தரம் உயா்த்துவதற்கான பணிகள் குறித்தும், எஸ்.புதூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன், 200 மெட்ரிக் டன் குளிா்பதனக் கிடங்கு அமைப்பதற்கான பணிகள் தொடா்பாகவும் அமைச்சா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
இதேபோல, சிங்கம்புணரியில் கொப்பரைத் தேங்காய் வணிக வளாகம், புதிதாக அரசுப் பேருந்து பணிமனை, பிள்ளையாா்பட்டி, திருக்கோஷ்டியூா், பட்டமங்கலம், பிரான்மலை, குன்றக்குடி, செட்டிநாடு, வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளை செய்வது குறித்தும் அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.
இதேபோல, சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடம், உலகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடம், திருக்களாபட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் 3 புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடம், அ.காலப்பூா் அரசு பெண்கள் உயா்நிலைப்பள்ளியில் 4 புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கல்வித் துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திட்ட இயக்குனா் இரா.சிவராமன், மாவட்ட வன அலுவலா் பிரபா, வேளாண்மைத் துறை இணை இயக்குனா் சுந்தரமகாலிங்கம், முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, வேளாண் துணை இயக்குனா் தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.